திமுக மருத்துவ அணித் தலைவர் பூங்கோதை ஆலடிஅருணா, மருத்துவ அணிச் செயலாளர் என்.எஸ்.கனிமொழி ஆகியோருக்கு மு.க.ஸ்டாலினிடம் இருந்து அழைப்புவருகிறது. எடுத்துப் பேசியவர்கள் கொஞ்சம் பதட்டமாகவே அவர்முன் ஆஜரானார்கள்.
‘‘திமுக-ன்னா டீக்கடை பெஞ்சுலயும், முடிவெட்டும் கடைகளிலும், திண்ணைகளிலும் அரசியல் பேசி வளர்ந்த கட்சி மட்டுமல்ல; மேட்டுக்குடி மற்றும் ஒயிட் காலர் வர்க்கத்திடமும் நாம நெருங்கணும். வருகிற தேர்தலில், நாம் நம்முடைய சோலோ பலத்தைக் காட்டணும்… நம்மால முடியலைன்னா வேற யாரால முடியும்னு நெனச்சு, களத்துல இன்னைக்கே இறங்குங்க. நாளை நமதே!” எதை நினைத்து இப்படிக் கட்டளையிட்டாரோ தெரியவில்லை.
எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. பெரிய கட்சிகளின் ஆதரவு இல்லை. ஆனாலும், மூன்று மாதத்துக்குமுன் இட்ட அவரின் உத்தரவின்படி, ஒயிட் காலர் வர்க்கத்திடம் வேகமாக நெருங்கியுள்ளனர் மருத்துவ அணியினர்.
‘மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என, யாரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் தொடர்புகொண்டு அதில் பெற்ற ஆலோசனைகளில் ஒன்றே கோவையில் நடந்த ‘நமக்கு நாமே திட்டம்’ என்கின்றனர் மருத்துவ அணியினர்.
“மருத்துவர்களின் பிரச்சினை, இன்றைய மருத்துவத் துறைகளில் உள்ள இன்னல்கள் என அனைத்தையும் ஒரு சர்வேபோல எடுத்து ஸ்டாலினிடம் கொடுத்தோம். அதைப் பார்த்துவிட்டு ‘மருத்துவர்கள் நமக்கு நாமே-வா?’ இல்லை ‘மருத்துவ நமக்கு நாமே-வா?’ என்று, நுணுக்கமாகக் கேட்டுவிட்டு, இதில் அனைத்துப் பிரிவு மருத்துவர்களையும் இணையுங்கள்’ என்றார். அதையொட்டி அலோபதி, சித்தா, ஹோமியோ இவையில்லாமல் ஃபிசியோதெரபி, உளவியல் மருத்துவம் என அனைவரையும் அழைத்தோம். அங்கே பேசிய கருத்துகளை குறித்துக்கொண்டார். அதில் ஃபிசியோதெரபி மருத்துவர்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிய, இந்திய ஃபிசியோதெரபி மருத்துவ சங்கத்தினரை நேரில் சென்னைக்கு அழைத்தும் பேசினார்”.
நாம் அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் செந்தில்குமாரிடம் பேசினோம். “கருணாநிதி, 2006ல் சட்டசபையில அறிவித்து, 2009ல் மாநில ஃபிசியோதெரபி கவுன்சில் உருவாக்கினாரு. அதன்பின் வந்த இந்த ஆட்சி அதை, சரியா நடைமுறைப்படுத்தல. கிட்டத்தட்ட, ஒரு லட்சம் ஃபிசியோதெரபி மருத்துவர்கள் இருக்காங்க. ஆனா 190 பேர்தான் அரசு மருத்துவமனையில் நியமிக்கப்பட்டு இருக்காங்க. புதிய பணியிடங்களை நிரப்பணும், கவுன்சிலை நடைமுறைப்படுத்தணும், மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனைதோறும் ஒரு மொபைல் வேன் கொடுத்துடுறாங்க. அதில், அவர்களை ஏற்றிக்கொண்டு வரும்போது ஃபிசியோதெரபி மருத்துவர்களையும் அவர்களுடன் ஒரு மருத்துவராக அனுமதிக்கணும்’ என, முக்கியக் கோரிக்கைகளை வைத்தோம். ‘ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றுகிறோம். அதேசமயம், அதன்பின் மருத்துவத் துறையை மேம்படுத்த இதேபோல் தொடர்ந்து கருத்துகளைக் கேட்டு பெற்றுக்கொள்கிறோம். அதற்காக, தனிக் குழு ஒன்று அமைக்கிற யோசனையும் உண்டு’ என்றார் ஸ்டாலின். எதிர்ப்பார்ப்பில் உள்ளோம்” என்கிறார் நம்பிக்கையோடு.
மருத்துவர்கள் என்றால் அலோபதி மட்டும் இல்லாமல், மற்ற பிரிவு மருத்துவர்களையும் அழைத்துப் பேசியுள்ளார் இதேபோல. ‘பாரம்பரியமா நாங்கள் வழிவழியா, நாட்டு மருத்துவம் பார்த்து வர்றோம். நாங்க எங்கயும் ஊசியோ, மாத்திரையோ கொடுப்பதில்லை. ஆனா, எங்களை போலி மருத்துவர்னு சொல்லி ரொம்பவே கேவலப்படுத்துறாங்க’ என்று, பாரம்பரிய மருத்துவர்கள் தங்கள் குறையைக் கூறியுள்ளனர்.
‘கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் செவிலியர்கள் இருக்காங்க. தனியார் கல்வி நிலையத்தில் படித்தவர்களை அரசு மருத்துவமனை பணியிடங்களில் நிரப்புறது இல்லை’ என, செவிலியர்கள் தரப்பு கூற, ‘உங்க போராட்டம் எல்லாம் டி.வி-யில பார்த்திருக்கேன். அனைத்தும் சரி செய்யப்படும்’ என உத்தரவாதம் கொடுத்துள்ளார் ஸ்டாலின்.
அலோபதி மருத்துவர்கள் குழுவோ, ‘உலக சுகாதார மன்றம் 1000 பேருக்கு 1 மருத்துவர் இருக்கணும்னு சொல்லுது. இந்தியாவிலோ, 1,700 பேருக்கு 1 மருத்துவர் இருக்கார். ஸ்பெசலிஸ்ட்கள் தட்டுப்பாடு இருக்கு. ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் நியமிக்கப்படாமல் இருக்காங்க’ என்று, தங்கள் குறைகளைத் தெரிவித்துள்ளனர்.
இப்படி, அனைத்துப் பிரிவினரையும் தனித்தனியே சந்தித்த ஸ்டாலின், அதன்பின் நான்குமுறை மருத்துவ அணியினரை அழைத்து ஆலோசித்து, சில திட்டங்களை வகுத்துள்ளார்.
“இப்போ உள்ள முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தில் பாதித் தொகைதான் ஒரு நோயாளி பெறமுடிகிறது. ஆனால், நம் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் முழு நிதியும் பெற்றோம். ஆக, நம்முடைய திமுக ஆட்சியில் பொதுமக்கள் மட்டுமல்ல; மருத்துவமும், மருத்துவர்களும் பெற்ற பலன்களைப் பட்டியலிட்டு அதைக் கொண்டு செல்லுங்க. பெருநகர மருத்துவமனைகளை மட்டும் குறிவைக்காமல், கிராமம் கிராமமா செல்லுங்க. ஆரம்ப சுகாதார மையம் ஒன்றைக்கூட விட்டுவைக்காதீங்க. உள்ளூர் மருத்துவ அணிமூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பங்களை நேரில் சந்திக்கச் சொல்லுங்க. ஒருவருக்கு, இருபத்தி அஞ்சு பேர் என ஒதுக்கி, அவர்களைத் தொடர்ந்து கேன்வாஸ் பண்ணச் சொல்லுங்க. ஈ-மெயில், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எதுல வேணாலும் சந்தியுங்க, பேசுங்க. ஆனா, தொடர்ந்து ஃபாலோ பண்ணுங்க. அவர்களிடம் வாக்குக்காக மட்டுமில்லாமல், அதைக்கடந்து ஒரு நல்லுறவைப் பேணுங்க. உயிரைக் காப்பாற்றும் அவர்கள் எப்போதும் மதித்துக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்” என்றவர், தொடர்ந்து “திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட கண்ணொளி திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனைத் திட்டம், சுகாதார சட்டத் திருத்தம், வரும்முன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 ஆம்புலன்சு திட்டம் இவற்றைப் பேசுங்க. மேலும், திமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். இதன்மூலம், மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் தலைமை மருத்துவமனை வரை அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று, உறுதி கொடுங்க” என திட்டங்களைக் கொடுத்துள்ளார்.
இந்த வேகத்தோடு, மார்ச் 29ம் தேதி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடத்தி, ஸ்டாலினுடைய கட்டளைகளை எடுத்துக் கூறியுள்ளனர், மாநில மருத்துவ அணியினர்.மாநிலச் செயலாளர் என்.எஸ்.கனிமொழியிடம் பேசினோம்:“மருத்துவத் துறையை திமுக ஆட்சியைப்போல மேம்படுத்திய ஆட்சி வேறில்லை. கலைஞர், ஸ்டாலின் வகுத்த கட்டளைகளை நிறைவேற்றுவோம்” என்றார்.
‘‘ஆரம்பம் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு… ஆனால், அதுக்குப் பிறகு எதுவும் கண்டுக்கவே இல்லையே!’’ என்ற புலம்பல்கள் டாக்டர்கள் மத்தியில் கேட்க ஆரம்பித்துள்ளன.
-சே.த.இளங்கோவன்









