மேகதாது அணை பிரச்சனையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால் உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (ஜூன் 22) திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மேகதாது அணை கட்டக்கூடாது என தமிழக சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த விவகாரத்தில் நமது தரப்பு நியாயங்களை அப்போதைய பிரதமர், மந்திரிகளிடம் எடுத்து கூறி வருகிறோம். கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தமட்டில் அங்கு எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்பதில் தொடர்ந்து பிடிவாதமாகவும் அடாவடியாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். கர்நாடக அரசின் இந்தச் செயல், தமிழ்நாட்டு விவசாயப் பெருங்குடி மக்களுக்கு மிகப்பெரிய பேரபாயமாக முடியக்கூடிய சூழல் உள்ளது.
இந்த விவகாரத்தை நாம் கவனமாகக் கையாளத் தவறினால், இப்பிரச்சினை மீண்டும் மத்திய நீர்வளத் துறையில் உள்ள அதிகாரிகளின் முடிவுக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்படும். இதனால், தமிழ்நாடு ஒரு இக்கட்டான கிடுக்கிப்பிடிக்குள் சிக்கிக்கொள்ளும் நிலை வந்து விடும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
மேலும், இந்த மேகதாது அணை கட்டும் பிரச்சினை என்பது, காவிரி நடுவர் மன்றம் முன்போ அல்லது உச்சநீதிமன்றத்திலோ ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விவகாரங்களுக்கு அப்பாற்பட்டது. இது இன்னும் உச்சநீதிமன்றத்தால் தீர்க்கப்படாத ஒரு புதிய பிரச்சினை (New Dispute) என்பதை நான் இங்கே கவனப்படுத்த விரும்புகிறேன்.
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்தின் (Inter-State River Water Disputes Act) அடிப்படையில், உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்படும் மூன்று நீதிபதிகள் அடங்கிய புதிய நடுவர் மன்றத்தை (Tribunal) நாடுவதுதான் சிறந்தது என்று இந்த வழக்கில் தொடர்ந்து வாதாடி வரும் மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும், அரசின் நதிநீர் வல்லுநர்களும் நமக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், மேகதாது விவகாரம் ஒரு புதிய பிரச்சினை என்பதால், தமிழக அரசு சார்பில் கடந்த மார்ச் 4, 2026 அன்று மேகதாது அணை தொடர்பாகப் புதிய நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு முறைப்படி அனுப்பியுள்ளது. இத்தகைய புதிய நடுவர் மன்றத்தை அமைப்பதால், ஏற்கனவே உச்சநீதிமன்றம் இறுதி செய்துள்ள காவிரி நடுவர் நீதிமன்ற இறுதி தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நடுவர் மன்றம் அமைக்கும் இந்தக் கோரிக்கை முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், அது அடிப்படையில் தமிழக அரசின் முடிவு. இது ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் நலனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மற்றும் காவிரியின் உரிமையைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஆக்கப்பூர்வமான முடிவாகும்.
இப்போது தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், மேகதாது பிரச்சினை என்பது தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால், அரசியல் மாச்சரியங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இந்த நல்ல முடிவைத் தொடர வேண்டும். அதன் அடிப்படையில்தான், கடந்த ஜூன் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் உணர்வுகளை ஒன்றிணைத்து, இந்த நடுவர் மன்றக் கோரிக்கை குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய நடுவர் மன்றம் அமைப்பதால், கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் வராது; அந்தத் தீர்ப்பை எவராலும் மீண்டும் மறுபரிசீலனைக்கு (Re-open) உட்படுத்தவும் முடியாது” என்று தங்கம் தென்னரசு விளக்கமளித்தார்.
