நம்பிக்கை வாக்கெடுப்பு. எஸ்பி வேலுமணி கோஷ்டிக்கு அதிமுக விடுத்த எச்சரிக்கை என்ன?

By Mathi

|

Published on 12 May 2026, 9:49 PM

EPS Waarns SP Velumani Faction

தமிழக முதல்வர் விஜய் ஆட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்பதுரை எம்.பி. கூறியுள்ளதாவது: அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.

ADVERTISEMENT

சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.

சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.

ADVERTISEMENT

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:

“ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”

ADVERTISEMENT

மேலும், உச்ச நீதிமன்றம் “சட்டமன்றக் கட்சி” மற்றும் “அரசியல் கட்சி” இரண்டும் வேறு எனவும், அரசியலமைப்பு சட்டத்தின் 10 வது அட்டவணை “அரசியல் கட்சியை” தான் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமையான பொதுச் செயலாளர் எடப்பாடியார் நியமித்துள்ள கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவே சட்டபூர்வமானது ஆகும்.

எனவே, அதிமுகவின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக எம்எல்ஏவுக்கும் கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், எம்எல்ஏ பதவி பறிபோகும் என்பதே சட்ட நிலை! இவ்வாறு இன்பதுரை எம்.பி. தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel