டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… பொன்முடிக்கு ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!
வைஃபை ஆன் செய்ததும் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட அறிவிப்பும், விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக கௌதம சிகாமணி நியமிக்கப்பட்ட அறிவிப்பும், விக்கிரவாண்டி வேட்பாளராக அன்னியூர் சிவா என்ற அறிவிப்பும் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவின் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். அதையடுத்து காலியாக இருந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஜூன் 10ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதையடுத்து ஆளுங்கட்சியான திமுக சார்பில் விக்கிரவாண்டி இடை தேர்தல் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தான் இன்று (ஜூன் 11) காலை திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவாலயத்துக்கு வந்தார்.
அவரை திமுக நாடாளுமன்ற குழு புதிய நிர்வாகிகள் கனிமொழி, டி. ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஸ்டாலின் அறிவாலயத்தில் இருக்கும் போதே விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரான அமைச்சர் மஸ்தானுக்கு பதில் டாக்டர் சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படும் அறிவிப்பும்… விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரான புகழேந்தி காலமானதால் ஏற்பட்ட காலி இடத்துக்கு மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி நியமிக்கப்படும் அறிவிப்பும் வெளியானது.
ஆனால் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது ஸ்டாலின் அறிவாலயத்தில் இருக்கும் வரை வெளியாகவில்லை. அது தொடர்பாக பொன்முடி ஏதோ சொல்லப் போக அவரை கோபத்தோடு பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் புறப்பட்டுவிட்டார்.
விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளராக விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ஜெயச்சந்திரன் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கடந்த ஒரு மாதமாக காய் நகர்த்தி வந்தார் அமைச்சர் பொன்முடி. ’நீ தான் வேட்பாளர் போய் வேலையை பாரு’ என்று ஜெயச்சந்திரனிடம் அவர் உத்திரவாதமே அளித்திருந்தார்.
ஆனால் இன்று அறிவாலயத்தில் இருந்து முதலமைச்சர் வீட்டுக்கு புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுகவின் இடைத்தேர்தல் வேட்பாளர் விவசாய தொழிலாளர் அணி செயலாளரான அன்னியூர் சிவா என்ற அறிவிப்பு வெளியானது.
இதைக் கேட்டதும் பொன்முடிக்கு மகனுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைத்த மகிழ்ச்சியே சற்று குறைந்து போகும் அளவுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
விக்கிரவாண்டி எம்எல்ஏவான புகழேந்தி காலமான பிறகு அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் இடத்திற்கும், எம். எல். ஏ. பதவிக்கும் தனக்கு நெருக்கமானவர்களையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார் பொன்முடி. மாவட்ட பொறுப்பாளர் பதவியை தனது மகன் கௌதம சிகாமணிக்கு கொடுக்க வேண்டும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாய்ப்பை தனது ஆதரவாளரான ஜெயச்சந்திரனுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் பொன்முடியின் சமீபத்திய இரட்டை இலக்குகளாக இருந்தன.
மக்களவைத் தேர்தலுக்காக விழுப்புரத்துக்கு உதயநிதி பிரச்சாரம் செய்ய வந்தபோதே, ’அமைச்சர் பொன்முடிக்கு கௌதம சிகாமணி மட்டும் மகன் அல்ல. நானும் அவருக்கு மகன் போன்றவன் தான். என்னை தூக்கி வளர்த்திருக்கிறார்’ என்று சென்டிமென்டாக பேசினார். மேலும் அந்த கூட்டத்திலேயே வாங்க மாவட்ட செயலாளரே என்றுதான் அவர் கௌதம சிதாமணியை அழைத்தார்.
கௌதம சிகாமணிக்கும் உதயநிதிக்கும் இருக்கக்கூடிய நெருக்கத்தின் அடிப்படையில் அவர்தான் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்படுவார் என்று கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டது.
இதையடுத்து தனது அடுத்த டாஸ்க்கான விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தனது தீவிர ஆதரவாளர் ஜெயச்சந்திரன் நிறுத்தப்பட வேண்டும் என்ற முயற்சியை தீவிரமாக்கினார் பொன்முடி.
இதே நேரம் விவசாய தொழிலாளர் அணி செயலாளரான அன்னியூர் சிவாவை வேட்பாளராக நிறுத்துவதற்கு அமைச்சர் கே. என். நேரு, அமைச்சர் வேலு ஆகியோர் தலைமையிடம் பரிந்துரைத்துள்ளனர். அன்னியூர் சிவா திமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். திமுகவில் மட்டுமல்ல மற்ற கட்சி நிர்வாகிகளிடம் கூட நல்ல உறவும் பெற்றவர். பாமகவிலும் அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு.
இந்த நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பாமக அடர்த்தியாக இருக்கிற நிலையில் சிவா வேட்பாளராக அறிவிக்கப்பட்டால்… பாமகவில் பலர் மறைமுக ஆதரவு தருவார்கள் என்றெல்லாம் முதலமைச்சருக்கு ரிப்போர்ட் சென்றது.
அதேபோல பொன்முடி சிபாரிசு செய்த மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன் சமீபத்தில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்ற ரிப்போர்ட்டும் முதல்வருக்கு சென்றிருக்கிறது. ஏற்கனவே விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏக்களாக இருந்த ராஜாமணி, புகழேந்தி ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமான நிலையில் எல்லா வகையிலும் தகுதியான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று தலைமை கருதியிருக்கிறது. இந்த நிலையில் தான் அன்னியூர் சிவாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அன்னியூர் சிவாவுக்கு விக்கிரவாண்டி சீட் கிடைத்துவிடக் கூடாது என்று கடந்த ஒரு மாதமாக தீவிரமாக லாபி செய்தார் பொன்முடி. ஆனால் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலமாக, ‘யாருக்கு சீட் கிடைக்க கூடாது என்று பொன்முடி வேலை செய்தாரோ… அந்த அன்னியூர் சிவாவுக்கு மாவட்டக் கழக பொறுப்பாளரான தனது மகன் கௌதம சிகாமணி மூலமாக தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வைத்துக் கொண்டுவர வேண்டும்’ என்று ட்விஸ்ட் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதுமட்டுமல்ல… வேட்பாளர் அன்னியூர் சிவாவையும், மாவட்டப் பொறுப்பாளர் கௌதம சிகாமணியையும் அழைத்துக் கொண்டு இன்று மாலை முக்கிய நிர்வாகிகளையும், உதயநிதி, சபரீசன் ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து வாங்கி வந்திருக்கிறார் பொன்முடி.
பொன்முடி மகனுக்குப் பதவி, அதேநேரம் அந்த பதவியின் மூலம் அவர் யாரை எதிர்த்தாரோ அவரை எம்.எல்.ஏ. ஆக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட் தான் இப்போது திமுகவில் பேச்சாக இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
காசியில் பிரியங்கா நின்றிருந்தால் மோடி தோற்றிருப்பார்: ராகுல்
ஒடிசாவின் புதிய முதல்வர் மோகன் மாஜி