சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவி துவக்க உரையை தமிழில் ஆற்றினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி தனது உரையை துவங்கும் போது, “பாரத குடியரசு தலைவர் ஜனாதிபதி முர்மு அவர்களே, தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின் அவர்களே, அமைச்சர் பொன்முடி அவர்களே, துணை வேந்தர் கெளரி அவர்களே, என் இனிய மாணவ செல்வங்களே, இங்கு குடியிருக்கும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் வணக்கம். நமது குடியரசு தலைவரை தமிழக மக்களின் சார்பாக நான் வரவேற்கிறேன். நண்பர்களே இந்த சந்தர்ப்பத்தில் பட்டம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு நான் சில வார்த்தைகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என தமிழில் பேசினார்.
ஆளுநர் தனது உரையை தமிழில் தொடர்ந்ததால் முதல்வர் ஸ்டாலின் அவரை உன்னிப்பாகவும் வியப்பாகவும் கவனித்துக்கொண்டிருந்தார்.
பின்னர் ஆங்கிலத்தில் தனது உரையை தொடர்ந்த ஆளுநர் ரவி, “நமது குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒடுக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்காக பணியாற்றுகிறார். இது அனைவருக்கும் உத்வேகமாக உள்ளது. பட்டங்கள் வாங்கும் மாணவர்களுக்கு இன்று மறக்க முடியாத நாளாக இருக்கும். பட்டம் பெற்றவர்கள் அனைவரும் இன்று புதிய உலகத்தில் அடியெடுத்து வைக்கிறீர்கள். வாய்ப்புகள் உங்களை நோக்கி வரும். நீங்கள் சாதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் சமூகத்தில் நல்ல இடத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா ஏழை பொருளாதார நாடாக இருந்தது. இன்றைக்கு உலக நாடுகளே இந்தியாவை பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முதன்மை மாநிலமாக திகழ்கிறது. உலகின் முதல் மூன்று ஸ்டார்ட் அப் நாடுகளில் இந்தியா உள்ளது. இந்தியா டிஜிட்டல் மயக்கப்பட்ட நாடுகளில் ஒன்று.
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 40 சதவிகிதம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. மாணவர்களாகிய நீங்கள் பெரிய இலக்கை கொள்ளுங்கள். சிறிய எண்ணம் வேண்டாம். உங்களுடைய கனவுகள் சிறியதாக இருந்தால் நீங்களும் சிறியவர்களாகவே இருப்பீர்கள். நான் மாணவர்களுடன் உரையாடும் போது நீங்கள் ஆலமரத்தின் விதைகள் போன்றவர்கள் என்று கூறுவேன். கடினமாக உழையுங்கள். வாழ்க்கை என்பது தொடர்ச்சியான வெற்றிகளால் ஆனது அல்ல. தோல்விகள் வரும். தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் தான் நம்முடைய நாட்டின் எதிர்காலம். இந்தியாவின் வளர்ச்சிக்காக நீங்கள் பணியாற்ற வேண்டும்” என்றார்.
உரையை முடிக்கும் போது மீண்டும் தமிழில் பேசிய ஆளுநர், “நண்பர்களே, உங்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். வாழ்க தமிழ், வாழ்க பாரத், ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்தார்.
செல்வம்
“தமிழகத்தின் கலாச்சாரம் மாணவர்களை சிறந்தவர்களாக்கும்” – திரவுபதி முர்மு
அண்ணாமலை நடைபயணத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவா? – புஸ்ஸி ஆனந்த் விளக்கம்!