திரைப்பட தயாரிப்பாளரும் AVM நிறுவனத்தின் இயக்குநருமான சரவணன் (வயது 86) இன்று டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை வயது மூப்பு காரணமாக காலமானார். ஏவிஎம் சரவணன் மறைவுக்கு திரை உலகத்தினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1945 ஆம் ஆண்டு ஏ.வி.மெய்யப்ப செட்டியாரால் நிறுவப்பட்டது ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மகன் எம். சரவணன் 1940-ம் ஆண்டு பிறந்தார். தந்தையின் ஏவிஎம் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை இளம் வயதிலேயே ஏற்றுக் கொண்டார் சரவணன்.
சரவணன் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பிறகு ஏ.வி.எம். நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டது.
முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ், ஜெயலலிதா ஆகியோர் ஏ.வி.எம். நிறுவனத்துடன் பணிபுரிந்தனர்.

இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர், அகில உலகத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவர், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் பண்பாட்டுக் கழக இயக்குநர், சென்னை மாநகர செரீப் போன்ற பொறுப்புகளை வகித்தவர் ஏ.வி.எம். சரவணன்.
தமிழக அரசின் உயரிய கலைமாமணி விருது, புதுவை அரசின் பண்பின் சிகரம் உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஏ.வி.எம். சரவணனின் மகன் எம்.எஸ். குகன் தற்போது ஏ.வி.எம். நிறுவனத்தின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தார் ஏ.வி.எம். சரவணன். ஏ.வி.எம். சரவணனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று டிசம்பர் 4-ந் தேதி அதிகாலை 86 வயதில் அவர் காலமானார்.
ஏ.வி.எம். சரவணன் மறைவுக்கு திரை உலகத்தினர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவி.எம். நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது.
புதல்வராகவும் – திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள். பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார். அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
