தமிழக முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு தவெக ஆட்சிக்கு ஆதரவு தரும் விசிக , சிபிஎம் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி: மதச்சார்பற்ற அரசில் இது ஏற்கத்தக்கதல்ல. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதை மறு பரிசீலனை செய்யவேண்டும்
விசிக துணை பொதுச்செயலாளரும் சட்டசபை குழு தலைவருமான வன்னிஅரசு எம்.எல்.ஏ. கூறியுள்ளதாவது:
ஆஸ்தான ஜோதிடர்கள்’ என்பவர்கள் மன்னர்களின் அரசவையில் ஆலோசனை கூறும் ராஜகுருக்களாக வலம்வந்தவர்கள். ஆனால் இன்று மன்னர்களும் இல்லை, மன்னராட்சியும் இல்லை, அவர்களை ஆட்டிப்படைத்த வேதகுப்பைகளும் இல்லை. சனநாயக இந்தியாவின் தந்தையான புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தின் துணையோடு மக்களாட்சி நடைபெறுகிறது.
இன்றைய காலகட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை தலைமையேற்று நடத்தும் முதலமைச்சருக்கு ஆலோசனை கூறும் அரசுப்பதவியில், ‘ஹார்ட் அட்டாக் வந்தால் பதற்றப்படாதீர்கள், மந்திரம் சொல்லுங்கள்’ ’தலைவிதி இருந்தால் தான் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும்’ என்று அறிவுரை சொல்லும் நபரை நியமிப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
‘அறிவியலார்ந்த உளப்பாங்கு, மனிதநேயம், ஆய்ந்து தெளிந்து சீர்திருத்தும் ஆர்வம் ஆகியவற்றை வளர்த்தல்’ ஒவ்வொரு குடிமகனின் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டம் பகுதி 51A (h) வரையறுக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் பரிந்துரைக்கும் கடமையை குடிமக்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டியது தான் அரசின் தலையாய பணி. ’அறிவியல் மனப்பான்மையை’ (Scientific Temper) வளர்த்தெடுக்க வேண்டிய அரசு, முதல்வருக்கே ஆலோசனை சொல்லும் அரசுப் பதவியை அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு கருத்துகளை பரப்புவதையே ’தொழிலாக’ கொண்டிருப்பவருக்கு வழங்கினால், அது மக்களுக்கு சொல்லும் செய்தி என்னவாக இருக்கும்?
மக்களை இருளில் தள்ளும் பிற்போக்கு, மூடநம்பிக்கைகளுக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரிவாக ஆராய்ந்து தமிழ்நாட்டிலும் அத்தகைய சட்டத்தை கொண்டு வருவது தான் மதச்சார்பற்ற அரசின் பணியாக இருக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமான அறிவியலுக்கு புறம்பான இந்த நியமனத்தை தமிழ்நாடு அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்!
சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம்: அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.
அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். “ஜோதிடம் தனை இகழ்” என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!
இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.
