மின் மாற்றி கொள்முதலில் அரசுக்கு இழப்பா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

senthil balaji

மின் மாற்றி கொள்முதலில் அரசுக்கு ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்த காலகட்டத்தில், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு (TANGEDCO) சுமார் 45,000 எண்ணிக்கையிலான மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த கொள்முதலுக்கான டெண்டர் நடைமுறையில் ரூ.397 கோடி ஊழல் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஊழல் குற்றச்சாட்டில் அப்போது மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மின்மாற்றி கொள்முதல் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை மேற்கொள்ள தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பில்லை

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (ஏப்ரல் 29) கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,“மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யும் முறை 1987-ஆம் ஆண்டு முதல் எப்படி இருந்ததோ, அதே நடைமுறைதான் தற்போதும் பின்பற்றப்படுகிறது.

ADVERTISEMENT

டெண்டர் கோரும்போது 20 முதல் 30 நிறுவனங்கள் வரை பங்கேற்பார்கள். அதில் L1, L2, L3 கோட் செய்வார்கள். அதில் சில ஒரே தொகையாக இருக்கும்.பொதுவாக மின்சார வாரியத்தில் L1 தொகையை யார் மேட்ச் செய்து கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த டெண்டரைப் பிரித்துக் கொடுப்பார்கள்.

இந்த நடைமுறை ஸ்க்ரூட்டினி கமிட்டி, போர்டு கமிட்டி உள்ளிட்ட மூன்று உயர்மட்டக் குழுக்களின் ஆய்வுக்குப் பிறகே இறுதி செய்யப்படும். இதில் தனிப்பட்ட முறையில் யாரும் முடிவெடுக்க முடியாது. குறிப்பிட்ட அந்த அமைப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தவறு நடந்தது போன்ற பிம்பத்தை உருவாக்கி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்த கொள்முதல் முறைகளை அவர்கள் மறைக்கிறார்கள். அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. வேலுமணி மீது புகார் அளித்ததோடு சரி, அதன்பின் அவர்கள் அதைப் பற்றிப் பேசவில்லை.

நான் அமைச்சராக இருந்த காலத்தில் அரசு நிர்வாகத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை. அரசுக்கு ஒரு நயா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை. சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். நீதிமன்றத்தின் முழுமையான தீர்ப்பு நகல் வந்த பிறகு விரிவாக ஆய்வு செய்யப்படும்” என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share