சுவிசில் 5 ஆண்டுகளில் 20% பனி மாயம்… இந்தியா, நேபாளத்துக்கு ‘அலாரம்’: இமயமலைக்குள் புதைந்திருக்கும் பேராபத்து!

Published On:

| By Mathi

Himalaya Glaciar

சுவிட்சர்லாந்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 சதவிகித பனி காணாமல் போயுள்ளது. பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்து வருவது ஐரோப்பாவை மட்டுமல்ல, இமயமலையை ஒட்டிய இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் மிகப்பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவது ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2026-ல் மட்டும் அந்நாட்டின் பனிப்பாறைகளில் 5.5 சதவிகித பனி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குளிர்காலத்தில் வழக்கத்தைவிட குறைவான பனிப்பொழிவு பதிவான நிலையில், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான வெப்பம் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சில பகுதிகளில் பனிப்பாறைகளின் தடிமன் பல மீட்டர் வரை குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சுவிட்சர்லாந்தின் பனிப்பாறைகள் நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்க முடியாது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் தற்போது இமயமலை பனிப்பாறைகளின் நிலை குறித்த கவலையையும் அதிகரித்துள்ளது. இந்த எச்சரிக்கையின் தீவிரத்தை புரிந்துகொள்ள நேபாளத்தில் நடந்த பேரழிவுகளை திரும்பிப் பார்க்க வேண்டும்.

நேபாளத்தை புரட்டிப்போட்ட பெருவெள்ளம்

2026-ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. மலைப்பகுதியில் ஏற்பட்ட பனி மற்றும் பாறை சரிவு, அதைத்தொடர்ந்து உருவான பெருவெள்ளம் கீழே இருந்த பகுதிகளை கடுமையாக தாக்கியது. இந்த பேரழிவில் 1,400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ADVERTISEMENT

முதலில் இது பனிப்பாறை ஏரி வெடித்ததால் ஏற்பட்ட வெள்ளமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், மலைப்பகுதியில் மிகப்பெரிய அளவில் பனி மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததே வெள்ளத்தின் முக்கிய காரணமாக தெரியவந்தது.

அதாவது இமயமலையில் பனிப்பாறைகள் தொடர்பான ஆபத்து என்பது பனிப்பாறை ஏரி உடைவது மட்டும் அல்ல. வெப்பநிலை மாற்றத்தால் பனி மற்றும் உறைந்த மலைப்பகுதிகளின் நிலைத்தன்மை பாதிக்கப்படுவதும் புதிய ஆபத்தாக உருவெடுத்து வருகிறது.

ஏற்கனவே வெடித்த பனிப்பாறை ஏரி

இதற்கு முன்பே நேபாளம் மற்றொரு வகையான பேராபத்தையும் சந்தித்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் எவரெஸ்ட் பகுதிக்கு அருகே உள்ள தாமே கிராமத்தை திடீர் வெள்ளம் தாக்கியது. சில நிமிடங்களுக்குள் வீடுகள், பள்ளி, மருத்துவ நிலையம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன.

இதற்கான காரணத்தை ஆய்வு செய்தபோது, மேலே இருந்த பனிப்பாறை ஏரிகளில் ஏற்பட்ட தொடர் உடைப்பே வெள்ளத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.

முதலில் ஒரு பனிப்பாறை ஏரி பாதிக்கப்பட்டது. அதிலிருந்து வேகமாக வெளியேறிய தண்ணீர் கீழே இருந்த மற்றொரு ஏரியை தாக்கியது. அதுவும் உடைந்ததால் பெருமளவு தண்ணீர் ஒரே நேரத்தில் மலையிலிருந்து கீழே பாய்ந்தது. இதைத்தான் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் என்கிறார்கள்.

2025-லும் தொடர்ந்த எச்சரிக்கை

2025 ஜூலையிலும் நேபாளத்தின் போதே கோசி பகுதியில் மற்றொரு பெருவெள்ளம் ஏற்பட்டது. நேபாளம் – சீனாவை இணைக்கும் பாலம் உள்ளிட்ட கட்டமைப்புகள் இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பின்னர் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்தபோது, திபெத் பகுதியில் பனிப்பாறையின் மேல் உருவாகியிருந்த ஏரியிலிருந்து திடீரென பெருமளவு தண்ணீர் வெளியேறியது இந்த வெள்ளத்துக்கு காரணமாக இருந்தது தெரியவந்தது.

இமயமலைக்குள் என்ன நடக்கிறது?

இமயமலை பனிப்பாறைகள் உருகும்போது அந்த தண்ணீர் மலைகளுக்கு நடுவே உள்ள பள்ளங்களில் தேங்குகிறது. இதனால் புதிய பனிப்பாறை ஏரிகள் உருவாகின்றன. ஏற்கனவே இருக்கும் ஏரிகள் மேலும் பெரிதாகின்றன.

இவற்றை தடுத்து நிறுத்துவது மனிதர்கள் கட்டிய கான்கிரீட் அணைகள் அல்ல. பல இடங்களில் பாறைகள், மண், பனி போன்றவை இயற்கையாக சேர்ந்த தடுப்புகள்தான். ஏரிக்குள் தொடர்ந்து தண்ணீர் அதிகரித்தால் இந்த தடுப்புகள் பலவீனமாகலாம்.

அதேநேரத்தில் மேலிருந்து பெரிய பனிக்கட்டி அல்லது பாறை ஏரிக்குள் விழுந்தாலும் தண்ணீர் தடுப்பை தாண்டி வெளியேறலாம். தடுப்பு முழுவதுமாக உடைந்தால் மிகப்பெரிய அளவிலான வெள்ளம் சில நிமிடங்களிலேயே மலையிலிருந்து கீழே பாயலாம். அதனுடன் பாறைகள், மண், மரங்கள் அனைத்தும் சேர்ந்து வரும்.

அதன் பாதையில் கிராமம் இருந்தாலும், பாலம் இருந்தாலும், சாலை அல்லது மின் நிலையம் இருந்தாலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. நேபாளத்தின் தாமே உள்ளிட்ட பகுதிகளில் நடந்த சம்பவங்கள் இந்த ஆபத்து வெறும் கணிப்பு அல்ல என்பதை ஏற்கனவே காட்டியுள்ளன.

இந்தியாவில் 130 ஏரிகள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயற்கைக்கோள் படங்களைக் கொண்டு இமயமலை பகுதிகளில் உள்ள பனிப்பாறை ஏரிகளை ஆய்வு செய்துள்ளது.

1984 முதல் 2023 வரையிலான படங்களை ஒப்பிட்டு பார்த்தபோது, 676 பனிப்பாறை ஏரிகள் குறிப்பிடத்தக்க அளவில் விரிவடைந்திருப்பது தெரியவந்தது. இதில் 130 ஏரிகள் இந்தியாவுக்குள் இருக்கின்றன.
சிந்து நதிப்படுகையில் 65, கங்கை நதிப்படுகையில் 7, பிரம்மபுத்திரா நதிப்படுகையில் 58 ஏரிகள் உள்ளன.

இதில் 601 ஏரிகள் இரண்டு மடங்குக்கும் அதிகமாக விரிவடைந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதாவது வேகமாக பெரிதாகும் பனிப்பாறை ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியத்தை இந்த மாற்றம் காட்டுகிறது.

பனியும் குறைகிறது

ஏரிகள் பெரிதாவது ஒரு பக்கம் இருக்க, இமயமலையில் குளிர்காலத்தில் கிடைக்கும் பனியின் அளவும் குறைந்து வருகிறது. 2026-ல் இந்துகுஷ் – இமயமலை பகுதியில் பனி நிலைத்திருக்கும் அளவு நீண்டகால சராசரியைவிட 27.8 சதவிகிதம் குறைந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 4-வது ஆண்டாக இயல்பைவிட குறைவான பனி பதிவாகியுள்ளது.

இது முக்கியமான மாற்றம். ஏனெனில் குளிர்காலத்தில் மலைகளில் சேரும் பனி, வெயில் காலத்தில் மெதுவாக உருகி நதிகளுக்கு தண்ணீர் கொடுக்கிறது.

முதலில் வெள்ளம்… பின்னர் தண்ணீர் பற்றாக்குறை?

பனிப்பாறை உருகுகிறது என்றால் உடனடியாக நதிகளில் தண்ணீர் குறைந்துவிடும் என்று அர்த்தமில்லை.

மாறாக ஆரம்ப காலத்தில் அதிகமாக பனி உருகுவதால் நதிகளில் கூடுதல் தண்ணீர் வரலாம். சில பகுதிகளில் வெள்ள அபாயமும் அதிகரிக்கலாம். ஆனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக பனிப்பாறையின் அளவு குறைந்துகொண்டே சென்றால் நிலைமை மாறும்.

ஒரு கட்டத்தில் உருகுவதற்கான பனியின் அளவே குறையும். அப்போது வறண்ட காலங்களில் நதிகளுக்கு கிடைக்கும் நீரும் பாதிக்கப்படலாம்.

இதனால்தான் சுவிட்சர்லாந்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மாற்றத்தை ஒரு நாட்டின் பிரச்சனையாக மட்டும் பார்க்க முடியாது.

அதே நேரத்தில் இமயமலையிலும் பனிப்பாறைகள் சுருங்குகின்றன. பனிப்பொழிவு குறைகிறது. பனிப்பாறை ஏரிகள் பெரிதாகின்றன. நேபாளம் ஏற்கனவே இதன் பல்வேறு வகையான பேரழிவுகளை சந்தித்திருக்கிறது.

இதனால் மலைகளுக்கு மேலே தெரியும் பனி மட்டும் இப்போது பிரச்சனை அல்ல. அந்த பனிக்கு கீழேயும், மலைகளுக்கு நடுவேயும் தேங்கிக் கொண்டிருக்கும் தண்ணீரும் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட இமயமலை நாடுகளுக்கான மிகப்பெரிய எச்சரிக்கைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share