ஜோதிடருக்கு அரசு பதவி.. திருமா தந்த ‘அடேங்கப்பா’ விளக்கம்!

Published On:

| By Mathi

Jothidar VCK Thiruma

தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

சென்னை வேளச்சேரியில் விசிக தலைவர் தொல். திருமாவளவனை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ADVERTISEMENT

அப்போது திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசு பதவியில் நியமிக்கப்பட்டுள்ள ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல், அந்த கட்சியிலேயே ஒரு பொறுப்பிலும் இருக்கிறார் என்று தெரியவருகிறது, அவர் செய்தித்தொடர்பாளர். ஆகவே ஒரு செய்தித்தொடர்பாளருக்கு அந்த வாய்ப்பைத் தந்திருக்கிறார் என்றுதான் நாம் கருதுகிறோம். அவர் கூடுதலாக ஜோதிடமும் பார்க்கக்கூடியவராக இருக்கலாம், ஆனால் கட்சியில் அவர் செய்தித்தொடர்பாளர் என்கிற அடிப்படையில் அந்த பொறுப்பு வழங்கப்பட்டிருக்கலாம் என்றுதான் நான் கருதுகிறேன். ஜோதிடத்தை நம்புவது என்பது வேறு, மதவாத அரசியலில் ஈடுபாடு கொள்வது என்பது வேறு. ஜோதிடத்தை நம்புகிறவர்கள் எல்லாம் மதவெறி அரசியலை, வெறுப்பு அரசியலைப் பேசுவதில்லை.

செய்தியாளர்களின் கேள்விகளும் திருமாவின் பதில்களும்:

ADVERTISEMENT

கேள்வி: நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் மனமுவந்து வாழ்த்தினோம்.

ADVERTISEMENT

கேள்வி: முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் சந்தித்தது குறித்து?

பதில்: அனைத்து கட்சித் தலைவர்களையும், குறிப்பாக முன்னாள் முதல்வர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் ஸ்டாலின் அவர்களையும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து ஒரு புதிய வரலாறு படைத்ததைச் சுட்டிக்காட்டி அவரைப் பாராட்டினோம்.

அதேபோல ஆதரவளித்த அனைத்து தோழமைக் கட்சிகளுக்கும், அதாவது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சார்ந்த தலைவர்களை அவரவர் இல்லங்களில் சென்று சந்தித்து நன்றியைத் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களையும் சந்திக்க வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம், அதை வெளிப்படுத்தினோம். சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார், சந்திக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த அணுகுமுறை தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அணுகுமுறை, அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சி; அதை நாங்கள் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டிப் பாராட்டினோம்.

அதிமுகவில் நடைபெறுகிற உட்கட்சிப் பிரச்சனை குறித்து நான் கருத்துச் சொல்ல இயலாது. இந்த அரசு, அதாவது முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும் என்கிற விழைவு அனைவருக்கும் உள்ளது. அந்த வகையிலே அவர்கள் அந்த முயற்சியை மேற்கொண்டிருக்கலாம், ஆனால் அதில் வேறு எதுவும் கருத்துச் சொல்ல எனக்கு உடன்பாடில்லை.

கேள்வி: முதலமைச்சருடனான உங்கள் சந்திப்பில் வேறு என்ன விஷயங்கள் பகிரப்பட்டன?

பதில்: வேறொன்றுமில்லை, என்னுடைய கடந்த காலத்தைப் பற்றி அவரிடத்திலே பகிர்ந்து கொண்டோம். அதாவது என்னுடைய வாழ்க்கையைப் பற்றி அவர் கேட்டார். இது ஒரு பள்ளிக் கட்டிடம், இதில்தான் நான் 15 ஆண்டுகளுக்கு மேலாகத் தங்கியிருக்கிறேன்; அதைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம், அவ்வளவுதான்.

கேள்வி: முதலமைச்சருக்கு நீங்கள் வழங்கிய பரிசு பற்றி?

பதில்: அவருக்கு அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வழங்கினோம். அந்த முகப்புரையில் சொல்லப்பட்டிருக்கிற கோட்பாட்டை அவர் பின்பற்றும் வகையில்தான், பாஜக அங்கம் வகித்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவைக் கோராமல், தன்னுடைய ஆட்சிக்கு, ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோருகிற போது திமுக அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை அவர் அணுகினார், கடிதம் எழுதினார். அரசமைப்புச் சட்டத்திலே ‘செக்குலரிசம்’ (Secularism) என்பது உயிர் மூச்சுக் கோட்பாடு. அந்த வகையிலே அவருக்கு நாங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை, அதாவது ‘Preamble of the Constitution’ அதை அவருக்கு ஒரு பரிசாக வழங்கியிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலரது ஆதரவு பெருகி வருவதாகக் கூறப்படுகிறதே?

பதில்: அவர்களால் சட்டப்பேரவையிலே கட்சி மாறி வாக்களிக்க முடியுமா என்று தெரியவில்லை. இன்னும் அதிகாரப்பூர்வமான அதிமுக என்பது திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக என்றுதான் கருதுகிறோம். போட்டி அதிமுகவாக அவர்கள் விலகி அல்லது தனிக்குழுவாக இயங்கும் நிலையில் அவர்களுக்கு ‘விப்’ (Whip) கொடுப்பது யார், கொறடா ஆணை பிறப்பிப்பது யார் என்ற கேள்வி எழுகிறது. திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அந்த குழுவில்தான் அதிமுகவுக்கான கொறடா இருக்கிறார். அவர் 47 பேருக்கும் நாளைக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்கிற ஆணையைப் பிறப்பிப்பார். அதற்கு எதிராக இவர்கள் செயல்பட்டால் இவர்களுடைய வாக்குகள் செல்லுமா, இவர்களது பதவி நீடிக்குமா என்கிற கேள்விகள் எல்லாம் எழுகின்றன. பேரவைத் தலைவர் தான் அதை முடிவு செய்வார். எனக்குத் தெரிந்த வரையில் அவர்கள் பெரும்பான்மையாக இந்த கட்சியிலிருந்து ஒரு குழுவாகத் தனித்து இயங்கினாலும் கூட, அவர்களுக்கான அங்கீகாரம் பேரவைத் தலைவரால் அளிக்கப்படுமா என்கிற கேள்வி இருக்கிறது. எனவே அவர்களுடைய வாக்குகள் செல்லுமா செல்லாதா என்று எனக்குத் தெரியவில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

முன்னதாக விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எம்.எல்.ஏ. ஆகியோர் ஜோதிடருக்கு அரசுப் பதவி கொடுத்ததை கடுமையாக விமர்சித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share