அவிழ்ந்த கைகள்; ஏவிஎம் சரவணன் என்னும் ஆளுமை

Published On:

| By Minnambalam Desk

AVM Saravanan

ஒன்றைஒன்றுகட்டிப்பிடித்துக்கொண்டிருந்தகைகள்ரெண்டும்
அ… வி.. ழ்… ந்… து…..
வி…. ல… கி…. ன.

பிரபல படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்,சரவணன் மறைந்தார்.

ADVERTISEMENT

முழுப்பெயர் சரவணன் சூரிய மணி. அமைந்த பெயர் ஏ.வி.எம்.சரவணன்.

1945 ஆம் ஆண்டு அவரது தந்தையர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் துவங்கப்பட்ட – இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மெய்யப்பச் செட்டியார் மாபெரும் வெற்றிகள் பெற்று சாதனை படைத்ததன் கம்பீர அடையாளமாக இருந்த – ஏ.வி.எம் நிறுவனத்தை மேலும் பல படிகள் உயர்த்தியவர் சரவணன். எனினும் அப்பாதான் எல்லாம் என்று அப்பா இறந்த பிறகும் நம்பியவர்.

ADVERTISEMENT

1963 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியும் கவுரவமும் பெற்ற நானும் ஒரு பெண் மூலம் தனது தயாரிப்பாளர் பொறுப்பில் சாதனை படைக்க ஆரம்பித்தவர் ஏ.வி.எம் சரவணன் , அதன் பிறகு ஏவிஎம் தொட்ட உயரங்கள் , சாதனைகள் எல்லாம் சரவணனின் உழைப்பு.

நானும் ஒரு பெண் , சம்சாரம் அது மின்சாரம் படங்களுக்காக பல விருதுகள் பெற்றவர் .

ADVERTISEMENT

சம்சாரம் அது மின்சாரம் படத்தை தயாரித்தபோது, சரவணனுக்கு அந்த படம் ஓடும் என்ற நம்பிக்கை இல்ல.. அதை விசுவிடமே சொன்னார்.

ஆனால் அந்தப் படம் பிரமாதமாக ஓடி சிறந்த பொழுது போக்குப் படத்துக்கான தேசிய விருது பெற்ற போது, விருது வாங்க, விசுவின் குடும்பத்தினர் அனைவரையும் விமானத்தில் முதல் வகுப்பு டிக்கட் போட்டு அழைத்துப் போனார். ஆனால் சரவணன் பயணித்தது எக்கனாமிக் க்ளாஸ் !

அதிர்ந்து போன விசுவின் குடும்பத்திடம் , ” நான் இந்தப் படம் ஓடாது என்று நினைத்தேன் . லாபம் சம்பாதித்துக் கொடுத்ததோடு இதோ விருதும் வாங்கித் தந்து விட்டார் விசு. நான் சாதாரண டிக்கெட்டில் பயணித்து அவரையும் அவர் குடும்பத்தையும் உயர் வகுப்பு டிக்கெட்டில் அழைத்துப் போய், அவரை நான் இப்படித்தானே கவுரவப்படுத்த முடியும் ” என்று சொன்னார் ஏவிஎம் சரவணன் . நெகிழ்ந்து கலங்கியது விசுவின் குடும்பம்.

ஒருமுறை கேட்டேன். “எப்படி வந்தது கைகட்டும் பழக்கம்? “
“நம்மள பாக்க நம்மள விட பெரிய ஆளுங்களும் வருவாங்க. சின்ன ஆளுங்களும் வருவாங்க.
பெரிய ஆட்கள் முன்னாடி மரியாதைக் குறைவாக தெரியக்கூடாது. சின்னவங்களுக்கு மமதையா தெரியக்கூடாது.
மத்தபடி கைகட்டிதான் ஆகணும் ன்னு இல்ல “என்றார்.

“நீங்க எழுதின உங்க வாழ்க்கை நூலை விட, உங்கள் தந்தையார் எழுதின அவர் வாழ்க்கை பற்றிய நூலை , அவர் எழுதின விதம் இன்னிக்கும் நவீனமா ஸ்டைலா இருக்கு சார்” என்றேன்.
“உண்மைய சொல்றீங்க சார். சந்தோஷம். அப்புச்சி மாதிரி எங்களால முடியாது சார். எல்லா விஷயத்திலும் அவர் பேரைக் கெடுக்காம இருந்தாலே அது எங்களுக்கு வெற்றிதான்.” என்கிறார்
“உங்கள் தந்தையார் தயாரிப்பாளர் மட்டுமல்ல, சிறந்த இயக்குனர் கூட. நீங்க தயாரிப்பாளரா மட்டும் நின்னுட்டீங்க. ஏன் டைரக்ட் பண்ணல?”
” அது ரொம்ப கஷ்டம் “

சென்னை நகரின் ஷெரிப் ஆக 1986 இல் இருந்தவர் ஏ.வி.எம் சரவணன் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் காலை இறந்திருக்கிறார். அந்த வகையில் அவர் 86ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்திருக்கிறார்.

ஏ.வி.எம் சரவணன் என்றாலே முழுமைதானே

– ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share