சட்ட விரோதமாக மணல் கடத்தி வைக்கப்பட்டிருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் காவல்நிலையத்தில் ஆஜராகி தொடர்ந்து 15 நாட்கள் கையெழுத்திட கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூரில் ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளி பதுக்கி வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மார்ச் 31ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவதால் மார்ச் 30 அன்று வேட்புமனு தாக்கல் செய்ததாலும் மார்ச் 31 அன்று மகவீர் ஜெயந்தி விடுமுறை என்பதாலும் நீதிமன்றத்தில் சரணடைய முடியவில்லை.
எனவே இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி ஜெகதீஷ் சந்திரா, நீதிமன்றத்தில் சரணடைவதற்கான அவகாசத்தை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த கால அவகாசம் நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் கரூர் நீதிமன்றத்தில் எம் ஆர் விஜயபாஸ்கர் இன்றைய தினமே ஆஜரானார்.
அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் 15 நாட்கள் கரூர் நகர காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
