விஜய் அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடி.. நாளை தீபம் ஏற்ற உத்தரவு! அறங்காவலர் குழு சஸ்பெண்ட்.. முன்னாள் நீதிபதிகள் வசம் கோவில் நிர்வாகம்.. பாதுகாப்புக்கு சிஆர்பிஎப்- தர்காவை சுற்றி வேலி- உச்சநீதிமன்றம் அதிரடி!

By Mathi

|

Published on 27 Nov 2026, 3:15 PM

Supreme Court- Thirupparankundram Case

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் விஜய் அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை சஸ்பெண்ட் செய்த உச்சநீதிமன்றம், கோயில் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரை நியமித்ததுடன், பாதுகாப்புப் பொறுப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் (CRPF) ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்தின் சுடரிலிருந்து திருப்பரங்குன்றம் சர்வே கல் தூணில் நாளை (நவம்பர் 28-ந் தேதி) தீபம் ஏற்றவும், அனைத்து பக்தர்களும் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபம் ஏற்றுவதற்கு மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரசியல் தலைமையின் கட்டளைகளின்படி அரசு அதிகாரிகள் செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது எனக் கடுமையாகச் சாடிய உச்சநீதிமன்றம், தமிழக தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகவும், தொலைபேசி அழைப்பு விவரங்களைத் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலாளர், டிஜிபி, மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி அமர்வு இன்று (நவ.27) பிறப்பித்த உத்தரவு:

எங்களது மனதில் முதலில் தோன்றும் வார்த்தை ‘அந்தோ பரிதாபம்!’ (ALAS!). தற்போதைய சூழ்நிலையில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும். இதற்கான காரணங்களைத் தொடர்ந்து தெரிவிக்கிறோம். இதனை மிகுந்த வேதனையுடனும் மனக்குமுறலுடனும் (Pain and Anguish) தெரிவிக்கிறோம்.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையை இரும்புக்கரம் கொண்டு கையாள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இல்லையெனில் இது அரசியல் சாசனக் குழப்பத்துக்கு (Constitutional Chaos) வழிவகுக்கும்.

சட்டத்தின் ஆட்சியே உயர்வானது

ஜனநாயக சமூகத்தில் சட்டத்தின் ஆட்சி (Rule of Law) என்பதே உயர்வானது. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதி செய்ய இந்திய மக்கள் உறுதிபூண்டிருப்பதை அரசியல் சாசனத்தின் முகவுரை பிரதிபலிக்கிறது.

ADVERTISEMENT

இந்திய அரசியல் சாசனத்தின் 144-வது பிரிவின்படி, இந்திய எல்லைக்குட்பட்ட அனைத்து சிவில் மற்றும் நீதித்துறை அதிகார அமைப்புகளும் உச்சநீதிமன்றத்துக்கு உதவியாகச் செயல்பட வேண்டும். இந்த அரசியல் சாசனக் கடமையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சியையும் தேவையற்ற அனுதாபம் காட்டாமல் உறுதியாகக் கையாள வேண்டும். நீதி எனும் நீரோடையை மாசுபடுத்தும் எந்தவொரு முயற்சியும் சகித்துக்கொள்ளப்படாது என்பதுதான் நாங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி.

உச்சநீதிமன்ற உத்தரவு என்பது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல

உச்சநீதிமன்றமே தனது உத்தரவை மாற்றியமைக்காதவரை, அந்த உத்தரவு என்பது பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அல்ல (An order of this court is not an invitation to negotiation). எனவே உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படும்போது, நாங்கள் ஒதுங்கி இருக்க முடியாது. அரசியல் சாசனத்தின் 144-வது பிரிவு நீதியை நிலைநாட்டுவதற்கு வழிவகுக்கிறது. நீதித்துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உதவுகிறது. நீதிப் பரிபாலனத்தை உறுதி செய்வதற்கு அரசியல் சாசன நீதிமன்றங்களிடம் உள்ள வலிமையான ஆயுதமாக (Powerful Arsenal) நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் உள்ளது.

நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவே உத்தரவு

தற்போதைய வழக்கு நீண்ட, சிக்கலான வரலாற்றைக் கொண்டுள்ளது. 1923-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பு, பிரிவி கவுன்சிலாலும் (Privy Council) உறுதிப்படுத்தப்பட்டது. நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் வகையில்தான் நவம்பர் 20-ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குத் தடை விதித்ததுடன், அதே நேரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றவும் உத்தரவிட்டிருந்தோம். 2023-ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதாவின் (BNSS) 163-வது பிரிவின் கீழ் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தத் தடை உத்தரவை எதிர்த்தும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதைக் காண அனுமதிக்கக் கோரியும் சில பக்தர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

உறுதிமொழியை மீறிய அரசு அதிகாரிகள்

நவம்பர் 20-ந் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அளிக்கப்பட்ட உறுதிமொழியையும் மீறி, மாநில அரசும் அதன் அதிகாரிகளும் தேவஸ்தானத்துடன் கூட்டுச் சேர்ந்து உச்சிப்பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றியுள்ளனர். இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் துணிச்சலாக மீறியிருப்பதை முதற்கட்டமாக வெளிப்படுத்துகிறது (Prima Facie Brazen Disobedience).

மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம்

நிர்வாக அதிகாரிகளின் செயல்பாடுகள் மதுரை மாவட்டத்தில் நிர்வாகக் குழப்பம் (Administrative Chaos) நிலவுவதை முதற்கட்டமாக வெளிப்படுத்துகின்றன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குத் திரித்துப் பொருள் கொடுத்து, அதனை மீறிச் செயல்பட தேவஸ்தான அறங்காவலர் குழு முயன்றுள்ளது. தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதன் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதை வேண்டுமென்றே தடுத்துள்ளது.

அறங்காவலர் குழு தீர்மானத்தைத் தற்காப்பாக பயன்படுத்திய ஆட்சியர்

அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் அறங்காவலர் குழு உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தைத் தமது செயலுக்கான தற்காப்பாகப் பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் முயன்றுள்ளார். ஸ்தானிகர்களின் கருத்துகள் கடுமையாக மறுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே தீபம் ஏற்றப்பட்டு வந்த உச்சிப்பிள்ளையார் கோயிலிலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், இந்த மரபுகள் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் அறங்காவலர் குழு தீர்மானித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என முடிவு செய்த அறங்காவலர்கள்

வேறு வார்த்தைகளில் சொல்வதானால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டை அறங்காவலர்கள் எடுத்துள்ளனர். இது அவர்களது தரப்பில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான விதிமீறல் (Serious Infraction). இதற்கு இதர அதிகாரிகளும் துணைபுரிந்துள்ளனர். அறங்காவலர் குழுவின் தீர்மானமானது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே அப்பட்டமாக மீறியிருப்பதையும் (Wilful and Flagrant Disobedience), சென்னை உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட உறுதிமொழியைத் துணிச்சலாகப் புறக்கணித்திருப்பதையும் வெளிப்படுத்துகிறது.

எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எது?

இந்த மரபுகள் உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும் என அறங்காவலர்கள் தெரிவித்திருப்பதுதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. மரபுகள் தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் இந்த நீதிமன்றம் கேட்டுள்ளது. ஆனால் அறங்காவலர்களின் இந்தக் கூற்று, மரபுகளைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் தவறிவிட்டது என்ற தேவையற்ற உட்பொருளைக் கொண்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அறங்காவலர்கள் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடவில்லை. அவர்களது இந்தக் கூற்று முதற்கட்டமாக உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததையும், அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மானத்தையும் ஒன்றாகப் பார்க்கும்போது, இந்த நீதிமன்றத்தின் உத்தரவு வேண்டுமென்றே அப்பட்டமாக மீறப்பட்டிருப்பது முதற்கட்டமாகத் தெரியவருகிறது (Prima Facie Wilful and Flagrant Disobedience).

மதுரை மாவட்ட ஆட்சியர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கான முகாந்திரம் உள்ளது. நிர்வாக அதிகாரிகள் அரசியல் தலைமையின் கட்டளைகளின்படி செயல்பட்டிருப்பதாகத் தெரிகிறது (Executive Authorities seem to have acted on the dictates of Political Bosses).

தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

எனவே இது தொடர்பான தகவல் பரிமாற்றங்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்பு விவரங்கள் (Communication, Messages, Call Details) ஆகியவற்றைத் தமிழக தலைமைச் செயலாளர் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம். தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை- அதிருப்தி

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளார். தாம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகத் தெரிவித்து சம்பிரதாயமான மன்னிப்பையும் (Formal Apology) கோரியுள்ளார். ஒட்டுமொத்தப் பழியையும் கோயில் நிர்வாகத்தின் மீது சுமத்த முயன்றுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது எங்களுக்கு ஆச்சரியமளிக்கிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு அவருக்கு விரிவான அதிகாரங்கள் உள்ளன. மாவட்ட ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை எங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பான விரிவான அறிக்கையை இன்னும் நாங்கள் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

முதலைக் கண்ணீர் வடிக்கும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை

இந்த அறிக்கை முதற்கட்டமாகப் பார்க்கும்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே உள்ளது (Prima Facie Shedding Crocodile Tears). நவம்பர் 20-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளது என்பதற்கான முதற்கட்ட முகாந்திரம் இருப்பதில் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம்.

தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்

இதன்படி கீழ்க்கண்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

  1. தமிழக தலைமைச் செயலாளர்.
  2. தமிழக டிஜிபி.
  3. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.
  4. மதுரை மாவட்ட ஆட்சியர்.
  5. மதுரை மாநகர காவல் ஆணையர்.
  6. காவல் துணை ஆணையர்.
  7. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.).
  8. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர்.
  9. கோயில் அறங்காவலர் குழுத் தலைவர்.
  10. கோயில் அறங்காவலர்கள்.

இவர்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கக் கூடாது என்பது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்ப உத்தரவிடுகிறோம்.

கோயில் அறங்காவலர் குழு சஸ்பெண்ட்

பொதுவாகக் கோயிலின் பாதுகாப்பு அறநிலையத்துறை ஆணையரின் பொறுப்புக்கு உட்பட்டது. அதிகாரிகள் தங்களது கடமைகளை நிறைவேற்றத் தவறியபோது இந்த நீதிமன்றம் தலையிட்டுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது (Complete Failure of the Dewasthanam). எனவே அறங்காவலர் குழுவை உடனடியாக சஸ்பெண்ட் செய்கிறோம்.

கோயில் நிர்வாகத்துக்கு முன்னாள் நீதிபதிகள் நியமனம்

அறங்காவலர் குழுவிடமிருந்து உடனடியாகக் கோயில் நிர்வாகப் பொறுப்பை ஏற்று நிர்வகிக்க, நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் நிர்வாகிகளாக (Receivers) சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோரை நியமிக்கிறோம்.

தமிழக போலீசாரிடமிருந்து சிஆர்பிஎப் வசம் கோயில் பாதுகாப்பு

உள்ளூர் காவல்துறையினர் தங்களது கடமையை நிறைவேற்றத் தவறியதால், கோயிலின் பாதுகாப்புப் பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) கமாண்டன்ட்டுக்கு உத்தரவிடுகிறோம். பாதுகாப்புப் பொறுப்பைச் சுமுகமாக ஒப்படைப்பதை டிஜிபி, ஐஜி மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவு

உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்தின் சுடரிலிருந்து, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை (நவம்பர் 28-ந் தேதி) தீபம் ஏற்றுமாறு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கோயில் நிர்வாகிகளுக்கு (Receivers) உத்தரவிடுகிறோம்.

(அப்போது, உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு சில நாட்கள் ஆகிவிட்டதாக மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, சர்வே கல் தூணில் தீபம் ஏற்றுவதற்கு மாற்று ஏற்பாடுகளையும் மேற்கொள்ளலாம் என நீதிபதி அரவிந்த் குமார் தெரிவித்தார்.)

அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி

மலை உச்சியில் உள்ள தர்காவைச் சுற்றி அனைத்துத் திசைகளிலும் குறைந்தபட்சம் 50 மீட்டர் இடைவெளியைப் பேணி, கார்த்திகை மாதத்தில் வழக்கமாக ஏற்றப்படும் தீபத்தை ஏற்ற அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கிறோம். தர்காவை சுற்றி வேலி அமைக்க வேண்டும்.

தர்காவுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு

தர்காவைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) மேற்கொள்ள வேண்டும். தர்கா மற்றும் கோவில் நிலத்தை பிரிக்கும் வகையில் வேலி அமைக்க வேண்டும்.

நவம்பர் 20-ந் தேதி பாதுகாப்பு நிபந்தனைகள் தொடரும்

நவம்பர் 20-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு நிபந்தனைகள் தொடர்ந்து அமலில் இருக்கும். அந்த நிபந்தனைகள் அனைத்தும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதிகாரிகளின் அப்பட்டமான உத்தரவு மீறல்

இதற்கு மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என மூத்த வழக்கறிஞர் அகமதி கேட்டுக்கொண்டார். அதற்கு, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை அப்பட்டமாக மீறியிருப்பதால்தான் மேலும் நடவடிக்கை எடுக்கிறோம் என நீதிபதி அரவிந்த் குமார் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற உத்தரவு மீதான தடை நீக்கம்

திருப்பரங்குன்றம் சர்வே கல் தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்குகிறோம். இருப்பினும், தர்காவின் பாதுகாப்பு தொடர்பாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 15-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்ட 13 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel