தமிழர் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (அக். 30) சாமி தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “அன்னை மீனாட்சியின் அருளால் மதுரை மாநகர மக்களுக்கும், தமிழக மக்களுக்கும், பாரத தேசம் முழுமைக்கும் எல்லா நலங்களும், வளங்களும், மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்தேன். மதுரை நகரம் என்றாலே மீனாட்சிதான். மீனாட்சி அம்மனுக்கு மகத்தான கும்பாபிஷேகத்தை நடத்தியிருக்கிறீர்கள். அவரது அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து, தமிழக அரசின் 5, 6 மாத கால செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், “அமைச்சர் இருக்கிறார். அவரிடம் கேளுங்கள். அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நானோ, ஆளுநரோ பதிலளிப்பது சரியாக இருக்காது. அதற்கு அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் கேளுங்கள். நான் சென்ற பிறகு அமைச்சரிடம் கேளுங்கள்” என்றார்.
தமிழர் பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா?
தொடர்ந்து, தமிழர் ஒருவர் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, “ஒரு தமிழர் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு என்றைக்கும் இருக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கிறது. கர்நாடகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக இருந்திருக்கிறார். குஜராத்தைச் சேர்ந்தவர் பிரதமராக இருக்கிறார். அதுபோல தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒருநாள் பிரதமராக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
இந்தியா முதலாவது வல்லரசாக மாறும்
இந்தியா எப்போது வல்லரசாகும் என்ற கேள்விக்கு, “இந்தியா வல்லரசாவதை உலகத்தின் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. எல்லோருக்கும் வழிகாட்டும் நாடாக, மனித இனத்தையே அரவணைத்துச் செல்லும் நாடாக இந்தியா உருவாகும்.
10, 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வல்லரசாகும் என்று சொன்னால் எந்த அளவுக்கு ஏற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று தெரியாது. ஆனால் இன்றைக்கு இந்தியா வல்லரசாகும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. அந்த நம்பிக்கைதான் இந்தியாவை நான்காவது இடத்துக்கு உயர்த்தியிருக்கிறது. இந்த நான்காவது இடத்திலிருந்து முதலாவது வல்லரசாக நிச்சயமாக மாறுவோம்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கும், “நரேந்திர மோடி ஆட்சியைப் பற்றிச் சொல்வதும் அரசியல்தான். தமிழக ஆட்சியைப் பற்றிச் சொல்வதும் அரசியல்தான்” என்று கூறி அரசியல் கேள்விகளுக்குப் பதிலளிப்பதை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தவிர்த்தார்.









