“மதவெறி அரசியலை முறியடிப்போம்” – திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடதுசாரி கட்சிகள் அழைப்பு!

By Kavi

|

Published on 27 Nov 2026, 9:57 PM

நாளை (நவம்பர் 28) தமிழகம் முழுவதும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி நடத்தப்படும் என்று இடதுசாரி கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் நாளை தீபம் ஏற்றியே ஆக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

இது தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்.எல்) லிபரேசன் உள்ளிட்ட கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “திருப்பரங்குன்றம் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு மத நல்லிணக்கத்திற்கும், அரசியல் சாசன நெறிகளுக்கும், கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும் விரோதமானதாக அமைந்துள்ளது.

பாப்ரி மசூதி பிரச்சினையின் போது நாட்டின் பல பகுதிகளும் பற்றி எரிந்த சூழலிலும், விலை மதிப்பற்ற உயிர்கள் மண்ணில் வீழ்த்தப்பட்ட நிலையிலும் அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்ந்தது என்பதை நினைவு கூர்கிறோம்.

ADVERTISEMENT

இத்தகைய பாரம்பரியத்தை குலைக்க, வெறுப்பு அரசியலை பரப்ப மதவெறி சக்திகள் தொடர்ந்து வகுத்து வரும் திட்டத்தின் ஒரு பகுதியே திருப்பரங்குன்றம் பிரச்சினை.

நவம்பர் 24 கார்த்திகை தீபம் அன்று பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடமான உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்ட போது பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பரவசத்தோடு வழிபட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

மத வெறியர்களின் வெறியூட்டலை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்பது தமிழ் மண்ணின் மகத்தான பாரம்பரியமாகும். பக்தி வேறு, மதவெறி வேறு என்பதை பகுத்துப் பார்க்கும் மதச் சார்பற்ற பண்பு தமிழ்மக்களிடம் குடியிருப்பதன் வெளிப்பாடு அது.

உச்ச நீதிமன்ற உத்தரவு அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் கருத்தில் கொள்ளப்படாததும் நவம்பர் 20 அன்று பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததும், வழக்கின் பிரதான மையப் பொருள் மீது திரும்பச் சரி செய்ய முடியாத வகையில் உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதும் அதிர்ச்சி தருகிறது. இந்த உத்தரவு நீதி முறைமையின் நெறிகளை கேள்விக்குள்ளாக்குகிறது.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழு மேற்பார்வையிடும், மத்தியத் துணைக் காவல் படை மலையை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் என உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிரானது. இவ்வாறு மாநில அரசின் அதிகாரங்களைப் பறிப்பது நீண்டகாலப் பாதிப்புகளை உருவாக்கக் கூடியது ஆகும்.

மலையில் தர்காவில் இருந்து 50 மீட்டர் தொலைவில் எல்லோரும் தீபங்களை ஏற்றலாம் என்று உத்தரவில் கூறப்பட்டு இருப்பது விபரீத விளைவுகளை உருவாக்கக் கூடும். மக்கள் மத்தியில் வெறியூட்டும் செயலில் ஈடுபட்டு வரும் மதவெறி அமைப்புகள் இதனை பயன்படுத்திக் கொள்ளும் ஆபத்து உள்ளது.

மதச் சார்பின்மை மீது அக்கறை கொண்ட இயக்கங்கள் ஒன்று திரண்டு அமைதிக்கான, நல்லிணக்கத்திற்கான வேண்டுகோளை முன்வைத்து மக்களைத் திரட்ட வேண்டிய தருணம் இது. மத நம்பிக்கையை குறுகிய அரசியல் லாபங்களுக்கு பயன்படுத்தும் நடவடிக்கைகளை புறந்தள்ளி ஒருமித்த உணர்வை மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களும் வெளிப்படுத்த வேண்டிய நேரமும் இது.

ஆகவே, தமிழ்நாட்டின் போற்றத்தக்க மாண்புகளை பாதுகாக்க இடதுசாரி கட்சிகள் இணைந்து இந்த வேண்டுகோளை விடுக்கிறோம். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் சார்பில் நவம்பர் 28 அன்று பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் இணையுமாறும், பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel