தமிழகத்தில் இன்று (நவ. 10) ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மழை நிலவரம் என்ன?
தமிழகத்தில் நாளை (நவ. 11) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. நாளைக்கு எந்த மாவட்டத்திற்கும் தனியாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
சென்னையில் மழை பெய்யுமா?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
அந்தமான் கடல் பகுதிகளில் நவ. 12, 13 ஆகிய தேதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.









