முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு! Top Ten News in Tamil June 12 2024
ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் 135 இடங்களில் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று (ஜூன் 12) பதவி ஏற்கிறார்.
ஒடிசா முதல்வர் பதவி ஏற்பு!
ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிஜு ஜனதா தள கட்சியை தோற்கடித்து பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஒடிசா முதல்வராக பழங்குடியினத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் மோகன் மாஜி நேற்று தேர்வு செய்யப்பட்டார். இன்று அவர் முதல்வராக பதவி ஏற்றுக்கொள்ளும் நிலையில் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சட்டமன்ற அலுவல் ஆய்வு கூட்டம்!
வரும் ஜூன் 20ஆம் தேதி மானிய கோரிக்கைகளுக்காக சட்டமன்றம் கூடுகிறது. இதை முன்னிட்டு சட்டப்பேரவையில் துறைகள் தோறும் மானிய கோரிக்கை விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூடுகிறது.
வயநாடு செல்லும் ராகுல் காந்தி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார். தனக்கு வாக்களித்த மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளார்.
டி20 உலக கோப்பை!
டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 3-வது ஆட்டத்தில் அமெரிக்காவை இன்று எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
காங்கிரஸ் உறுப்பினர் பதவி ஏற்பு!
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தாரகை கத்பர்ட் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவி ஏற்கிறார். பேரவை அலுவலகத்தில் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேட்டூர் அணை திறப்பு இல்லை?
டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஆண்டு தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு காவிரிக்கு நீர் வரத்தை பொறுத்துதான் மேட்டூர் அணை திறக்கப்படும். அதனால் 12-ம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில், இன்று தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
பொறியியல் படிப்பு – கடைசி நாள்!
பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 கால அட்டவணையின்படி, பிஇ., பிடெக் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதைத் தொடர்ந்து, ‘ரேண்டம் நம்பர்’ இணையவழியில் ஒதுக்கீடு செய்யப்படும்.
வானிலை நிலவரம்!
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதுபோன்று அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை!
சென்னையில் 88வது நாளாக எந்த மாற்றமும் இன்றி பெட்ரோல் லிட்டருக்கு 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பொன்முடிக்கு ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
காசியில் பிரியங்கா நின்றிருந்தால் மோடி தோற்றிருப்பார்: ராகுல்
மோடி 3.0 அமைச்சரவையில் நிரம்பி வழியும் வாரிசுகள் : ராகுல் விமர்சனம்!
நீரில் மிதந்த இளைஞர்.. மீட்க சென்ற போலீஸ்.. காத்திருந்த அதிர்ச்சி!