தலித் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

Published On:

| By Minnambalam Desk

டி.ரவிக்குமார்

கிறித்தவ மதத்துக்கு மாறிய தலித்துகளுக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் பாதுகாப்பு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

2026 மார்ச் 24 அன்று, இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு சிந்தாதா ஆனந்த் எதிர் ஆந்திரப் பிரதேச அரசு ( Chinthada Anand v State of Andhra Pradesh) என்ற வழக்கில் அளித்த தீர்ப்ப்பில் ‘இந்து, சீக்கியம் அல்லது பௌத்த மதங்களைத் தவிர வேறு எந்த மதத்தையும் பின்பற்றும் ஒருவரை அட்டவணை சாதி (SC) உறுப்பினராகக் கருத முடியாது. மேற்கண்ட மதங்களைத் தவிர வேறு எந்த மதத்திற்கு ஒரு அட்டவணை இனத்தவர் மாறினாலும் அவர் உடனடியாகவும் முழுமையாகவும் தனது எஸ்சி (SC ) அந்தஸ்தை இழப்பார்.

ADVERTISEMENT

அரசமைப்புச் சட்டம் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்குகிற பாதுகாப்பையும்; ஒன்றிய அரசு மற்றும் மாநில சட்டங்களில் எஸ்சி அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் அனைத்து நலன்கள், பாதுகாப்புகள், நலத்திட்டங்கள் மற்றும் உரிமைகளிலிருந்தும் அவர் விலக்கப்படுவார்’ என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மதம் மாறிய எஸ்சி வகுப்பினர் குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்துகள் புதியவை அல்ல; பல தசாப்தங்களாக உச்சநீதிமன்றம் வலியுறுத்தி வந்த நிலைப்பாட்டைத்தான் மீண்டும் அது கூறியுள்ளது. சமீபத்திய பல தீர்ப்புகளிலும் இதையே அது தெரிவித்துள்ளது. ஆனால், சிந்தாதா ஆனந்த் வழக்கின் தீர்ப்பில் தெளிவாக அது வெளிப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் மேல்முறையீட்டாளரான சிந்தாதா ஆனந்த், இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறி 10 ஆண்டுகள் பாதிரியாராகப் பணியாற்றியவர். 2021 ஆம் ஆண்டு மேல்சாதி உறுப்பினர்கள் அவரை தாக்கியதாகவும், தனது சாதியைச் சுட்டிக்காட்டி அவமதித்ததாகவும் அவர் புகாரளித்தார். அதனடிப்படையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆனந்திற்கு பாதுகாப்பு அளிக்க மறுத்துவிட்டது.

இந்தத் தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது:

ADVERTISEMENT

சாதி அடிப்படையிலான வன்முறையிலிருந்து ஒருவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை மதத்தின் அடிப்படையில் மறுக்க முடியுமா? உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினால், சாதிய பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமையும், மதத்தைத் தேர்வுசெய்யும் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று முரணானவையாக அமைந்துவிடுகிறதா? பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளாத மதங்களில் நுழைந்துவிட்ட சாதிய பாகுபாடுகளை அகற்றுவது அந்த மதத் தலைவர்களின் பொறுப்பு மட்டுந்தானா?

சிந்தாதா ஆனந்த் தீர்ப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்ட கோட்பாடு என்னவெனில், மதம் மாறியதால் எஸ்சி அந்தஸ்தை இழந்த ஒருவர், தனது “ தாய் மதத்திற்குத்” திரும்பினால் அந்த அந்தஸ்தை மீண்டும் பெறலாம் என்பதாகும். இந்த நிபந்தனை தர்க்க ரீதியாகவும் நீதியின் அடிப்படையிலும் தவறானது மட்டுமல்ல; “அந்நிய” மதங்களுக்கு மாறுபவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதும் ஆகும்.

கைலாஷ் சோன்கர் எதிர் மாயாதேவி (Kailash Sonkar v Maya Devi (1983) என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியபடி, ஒரு எஸ்சி நபர் மதம் மாறினால், அவர் அந்த புதிய மதத்தைப் பின்பற்றும் வரையில், அவருக்குத் தீண்டாமை உள்ளிட்ட சமூகக் குறைபாடுகள் இருக்காது. அதனால் அவரை எஸ்சி என அங்கீகரிக்க முடியாது. ஆனால் பல தலைமுறைகளுக்குப் பிறகு அவரது வாரிசுகளில் எவராவது ஒருவர் “தாய் மதத்திற்குத்” திரும்பினால் அவருக்கு எஸ்சி நிலை மீண்டும் வந்துவிடும்.

இது நீதிபரிபாலனத்தில் ஒரு குறைபாட்டைக் காட்டுகிறது. ஒரு சில மதங்களுக்கு மாறினால் தண்டனை “தாய் மதத்துக்குத்” திரும்பினால் சலுகை என்ற நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறையை நாம் நீதியானதாகக் கருத முடியாது. இது மதச்சார்பின்மையை நீதிமன்றமே மீறுவதாகும்.

உச்சநீதிமன்றம் காட்டுகிற இந்தப் பாகுபாட்டின் அடித்தளம், குடியரசுத் தலைவர் பிறப்பித்த ‘அரசமைப்புச் சட்ட ( எஸ்சி) உத்தரவு1950’ என்ற ஆணையில் உள்ளது. அதில், இந்து மதத்தைப் பின்பற்றாதவரை எஸ்சி எனக் கருத முடியாது எனக் கூறப்பட்டது. பின்னர், 1956 மற்றும் 1990 ஆகிய ஆண்டுகளில் இந்த உத்தரவு திருத்தப்பட்டு, மதம்மாறிய சீக்கியர்கள், பௌத்தர்களை எஸ்சி எனக் கருதலாம் என ஆக்கப்பட்டது.

இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்களைப் பின்பற்றுவோரை ஏன் இதில் விலக்க வேண்டும் என்ற காரணம் அந்த உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும்கூட, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் தொடர்ந்து பின்பற்றி வருகிறது. சிந்தாதா ஆனந்த் வழக்கின் தீர்ப்பிலும் இதைத்தான் உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் கருத்துப்படி, தீண்டாமை, அதை வலியுறுத்தும் சாதி ஆகியவை இந்து மதத்திற்கே உரிய அம்சங்களாகும்; ஏனெனில் அதற்கு சாஸ்திர ஆதாரம் உண்டு. மற்ற மதங்களில் சாதி அமைப்பை ஆதரிப்பதற்கு சாஸ்திர ஆதாரம் இல்லை. ஆனால், இந்த விளக்கத்தில் முக்கியமானதொரு குறைபாடு இருக்கிறது: இந்திய மதங்களாகக் கருதப்பட்டாலும் சீக்கியமும் பௌத்தமும் பிறப்பின் அடிப்படையிலான இந்து மதத்தின் பாகுபாட்டை ஏற்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாகுபாட்டுக்கு எதிராகத் தோன்றியது சீக்கியம். பாகுபாட்டைப் புகுத்திய ஆரிய மதத்தை எதிர்த்துப் போராடியதே பௌத்தம். இந்த இரண்டு மதங்களிலும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு சாஸ்திர ஆதாரம் ஏதுமில்லை. உண்மை இவ்வாறு இருந்தாலுங்கூட அந்த மதங்களைத் தழுவிய எஸ்சி மக்களை இந்து மதத்திலுள்ள எஸ்சிகளுக்கு இணையாக அரசு கருதுகிறது.

சாதி அடிப்படையிலான பாகுபாடுகளும் வன்முறைகளும்

கிறித்தவ மதத்தைத் தழுவிய எஸ்சிகளுக்கு அந்த மதத்தினராலும், இந்து மதத்தவராலும் இழைக்கப்படுவது தெளிவாக உள்ள நிலையில், தலித் முஸ்லிம்களுக்கும் கிறித்தவர்களுக்கும் எஸ்சி சமூகங்களுக்கு கிடைக்கும் பாதுகாப்புகளை மறுப்பது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை மறுப்பதேயாகும். எஸ்சி மக்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை இன்னொரு விதத்திலும் பாரபட்சமாக இருக்கிறது.

பஞ்சாப் அரசு எதிர் தவீந்தர் சிங் மற்றும் பிறர் ( State of Punjab v Davinder Singh and Others (2024)) என்ற வழக்கில், எஸ்சிகளுக்குள் உள்ள உட்சாதிகள் குறித்துப் பேசும்போது, பிராமணிய வேதங்களில் இதற்கான ஆதாரம் இல்லாவிட்டாலும், எஸ்சிகளுக்குள் உட்சாதி அடிப்படையிலான பாகுபாடு உள்ளது என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்களை உச்சநீதிமன்றம் எடுத்துக்காட்டியது. ஆனால், தலித் கிறித்தவர்கள் மற்றும் தலித் முஸ்லிம்களுக்கு சமமான பாதுகாப்பு வழங்கும் விஷயத்தில், அதே உச்சநீதிமன்றம் முரண்பாடான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சாதிய பாகுபாட்டிலிருந்து தப்பிக்கவே தலித்துகள் கிறித்தவ மதத்துக்கு மாறினார்கள் என்றபோதிலும் அந்த மதமாற்றம் “சாதியற்ற தன்மையை” உருவாக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும் தலித் கிறித்தவ மக்களை எஸ்சி அந்தஸ்திலிருந்து விலக்குவது வெளிப்படையான அநீதியாகும். இந்த அநீதியைக் களைவதற்கு ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

இதனிடையில் மாநில அரசு செய்யக்கூடிய கடமையொன்றும் உள்ளது. தலித் கிறித்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதே அது. தற்போது ஓபிசி பட்டியலில் வைக்கப்பட்டுள்ள தலித் கிறித்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதன்மூலம் இட ஒதுக்கீட்டின் பயனை அவர்கள் அனுபவிக்க வகைசெய்யலாம். இது தலித் கிறித்தவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது. இதற்காகத் தனி சட்டம் எதுவும் தேவையில்லை, அரசாணை மூலமே அதைச் செய்ய முடியும். புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு அதைச் செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்:

முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share