“அண்ணாமலைக்கு எடப்பாடி பதில் சொல்வார்” : ஆர்.பி.உதயக்குமார்

Published On:

| By Kavi

Edappadi will answer Annamalai

மதுரையில் வருகின்ற 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக மதுரை உலகத் தமிழ் சங்கம் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 6)மக்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து அழைப்பு விடுத்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,   “கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிற செய்தி வேதனை அளிக்கிறது. ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியில் நீரின்றி பயிர்கள் வாடி டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய வேதனையை அளித்துக் கொண்டிருக்கிறது. அது வேதனையின் உச்சம்.

வருகிற 17 மற்றும் 18ஆம் தேதி தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மீனவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததினால் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.

கச்சத்தீவு உரிமையை அன்று  பறி கொடுக்காமல் இருந்திருந்தால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இந்த கதி ஏற்பட்டு இருக்காது.

ராமேஸ்வரம் மீனவர்கள் உரிமையை பறி கொடுத்து விட்டு இன்று அவர்களது மாநாட்டில் பங்கு கொள்ளப் போவதினால் என்ன பயன் கிடைக்கப் போகிறது? என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கேட்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை கைவிட்ட திமுக அரசினால் ராமநாதபுரம் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டத்திலிருந்து வளம்மிகு மாவட்டமாக மாற்றுவதற்கு எடப்பாடியாரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை எந்த நிலையில் இன்று வைத்திருக்கிறீர்கள்?

ராமநாதபுரம் மக்களுக்கு பலன் தரக்கூடிய இந்த திட்டத்தை குழிதோண்டி புதைத்து விட்டு இன்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு அங்கு செல்கிறீர்கள்? எப்படி அந்த மக்கள் உங்களை மதித்து வரவேற்பார்கள்? காவிரியிலும் உரிமை பறி கொடுக்கப்பட்டிருக்கிறது ராமேஸ்வரம் மீனவர்களின் உரிமையும் பறி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலம் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அதற்கு ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.

விளம்பர வெளிச்சத்திலே இந்த அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விழாக்களை நடத்துகிறார்கள் ஆனால் அந்த விழாக்களால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிற அரசை அகற்றுவதற்காக தான், வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி நாங்கள் எழுச்சி மாநாடு நடத்துகின்றோம்.

எடப்பாடி பழனிசாமி அண்ணா திமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற 100 நாட்களில் அவரை வரவேற்கும் விதமாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கையால் இன்று அண்ணா திமுகவில் 2 கோடியே 44 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவை செய்கிற மக்கள் வரவேற்கிற ஒரு பேரியக்கம் அதிமுக” என்றார்.

செல்லூர் ராஜூ கருத்துக்கு பதிலளித்து தரம் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என அண்ணாமலை கூறியுள்ள கருத்துக் குறித்த கேள்விக்கு,

“பொது வெளியில் ஒவ்வொருவரும் ஒரு கருத்துக்களை சொல்வார்கள். கருத்துக்களுக்கு எதிர்வினை ஆற்றுவதற்கும் பதில் அளிப்பதற்கும் தலைமை இருக்கிறது. தலைக்கு மேலே நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது வருகிற 20 ஆம் தேதி நடைபெறுகிற  மாநாட்டிற்கான பல தரப்பு வேலைகள் தலைக்கு மேல் இருக்கிறது. தலைவர்கள் கருத்திற்கு பதில் சொல்வதற்கு தலைவர்கள் இருக்கிறார்கள். எங்களது பொதுச் செயலாளர் இருக்கிறார். ஒருவர் கருத்திற்கு எதிர் கருத்து சொல்வது என்பது அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது.

அரசியல் நாகரீகத்தோடு ஒவ்வொருவரும் கருத்துக்களை சொல்ல வேண்டும். மக்கள் முகம் சுளிக்காமல் கருத்துக்களை சொல்ல வேண்டும்.

டெல்லியில் கூடிய எங்களது கூட்டணி கட்சிக் கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்றன அதில் அண்ணா திமுகவிற்கு கிடைத்த முக்கியத்துவம் உங்களுக்கு தெரியும். அண்ணா திமுகவிற்கு இருக்கிற செல்வாக்கு என்ன? மக்களிடம் இருக்கிற அங்கீகாரம் என்ன? இதனை புரிந்து தெரிந்தவர் தான்பிரதமர் மோடி.

எடப்பாடியாரை அந்த கூட்டத்தில் தன்னருகே அமர வைத்து கண்ணியப்படுத்தினார் பிரதமர் மோடி. ராமேஸ்வரம் நடை பயணம் பொதுக்கூட்டத்திலும் அண்ணா திமுகவை, அவர்கள் கண்ணியப்படுத்தியதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

பாஜகவிற்கு பாதயாத்திரை என தலைக்கு மேல் வேலை இருக்கிறது. எங்களுக்கு மாநாடு என தலைக்கு மேலே வேலை இருக்கிறது. மக்கள் விரோத திமுக அரசை வீட்டிற்கு அனுப்பும் புனித போரிலே ஒவ்வொருவரும் நம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற போது நமக்கு ஆதரவாக வருகிற ஒவ்வொருவரையும் நாம் அரவணைத்து சென்று இந்த குடும்ப அரசை சர்வாதிகார அரசை, வாரிசு அரசை அகற்றி தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் தொட்டிலில் தமிழகத்தை அமர வைக்கின்ற மகத்தான பணி நமக்கு காத்திருக்கிறது” என்றார் ஆர்.பி.உதயக்குமார்.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி அமைப்பதை அகற்றி, பிஜேபி ஆட்சி அமைக்க அண்ணாமலை ஆர்வமாக இருக்கிறார் என்று குறித்தக் கேள்விக்கு,

“இன்று திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறபோது அண்ணா திமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. அண்ணா திமுக ஆளும் கட்சியாக இருந்தபோது திமுக எதிர்க்கட்சியாக இல்லாமல் தேமுதிக எதிர்க்கட்சியாக இருந்த நிலையும் தமிழகத்தில் 2011 ல் இருந்தது. திமுக பலமுறை தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருக்கிறது.

ஆனால் அண்ணா திமுக 2 கோடியே 44 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு தமிழக மக்களிடம் செல்வாக்கு மிக்க பேரியக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சியை உயிரோட்டமாக கொண்டு போக வேண்டும் என்று நினைப்பார்கள். தொண்டர்கள் தூங்கி விடக்கூடாது என்பதற்காக. தொண்டர்கள் திசை மாறிவிடக்கூடாது அவர்களை உயிரோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும் என எல்லா தலைவர்களும் விரும்புவார்கள். அந்த அடிப்படையில் பல திட்டங்களை வகுப்பார்கள். அதை மக்கள் எப்படி வரவேற்பார்கள்? என காலம் தான் பதில் சொல்லும்.

2 கோடியே 44 லட்சம் தொண்டர்களை கொண்ட பேரியக்கமாக அண்ணா திமுக இருப்பதால்தான் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக நாம் இருக்கிறோம்.

தேசிய அளவில் தேர்தல் நடக்கிற போது மீண்டும் மோடியை பாரதப் பிரதமராக ஆக்குவதற்கு அதிமுக பாடுபடும். ஏனென்றால் மோடி அரசால் பாரதம் 9 ஆண்டு காலமாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது .

மாநிலத்தில் தமிழக முதல்வராக  எடப்பாடியைத் தேர்ந்தெடுக்க தமிழக மக்கள் தன் இதயத்தில் அவரை இருத்தி வைத்துள்ளார்கள். கடந்த தேர்தலில் நூல் இழையில்தான் வெற்றி வாய்ப்பை அண்ணா திமுக இழந்தது.

தமிழகத்தில் பிஜேபி கூட்டணியில் பாமக இல்லை, தேசிய அளவில் கூட்டணியில் இருக்கிறோம் என்று அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்த கேள்விக்கு

கூட்டணி குறித்து எங்களது பொதுச் செயலாளர் தான் பதில் அளிக்க வேண்டும். அவர் தான் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை எடுப்பார்” என்றார்.

இராமலிங்கம்

“தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை” – முதல்வர் ஸ்டாலின்

ஓபிஎஸும் இல்லை… சசிகலாவும் இல்லை… :அமமுகவுக்கு புதிய தலைவர்!

ஹாலிவுட் வானில் உயரப் பறக்கும் தென்னிந்திய கலைப்பறவை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel