திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட விஜய்க்கு சிபிஐ கோரிக்கை

By Pandeeswari Gurusamy

|

Published on 27 Nov 2026, 6:23 PM

சென்னையில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் மு. வீரபாண்டியன் பேசுகையில், “உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஏற்புடையது அல்ல; தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும்; அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்து கேட்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் சட்டத்தின் ஆட்சி முறையை மதிக்கிறோம், நீதிமன்றத்தை மதிக்கிறோம். ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நீண்ட நெடுங்காலமாக மத நல்லிணக்கத்துடன் வாழும் மக்களுக்கு இடறல் தரும் வகையில், அதைச் சிதைத்துத் திசைவழியைத் தூண்டுமானால், அதை நம்மால் ஏற்க இயலாது.

ADVERTISEMENT

ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உள்ளது; மக்கள் அதிகாரத்தின் குறியீடாக முதல்வர் இருக்கிறார்; இங்கே சட்டமன்றம் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் கடந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையோடு அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. இது தமிழ்நாட்டின் அதிகார எல்லைக்குள் தலையிடுவது மட்டுமல்ல, நமது கூட்டிசைவைத் தகர்ப்பது ஆகும். மீண்டும் நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தலாம்; தமிழக அரசின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளது. அது சட்டத்திற்கு உட்பட்டது, முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது. இவை அனைத்தையும் கடந்து, மத்திய ரிசர்வ் போலீசை வைத்து அங்கே தீபம் ஏற்றலாம் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. நாடு முழுவதும் உள்ள முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டிற்கு என்று எந்த மதமும் இல்லை

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா; இதன் அடித்தளம் மதச்சார்பின்மை. நீதிபதிகளுக்கு அவரவர்க்குக் கடவுள்கள் இருக்கலாம், மதங்கள் இருக்கலாம்; ஆனால், நீதிமன்றத்தில் உயர்ந்தவர் அவர் மதச்சார்பற்றவர். இந்தியா என்ற மகத்தான நாட்டிற்குள் தான் நீதிமன்றமும், சட்டமன்றமும், நாடாளுமன்றமும் உள்ளன. ஏராளமான வழிபாடுகளும் திருவிழாக்களும் இருக்கின்றன; ஆனால், இந்த நாட்டிற்கு என்று எந்த மதமும் இல்லை. பல்லாயிரம் மதங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டிற்கு என்று ஒரு மதம் இல்லை; இது மதச்சார்பற்ற நாடு. இதனால் சட்டம் மதம் சாராததாக இருக்க வேண்டும்; நீதிபதிகளும் மதம் சாராமல் இருக்க வேண்டும். நீதிபதி மட்டும் மதம் சார்ந்து இருந்தால் அது ஜனநாயகத்தில் ஏற்க இயலாது.

ADVERTISEMENT

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரண்

நீதிமன்றம் தரும் பாதுகாப்பைக் காட்டிலும், சட்டம் தரும் பாதுகாப்பைக் காட்டிலும், பெரும்பான்மை இந்துக்கள்தான் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரண். வரலாறு நெடுகிலும் பெரும்பான்மையாக இருக்கிற இந்துக்கள்தான் சிறுபான்மை மக்களைப் பாதுகாத்து வருகிறார்கள். இந்தக் கூட்டு தொடர வேண்டும், இந்த நல்லிணக்கம் தொடர வேண்டும், இந்த ஒற்றுமை தொடர வேண்டும். இதைச் சிதைக்கும் எந்தக் கருத்தியலையும் கம்யூனிஸ்டுகள், இடதுசாரிகள் நிராகரிக்கிறோம். எத்தகைய விலை கொடுத்தாவது மத நல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பேண வேண்டும் என்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடதுசாரிகளும் கொள்கைப் பிடிப்போடு இன்று எங்கள் கொடியை உயர்த்திப் பிடிக்கிறோம்.

தமிழ் கூறும் நல்லுலகம் இந்தத் தீர்ப்பைக் கடந்து செல்ல வேண்டும். அங்கு தீபம் ஏற்றி முடிந்துவிட்டது; சில தினங்கள் கடந்துவிட்டன. லட்சக்கணக்கான மக்கள் கரம் கூப்பி அந்தத் தீபத்தை வணங்கிவிட்டார்கள். இந்த நிகழ்வுக்காகத் தமிழக அரசு மேற்கொண்ட ஏற்பாடுகளும் பாதுகாப்பும் பாராட்டுக்கு உரியது. மதுரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள்—இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் கூடி நின்று—எப்படி மலை ஒற்றுமையின் சின்னமாக உள்ளதோ, அதுபோன்று மக்களும் ஒற்றுமையின் வடிவில் வழிபட்டிருக்கிறார்கள். இவை முடிந்த பிறகு, நீதிமன்றம் அவமதிப்பு என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

ADVERTISEMENT

சட்டமன்ற அதிகாரத்தில் தலையிட கூடாது

நில அளவைகள் என்பது வழக்கில் உள்ளது; அங்கேதான் ஒருமுறை ஏற்றலாம் என்பது ஏற்புடையது அல்ல. நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதல்வர் தமிழக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். தமிழக சட்டமன்றத்திற்கு என்று அதிகாரமும் மாண்பும் உள்ளது; அதற்குள் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டமன்றத்தின் மாண்பு மக்கள் அதிகாரத்தின் குறியீடு; மக்கள் அதிகாரம்தான் இங்கே உயர்ந்தது. ராணுவம், காவல்துறை, நீதிமன்றம், சட்டமன்றம் அனைத்தும் மக்களுக்கானது. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள தமிழக அரசாங்கம், மக்கள் ஒற்றுமை ஓங்கும் வகையில் கடந்த கால அரசுகள் அனைத்தும் மத நல்லிணக்கத்தைப் பின்பற்றி வந்துள்ளன. அந்தப் பாதையில்தான் தமிழக அரசும் நேற்று அடி எடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் மிக உறுதியாக இருக்க வேண்டும்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது. சிறு அடிப்படைவாதக் குழுக்கள் பிளவை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது. கோடிக்கணக்கான இந்துக்களும் சிறுபான்மை மக்களும் ஒரு குடும்பத்தில் சொந்த சகோதரர்கள் போல் வாழும் இந்த ஒற்றுமையைச் சிதைத்துவிடக் கூடாது. எந்த விலை கொடுத்தாவது இந்த நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாப்போம்,” என்று பேசினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel