பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில், அவரது சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையா? இல்லையா? என்பதை முழுமையான விசாரணைக்குப் பின்னரே தீர்மானிக்க முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமக்கு எதிரான தேர்தல் மனுவை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி விஜய் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இன்று (நவம்பர் 27) 36 பக்க உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய நீதிபதி முன்வைத்த சட்டரீதியான காரணங்கள் என்ன? உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் விஜய்யின் தேர்தல் வழக்குக்கு எப்படிப் பொருந்துகின்றன?
விஜய் தரப்பின் வாதம் என்ன?
விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், விஜய்யின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.630 கோடி என்றும், அதில் அசையாச் சொத்துகளின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.220 கோடி என்றும் சுட்டிக்காட்டினார்.
இந்த அளவுக்குச் சொத்து விவரங்களை வெளிப்படையாகத் தெரிவித்துள்ள நிலையில், மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துகளின் மதிப்பு மிகக் குறைவானது; பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படும் வேறுபாடுகள் வெறும் பிழைகளே தவிர, சொத்து மறைப்பு அல்ல என வாதிட்டார்.
பெரம்பூர் தொகுதியில் 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார். சொத்துகளின் மதிப்பில் சிறிய அளவில் வேறுபாடு இருந்திருந்தாலும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை மாற்றிச் செலுத்தியிருக்க மாட்டார்கள் என விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்ற தகவல்களால் தாமோ, தமக்குத் தெரிந்த வேறு வாக்காளர்களோ தவறாக வழிநடத்தப்பட்டதாக தினேஷ் குறிப்பிடவில்லை என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தினேஷ் பெரம்பூர் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பதற்கான சான்றைத் தாக்கல் செய்யவில்லை; வாக்காளர் அடையாள அட்டை மட்டும் போதுமானதல்ல என்றும் வாதிடப்பட்டது. வேட்புமனு பரிசீலனையின்போது தினேஷ் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காத நிலையில், அவர் தேர்தல் வழக்கைத் தொடர முடியாது என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.
தினேஷ் தரப்பின் வாதம் என்ன?
தினேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.சி.அசோக்குமார், தவறான தகவல்களைத் தெரிவிப்பதும் வாக்காளர்களிடம் முறையற்ற செல்வாக்கு செலுத்தும் தேர்தல் முறைகேடாகும் என வாதிட்டார்.
குற்ற வழக்கு விவரங்களை மறைப்பதற்கும் சொத்து விவரங்களை மறைப்பதற்கும் இடையே சட்டத்தில் வேறுபாடு காட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் உள்ள 7 முக்கியக் குறைபாடுகள் தேர்தல் மனுவின் 42-வது பத்தியில் பட்டியலிடப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 33, 33A ஆகிய பிரிவுகளும், தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் 4A விதியும் பின்பற்றப்படவில்லை என்பது தினேஷ் தரப்பின் குற்றச்சாட்டு. வேட்புமனு பரிசீலனையின்போது ஆட்சேபனை தெரிவிக்காதது, பின்னர் தேர்தல் வழக்கைத் தொடர்வதற்குத் தடையாகாது என்றும் தினேஷ் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்தல் மனுவை எப்போது கட்டாயமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்?
1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86(1)-வது பிரிவின்படி, கீழ்க்கண்ட 3 சட்டப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்று பின்பற்றப்படவில்லை என்றாலும் தேர்தல் மனுவை உயர்நீதிமன்றம் கட்டாயமாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
- 81-வது பிரிவு: தேர்தல் மனுவைத் தாக்கல் செய்வதற்கான நடைமுறை, தகுதி மற்றும் காலக்கெடு.
- 82-வது பிரிவு: தேர்தல் வழக்கில் இணைக்கப்பட வேண்டிய எதிர்மனுதாரர்கள்.
- 117-வது பிரிவு: வழக்குச் செலவுகளுக்காகச் செலுத்த வேண்டிய பாதுகாப்புத் தொகை (Security Deposit).
ஆனால் தேர்தல் மனுவின் உள்ளடக்கம் தொடர்பான 83-வது பிரிவு, கட்டாயமாக மனுவைத் தள்ளுபடி செய்ய வகை செய்யும் 86-வது பிரிவில் இடம்பெறவில்லை.
எனவே தேர்தல் மனுவிலோ, அதனுடன் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்திலோ உள்ள அனைத்துக் குறைபாடுகளுக்காகவும் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டியதில்லை. சரிசெய்யக்கூடிய குறைபாடுகளையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஜய்யின் நிராகரிப்பு மனு, 81, 82 மற்றும் 117 ஆகிய பிரிவுகள் பின்பற்றப்படாததற்கான காரணங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என நீதிபதி தமது உத்தரவின் 34-வது பத்தியில் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 87-வது பிரிவுடன் இணைத்து, உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் Order VII Rule 11-ன் கீழ் வழக்கைத் தொடர்வதற்கான முகாந்திரம் (Cause of Action) இல்லாத தேர்தல் மனுவை நிராகரிக்க முடியும்.
அடிப்படையான உண்மைகள் – விரிவான விவரங்கள்
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 83(1)(a)-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குக்கு ஆதாரமான அடிப்படை உண்மைகள் தேர்தல் மனுவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
1999-ஆம் ஆண்டு எல்.ஆர்.சிவராமகவுடா எதிர் டி.எம்.சந்திரசேகர் வழக்கில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் 2 வகையான தகவல்களை வேறுபடுத்தியுள்ளது.
Material Facts: தேர்தல் வெற்றியைச் சட்டரீதியாக எதிர்ப்பதற்கு அவசியமான அடிப்படை உண்மைகள்.
Material Particulars: அந்த அடிப்படை உண்மைகளை மேலும் விளக்கும் விரிவான விவரங்கள்.
தேர்தல் மனுவைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னரும் சில சூழ்நிலைகளில் விரிவான விவரங்களைச் சேர்க்க முடியும். ஆனால் விடுபட்ட அடிப்படை உண்மைகளை அவ்வாறு சேர்க்க முடியாது.
எனவே தினேஷின் தேர்தல் மனுவில் வழக்கைத் தொடர்வதற்கான அடிப்படை உண்மைகள் இடம்பெற்றுள்ளனவா என்பதே நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது.
தவளையைத் துண்டிப்பதைப் போல தேர்தல் மனுவைப் பிரிக்கக் கூடாது
1999-ஆம் ஆண்டு டி.ராமச்சந்திரன் எதிர் ஆர்.வி.ஜானகிராமன் வழக்கில், தேர்தல் மனுவை முழுமையாகப் படித்துப் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தல் மனுவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் தேர்தல் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க முடியுமா என்பதையே நீதிமன்றம் ஆராய வேண்டும்.
உயிரியல் ஆய்வுக்கூடத்தில் தவளையைத் துண்டித்துப் பார்ப்பதைப் போல (Like a Frog in the Biology Lab), தேர்தல் மனுவைப் பல பகுதிகளாகப் பிரித்து, சில பகுதிகளில் போதுமான விவரங்கள் இல்லை என்பதற்காக ஒட்டுமொத்த மனுவையும் நிராகரிக்கக் கூடாது.
2023-ஆம் ஆண்டு பீம்ராவ் பஸ்வந்த் ராவ் பாட்டீல் வழக்கிலும் தேர்தல் மனுவின் ஒரு பகுதியை மட்டும் நிராகரிக்க முடியாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
விஜய்க்கு எதிரான 13 சொத்து விவகாரங்கள்
தேர்தல் மனுவை நிராகரிக்கக் கோரும் மனுவைப் பரிசீலிக்கும்போது, தேர்தல் மனுவில் உள்ள குற்றச்சாட்டுகளைத் தற்காலிகமாக உண்மை என எடுத்துக்கொண்டு, வழக்கைத் தொடர்வதற்கான முகாந்திரம் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். இந்தச் சட்ட நடைமுறை Plea in Demurrer எனப்படுகிறது.
விஜய் தமது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த படிவம் 26 பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாகவும், தவறான தகவல்களைத் தெரிவித்ததாகவும் தினேஷ் முன்வைத்துள்ள 13 சொத்து விவகாரங்களை நீதிபதி தமது உத்தரவின் 13-வது பத்தியில் பட்டியலிட்டுள்ளார்.
1. பண்ருட்டி: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பண்ருட்டி கிராமத்தில் ஜனவரி 6-ந் தேதி வாங்கப்பட்ட ரூ.30 கோடி மதிப்பிலான 3 ஏக்கர் நிலம் தொடர்பான விவரங்கள் மறைக்கப்பட்டதாகப் புகார்.
2. கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் வில்பட்டி கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலத்துக்கு உரிமை கோரியதாகப் புகார்.
3. போரூர்: 33,955 சதுர அடி நிலத்தை ரூ.9.13 கோடிக்கு வாங்கியதாக விஜய் தெரிவித்துள்ள நிலையில், பதிவு ஆவணங்களின்படி 20,773 சதுர அடி நிலம் மட்டுமே சுமார் ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும், நிலப்பரப்பு மற்றும் கொள்முதல் மதிப்பு அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளதாகவும் புகார்.
4. நீலாங்கரை: விவசாயம் அல்லாத நிலத்தை ரூ.2.83 கோடிக்கு வாங்கியதாகத் தெரிவித்துள்ள நிலையில், பதிவு ஆவணத்தின்படி அதன் கொள்முதல் மதிப்பு ரூ.2.40 கோடி மட்டுமே எனப் புகார்.
5. பாடி: பிப்ரவரி 12-ந் தேதி ஆலிவ் பவுண்டேஷன் நிறுவனத்துக்கு ரூ.35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்ட சொத்து மற்றும் அதன் மூலம் கிடைத்த தொகை தொடர்பான விவரங்கள் மறைக்கப்பட்டதாகப் புகார்.
6. தியாகராய நகர், சோழிங்கநல்லூர், கொப்பூர்: சொத்துகளின் நிலப்பரப்பு, கட்டடப் பரப்பளவு மற்றும் கட்டுமானச் செலவு தொடர்பான விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகப் புகார்.
7. நீலாங்கரை வீடு: 2005-ஆம் ஆண்டு தந்தையிடமிருந்து செட்டில்மென்ட் பத்திரம் மூலம் பெற்ற சொத்தைப் பரம்பரைச் சொத்தாகக் காட்டியதாகவும், கட்டுமானச் செலவு தொடர்பான விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் புகார்.
8. சாலிகிராமம்: வாங்கப்பட்ட சொத்தைப் பரம்பரைச் சொத்தாகக் காட்டியதாகவும், மற்றொரு சொத்தின் கட்டடப் பரப்பளவு மற்றும் கட்டுமானச் செலவுக்கு ஆதார விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்றும் புகார்.
9. மயிலாப்பூர்: அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ரூ.25 கோடி மதிப்பிலான கட்டுமான ஒப்பந்தம் மறைக்கப்பட்டதாகவும், கட்டுமானச் செலவு அதிகரித்துக் காட்டப்பட்டதாகவும் புகார்.
10. பள்ளிப்பட்டு: சொத்தை மேம்படுத்த ரூ.89 லட்சம் செலவிட்டதாக ஆதாரமின்றித் தெரிவித்துள்ளதாகப் புகார்.
11. சோழிங்கநல்லூர்: 12,000 சதுர அடி காலி நிலத்தின் கொள்முதல் மதிப்பு ரூ.1.80 கோடியாக இருந்த நிலையில், ரூ.2.05 கோடியாகக் காட்டப்பட்டுள்ளதாகப் புகார்.
12. படூர்: ரூ.10.61 கோடிக்கு வாங்கப்பட்ட 2.65 ஏக்கர் காலி நிலத்தின் கொள்முதல் மதிப்பு ரூ.11.51 கோடியாகக் காட்டப்பட்டுள்ளதாகவும், 1,02,108 சதுர அடி கட்டடம் தொடர்பான விவரங்களில் முரண்பாடு இருப்பதாகவும் புகார்.
13. கொரட்டூர்: 18,573 சதுர அடி நிலத்தில் 315 சதுர அடி நிலம் விற்பனை செய்யப்பட்ட விவரங்கள் மறைக்கப்பட்டதாகவும், கட்டுமானச் செலவு தொடர்பான விவரங்களில் முரண்பாடு இருப்பதாகவும் புகார்.
இவை அனைத்தும் தேர்தல் மனுதாரர் தினேஷ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளே தவிர, நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டவை அல்ல.
தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டதை நிரூபிக்க வேண்டுமா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 100(1)(b) மற்றும் 100(1)(d) ஆகிய 2 பிரிவுகளுக்கும் இடையேயான முக்கியமான வேறுபாட்டை நீதிபதி தமது உத்தரவின் 41-வது பத்தியில் விளக்கியுள்ளார்.
100(1)(b)-வது பிரிவு: தேர்தல் முறைகேட்டின் (Corrupt Practice) அடிப்படையில் தேர்தல் வெற்றி எதிர்க்கப்படும்போது, அந்த முறைகேட்டால் தேர்தல் முடிவு பாதிக்கப்பட்டதைத் தனியாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
100(1)(d)-வது பிரிவு: சம்பந்தப்பட்ட விதிமீறலால் தேர்தல் முடிவு முக்கியமான அளவில் பாதிக்கப்பட்டது என்பதைத் தேர்தல் மனுதாரர் நிரூபிக்க வேண்டும்.
விஜய்க்கு எதிரான சொத்து மறைப்புக் குற்றச்சாட்டுகள் தேர்தல் முறைகேடு தொடர்பான 100(1)(b)-வது பிரிவின் கீழும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே தேர்தல் முடிவு எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தை மட்டும் முன்வைத்து தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது.
சொத்து விவரங்களை அறிந்து கொள்வது வாக்காளர்களின் அடிப்படை உரிமை
வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், குற்ற வழக்குகள் தொடர்பான பின்னணி ஆகியவற்றை அறிந்து கொள்வது இந்திய அரசியல் சாசனத்தின் 19(1)(a)-வது பிரிவின்கீழ் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
2018-ஆம் ஆண்டு லோக் பிரஹாரி எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில், குற்ற வழக்கு விவரங்களை மறைப்பதற்குப் பொருந்தும் சட்டக் கோட்பாடு, சொத்து விவரங்களை மறைப்பதற்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2014-ஆம் ஆண்டு கிசான் சங்கர் கதோரே எதிர் அருண் தத்தாத்ரே சாவந்த் வழக்கிலும், முக்கியத்துவம் வாய்ந்த சொத்து விவரங்களை மறைப்பது (Substantial Suppression), வேட்பாளரின் தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கு வழிவகுக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் தேர்தல் வழக்கு – விஜய் வழக்குக்கு நேரடியாகப் பொருந்தும் தீர்ப்பு
2024-ஆம் ஆண்டு கிம்னியோ ஹாவ்கிப் ஹாங்ஷிங் எதிர் கென் ரைகான் (Kimneo Haokip Hangshing Vs. Kenn Raikhan) வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முக்கியமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் சைகுல் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர், விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட சுமார் ரூ.2 கோடி முதலீட்டை மறைத்ததாகவும், வருமானம் ஈட்டும் பணியில் இருந்தபோதும் வருமானம் இல்லை எனப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்ததாகவும் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான முழுமையான விவரங்கள் இடம்பெறவில்லை என்பதால் தேர்தல் மனுவை நிராகரிக்க வேண்டும் என அந்த வழக்கில் வாதிடப்பட்டது.
தற்போது விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் முன்வைத்த வாதங்களைப் போன்றே அந்த வழக்கிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தேர்தல் மனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமும் அந்த முடிவை உறுதிப்படுத்தியது.
ரூ.2 கோடி முதலீட்டை மறைத்தது, வருமான விவரங்களைத் தவறாகத் தெரிவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளே தேர்தல் வழக்கைத் தொடர்ந்து விசாரிப்பதற்குப் போதுமானவை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்தத் தீர்ப்பு விஜய்யின் தேர்தல் வழக்குக்கு நேரடியான சட்ட ஆதாரமாக (Direct Authority) உள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
அனைத்து சொத்து மறைப்புகளுக்காகவும் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியுமா?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 36(2)-வது பிரிவு, வேட்புமனுவைப் பரிசீலிக்கும்போது எந்தெந்த காரணங்களுக்காகத் தேர்தல் நடத்தும் அதிகாரி அதனை நிராகரிக்க முடியும் என்பதை வரையறுக்கிறது.
அதே சட்டத்தின் 36(4)-வது பிரிவின்படி, முக்கியத்துவம் இல்லாத குறைபாடுகளுக்காக வேட்புமனுவை நிராகரிக்கக் கூடாது.
2024-ஆம் ஆண்டு கரிகோ கிரி எதிர் நுனே தாயாங் (Karikho Kri Vs. Nuney Tayang) வழக்கில், இந்தச் சட்ட நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் விளக்கியுள்ளது.
2019-ஆம் ஆண்டு அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தேசு தொகுதியில் சுயேச்சையாக வெற்றி பெற்ற கரிகோ கிரி, தமது குடும்பத்தினரின் 3 வாகனங்கள், நகராட்சி மற்றும் சொத்து வரி நிலுவை விவரங்கள் உள்ளிட்டவற்றை மறைத்ததாகத் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது.
அவரது தேர்தல் வெற்றியை கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் இட்டாநகர் அமர்வு செல்லாது என அறிவித்தது. ஆனால் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை ரத்து செய்தது.
மறைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வாகனங்கள் வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதும், வரி நிலுவை விவரங்கள் பிரமாணப் பத்திரத்தின் மற்றொரு பகுதியில் இடம்பெற்றிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
வேண்டுமென்றே சொத்து விவரங்களை மறைப்பதற்கும், கவனக்குறைவால் ஏற்படும் சிறிய தவறுகளுக்கும் இடையேயான வேறுபாட்டை நீதிமன்றங்கள் கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்தத் தீர்ப்பை விஜய் தரப்பு சுட்டிக்காட்டியது சரியானதுதான் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கரிகோ கிரி வழக்கில் முழுமையான விசாரணைக்குப் பின்னரே அந்தத் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஜய் தரப்பு சுட்டிக்காட்டிய அஜ்மேரா ஷியாம் வழக்கு
2026-ஆம் ஆண்டு அஜ்மேரா ஷியாம் எதிர் கோவா லட்சுமி (Ajmera Shyam Vs. Kova Laxmi) வழக்கில், குற்ற வழக்கு விவரங்களை வெளியிடுவதில் கடுமையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும்போது அந்த மறைப்பின் முக்கியத்துவத்தை ஆராய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்த வழக்கில் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் தமது சொத்து விவரங்களையும் வருமான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். கடந்த கால வருமான வரி தொடர்பான சில விவரங்களை மட்டுமே தெரிவிக்கவில்லை. இதற்காக அவரது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால் இந்தத் தீர்ப்பு, சொத்து மறைப்பு தொடர்பாக கிசான் சங்கர் கதோரே மற்றும் லோக் பிரஹாரி வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வகுத்த சட்டக் கோட்பாடுகளை ரத்து செய்யவில்லை என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
கோவை தேக்கம்பட்டி ஊராட்சித் தேர்தல் வழக்கு
2006-ஆம் ஆண்டு கோவை மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்தி, தமக்கு எதிரான குற்ற வழக்கு விவரங்களை மறைத்ததாகத் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. அவரது தேர்தல் வெற்றியைத் தேர்தல் தீர்ப்பாயம் செல்லாது என அறிவித்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2009-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், தவறான அல்லது முழுமையற்ற தகவல்களைத் தெரிவிப்பது வாக்காளர்களின் சுதந்திரமான தேர்தல் உரிமையில் தலையிடுவதாகும் எனத் தெரிவித்தார்.
இது முறையற்ற செல்வாக்கு செலுத்துவதாகவும் (Undue Influence), தேர்தல் முறைகேடாகவும் (Corrupt Practice) அமையும் எனத் தீர்ப்பளித்தார். 2015-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
குற்ற வழக்கு விவரங்களை மறைப்பது மட்டுமே தேர்தல் முறைகேடாகும் என்றும், சொத்து விவரங்களை மறைப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123(2)-வது பிரிவின்கீழ் வராது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவிக்கவில்லை என நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தமது உத்தரவின் 59-வது பத்தியில் தெரிவித்துள்ளார்.
நீதிபதி குறிப்பிட்ட 5 முக்கிய சொத்து விவகாரங்கள்
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் தமது உத்தரவின் மிக முக்கியமான 60-வது பத்தியில் விஜய்க்கு எதிரான 5 சொத்து மறைப்புக் குற்றச்சாட்டுகளைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் பண்ருட்டி கிராமத்தில் உள்ள சொத்து விவரங்களை மறைத்தது;
சென்னை பாடியில் சொத்தை விற்பனை செய்ததன் மூலம் ரூ.35 கோடி கிடைத்த விவரங்களை மறைத்தது;
கொரட்டூரில் சொத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்த விவரங்களை மறைத்தது;
தியாகராய நகரில் சொத்தின் நிலப்பரப்பு மற்றும் கட்டடப் பரப்பளவு விவரங்களை மறைத்தது;
மயிலாப்பூரில் கட்டுமான ஒப்பந்த விவரங்களை மறைத்தது;
ஆகிய குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையா? இல்லையா? என்பதை முழுமையான விசாரணைக்குப் பின்னரே ஆராய முடியும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தேர்தல் மனுவில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், வழக்கைத் தொடர்வதற்கான முகாந்திரம் இல்லை என முடிவு செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
விஜய்யின் மனு தள்ளுபடி
இதனடிப்படையில், தமக்கு எதிரான தேர்தல் மனுவை நிராகரிக்கக் கோரி விஜய் தாக்கல் செய்த O.A.No.909 of 2026 மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, இருதரப்பினரும் தங்களது வழக்குச் செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் விஜய்யின் பெரம்பூர் தேர்தல் வெற்றிக்கு எதிராக எஸ்.தினேஷ் தாக்கல் செய்த (ELP.No.50 of 2026) தேர்தல் வழக்கில் முழுமையான விசாரணை நடைபெற வழிவகை ஏற்பட்டுள்ளது.








