விஜய் நியமித்த முதல் அரசு பதவியால் சர்ச்சை.. யார் இந்த ‘அரசவை ஜோதிடர்’ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்?

Published On:

| By Mathi

Vijay Jothidam

தமிழக முதல்வராக பதவியேற்ற விஜய் முதலாவதாக நியமித்துள்ள அரசு பதவி சர்ச்சையாகி இருகிறது.

விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு , முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சசிகாந்த் செந்தில் தமது எக்ஸ் பக்கத்தில், “ஒரு ஜோதிடருக்கு ஏன் சிறப்பு அதிகாரி (OSD) பதவி வழங்கப்படுகிறது? யாராவது விளக்க முடியுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

யார் இந்த ஜோதிடர்?

ஈரோட்டைச் சேர்ந்தவர்தான் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல். இவரது இயற்பெயர் வெற்றிவேல். ராசி, பலன்களைக் கணிக்கக் கூடியவர்.

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ராசி பலன்களை பார்த்து சொன்னவர். ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு கர்நாடகாவில் நடந்த போது தமது தொடர்புகள் மூலம் ஜெயலலிதாவுக்கு உதவியாகவும் இருந்தார்.

அதேநேரத்தில் சசிகலாவுடன் சில பிரச்சனைகள் இருந்ததால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்ட நிலையில் வட இந்தியாவில் சில ஆண்டுகள் தங்கி ஜோதிடப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டுக்கு மீண்டும் ”ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலாக” திரும்பி வந்தார் ஜோதிடர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யை சந்தித்தார். அந்த முதல் சந்திப்பிலேயே, “நீங்கள்தான் 2026-ல் முதல்வராகப் போகிறீர்கள்” என விஜய்யிடம் அழுத்தமாக சொன்னார் இந்த ஜோதிடர் வெற்றிவேல்.

அத்துடன் விஜய்யிடம், ”ஜெயலலிதாவுக்கும் நான் ராசி பலன்களை பார்த்து சொல்லி இருக்கிறேன். ஜெயலலிதாவின் மரணம் இந்த தேதியில்தான் நிகழப் போகிறது என அவரிடமே சொல்லி இருந்தேன். அதன்படியே ஜெயலலிதாவின் மரணமும் நிகழ்ந்தது” எனவும் கூறியிருந்தார்.

இதனால் அடுத்தடுத்து ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் மீது விஜய்க்கு நம்பிக்கையும் வந்தது.

விஜய் தற்போது, நெற்றியில் போட்டு வைத்திருப்பது; அணிகின்ற உடைகள், வீட்டை விட்டு வெளியே செல்லும் நேரம், வீட்டுக்கு வர வேண்டிய நேரம் எல்லாவற்றிலுமே இந்த ஜோதிடரின் ஆதிக்கம்தான்.. கடந்த 3 ஆண்டுகளாக விஜய்க்கு ‘எல்லாமுமாக’ மாறிப் போனவர் இந்த ஜோதிடர்.

இது பற்றி விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது, “விஜய் பொதுவாக அமைதியாக இருப்பார்; யாரையும் அவ்வளவு எளிதாக நம்பி ஏற்கக் கூடியவர் இல்லை. ஆனால் நம்பிக்கை வைத்துவிட்டால் அவர்கள் சொல்வதை அப்படியே அச்சு பிசகாமல் செய்து முடித்துவிடுவார். சினிமாவில் கூட கதைகளை விஜய் ஓகே செய்வது தாமதாகும்.. ஆனால் ஒரு கதையை தேர்வு செய்துவிட்டால் இயக்குநர் என்னவெல்லாம் சொல்கிறாரே அதை முழு மூச்சாக செய்து கொடுத்துவிடுவார்.. இயக்குநரின் பணிகளில் ஒருபோதும் தலையிடமாட்டார்.. அதே பாணியில்தான் ஜோதிடர் வெற்றிவேலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவர் சொல்படியே செயல்பட்டும் வருகிறார்” என்கின்றனர்

விஜய் அர்சியல் கட்சி தொடங்கியது, விஜய்யின் மாநாடுகள் எங்கே நடக்க வேண்டும், எத்தனை மணிக்கு அந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து முடிவுகளும் ஜோதிடர் வெற்றிவேலால் எடுக்கப்பட்டவை.

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த துயரத்தின் போது, விஜய் மிகவும் மனம் கலங்கி போயிருந்தார். அப்போதும் கூட, ‘தலைக்கு வந்தது தலைப்பாகை’யுடன் போய்விட்டது.. கலங்காமல் தொடர்ந்து செயல்படுங்கள் என ‘ஜோதிட’ ரீதியாக அறிவுரை வழங்கியவரும் இந்த வெற்றிவேல்தான்.

தேர்தல் பிரசாரங்கள், தேர்தல் அறிக்கை வெளியீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீட்டிலும் தொடர்ந்து ஜோதிடரின் பங்களிப்பு நீடித்தது.

மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது கூட, “மே 14-ந் தேதிக்குள் நீங்கள் முதல்வராக பதவியேற்றுதான் ஆக வேண்டும்.. அப்படி மே 14-க்குள் பதவியேற்காமல் போனால் மிகவும் கடினம்.. அதற்கு பிறகு அந்த பத்வியே கிடைக்காமல் போயிவிடும்” எனவும் அட்வைஸ் செய்திருந்தாராம் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்.

தற்போது விஜய் முதல்வராகிவிட்ட போதும், ஜோதிடர் வெற்றிவேல் தன்னுடனேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வராக பதவியேற்ற விஜய், நியமித்துள்ள முதலாவது அரசு பதவி. விஜய்யின் முதல் நியமனமே ஒரு ஜோதிடரை அரசு அதிகாரியாக நியமிப்பதா? என்கிற சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அதே நேரத்தில் ”அரசவைக் கவிஞர்” போல ஜோதிடர் ஒருவரை ‘அரசவை ஜோதிடராக” முதல்வர் விஜய் நியமித்துள்ளது ஜோதிடர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share