‘எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும், அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்’ என எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் மென்பொருளை ஒருங்கிணைத்து தனது புதிய தயாரிப்புகளில் புகுத்த உள்ளதாக அறிவித்தது.
குறிப்பாக, ஆப்பிள் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவித்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சி.இ.ஓ. எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எலான் மஸ்க் பதிவிட்டுள்ள செய்தியில், “தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன் ஏஐ மூலம் உங்களது (வாடிக்கையாளர்கள்) பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது.
உங்களின் தரவுகளை ஓபன் ஏ.ஐ இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்.
ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை ஓஎஸ் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும்.
ஆப்பிளின் செயல் ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். எனது நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: சிறுநீர் கழிப்பதை ஒத்திப்போடுபவரா நீங்கள்?
கிச்சன் கீர்த்தனா: நட்ஸ் பர்கர்!
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பொன்முடிக்கு ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!