திருப்பரங்குன்றம் தீர்ப்பு: உச்சநீதிமன்றம் தன் எல்லைகளை முற்றிலும் தாண்டி உள்ளது – பியூசிஎல் குற்றச்சாட்டு

By Pandeeswari Gurusamy

|

Published on 27 Nov 2026, 7:55 PM

திருப்பரங்குன்றம் வழக்கில் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தனது எல்லைகளை முற்றிலும் தாண்டி விட்டதாக மக்கள் சிவில் உரிமைக் கழகம் குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து பியூசிஎல் மாநிலத்தலைவர் ச.பாலமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய சர்வே கல்லின் மீது, நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்றும் அதற்காக மத்திய ரிசர்வ் காவல் படை பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவிலிருந்து எல்லா திசைகளிலும் குறைந்தது 50 மீட்டர் தொலைவில், பக்தர்கள் அனைவரும் தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து, இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை அமைத்து தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது வேதனையானது. மத நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் அவசரகதியில் இந்த ஆணையை வழங்கி உள்ளது.

ADVERTISEMENT

சட்டம் ஒழுங்கு, மாநில அரசின் உரிமைகள் சார்ந்த பிரச்சனை. மக்களால் தேர்வு செய்யப் பட்ட அரசுக்கு கொள்கை சார்ந்த முடிவு எடுக்கும் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையீடு செய்துள்ளது வருத்தமளிக்கும் விஷயம். ஆன்மீகப்படி, கார்த்திகை தீபம் இல்லாத நாள்களில் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லாத நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றம், புதிதாக ஒரு சடங்கை தனது உத்தரவின் மூலம் உருவாக்குகிறது. இது தேவையற்ற சிரமங்களை அரசுக்கும் பொதுமக்களுக்கும் எதிர்காலத்தில் உருவாக்கும். நீதிமன்றத்தின் மீதான நடுநிலை சார்ந்த நம்பிக்கை பாதிக்கப்படும்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற உத்தரவு, சட்டம் மற்றும் நீதியின் அடிப்படையில் இருந்திருக்கவேண்டும். மேலும் அரசமைப்பு முகப்புரையின் எல்லோருக்குமான நம்பிக்கைகளை உறுதி செய்யும் வகையில் நிதானத்துடன் இருந்திருக்கலாம். உச்சநீதிமன்றம் தன் உத்தரவின் வழி, சமூக நல்லிணக்கம் பாதிக்க வழிவகுத்துள்ளதோ என்ற ஐயம் எழுகிறது.

மக்கள் சிவில் உரிமைக் கழகம், இந்த உச்சநீதிமன்ற ஆணை மக்களின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கைகள் சார்ந்து இல்லை என கருதுகிறது. இது தவிர்க்க பட்டிருக்க வேண்டும் எனவும், இது தவறான முன்னுதாரணமாக அமையும் எனவும் சமூகத்தில் இதன் பாதிப்பு கூடுதலாக இருக்குமெனவும் எனக் கருதுகிறது. அதிகார பகிர்வு கோட்பாடு அடிப்படையில் உச்சநீதிமன்றம் ஒரு எல்லைக்குள் நின்றிருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் அதன் எல்லைகளை முற்றிலும் தாண்டி உள்ளது.

ADVERTISEMENT

தமிழ் நாடு அரசு, இந்தத் தீர்ப்பு மாநில உரிமைகள், மற்றும் நிர்வாக அமைப்புகளின் செயல்பாடுகளில் மீதான அத்துமீறல் என்ற அடிப்படையில் எதிர்க்க வேண்டும். சபரிமலை வழக்கைப் போன்று, இந்த விவகாரத்தில் அரசமைப்பு அவையத்திற்கு இந்த வழக்கைக் கொண்டு செல்ல சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பியூசிஎல் கோருகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel