தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது முதலே, அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஒழிப்பு, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவது ஒழிப்பு என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. அமைச்சர்கள் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனை கூட்டங்களிலும் பொதுமக்களுக்கான செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் இந்த அறிவிப்புகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், கள நிலவரம்?
தாசில்தார் அலுவலகங்களின் ‘GPay’ லீலைகள்!
பொதுமக்களை மிகக் கொடூரமாகப் பாதிக்கக்கூடிய, லஞ்சம் அதிகமாகப் புழங்கக்கூடிய இடமாக வருவாய்த்துறைதான் இன்றும் நீடிக்கிறது. கிராம நிர்வாக அலுவலகம் (VAO) தொடங்கி பத்திரப் பதிவு அலுவலகம் வரை சர்வ சாதாரணமாக லஞ்சம் வேரோடி நிற்கிறது.
உதாரணமாக, 1995-ம் ஆண்டு இறந்துவிட்ட ஒருவரது வாரிசுச் சான்றிதழ் பெற ஆன்லைனில் அப்ளை செய்தால், தாசில்தார் அலுவலகங்களில் நடக்கும் உரையாடல்கள் இதோ:
”ஒரிஜனல் இல்லையே சார்..?”
”இறந்து இத்தனை வருஷம் ஆச்சு.. ஒரு வருஷத்துக்கு ரூ.1,000 என கணக்குப் போட்டுப் பாருங்க.. அப்படித்தான் எல்லாரும் வாங்குறாங்க.. கொடுக்கிறாங்க..”
“மாவட்ட ஹெட் ஆபீசுக்கு கொடிநாள் வசூல் பண்ணித் தரணும்.. நீங்க ஒரு ரூ.10,000 கொடுத்தா எங்களுக்கு என்ன சார் ரூ.2,000 கிடைக்கும், அவ்வளவுதான்! பணத்தை ஜிபே (GPay) பண்ணிடுங்க.. நான் டெலீட் செஞ்சுக்கிறேன்.”
பணமே கொடுக்கக் கூடாது என ஒருவர் வைராக்கியமாக அலைந்தால், ஓராண்டாகியும் மனுக்கள் சிஎம் செல்லில் இருந்து தாசில்தார் அலுவலகத்திற்கும், அங்கிருந்து விஏஓ அலுவலகத்திற்கும் பந்து போல உருட்டப்படுகிறதே தவிர வேலை நடப்பதில்லை.
மாலை 6 மணி ‘கலெக்ஷன்’ மாஃபியா!
இதற்கு அப்பால் பத்திரப் பதிவுத் துறை பக்கம் போனால், நிலைமை இன்னும் மோசம். பொதுவாக சார் பதிவாளர் அலுவலகங்களில் நேரடியாகப் பணம் வாங்குவதைத் தவிர்த்துவிட்டனர். மாலை 6 மணி ஆகிவிட்டால் டாக்குமெண்ட் ரைட்டர் ஆபீஸ்களில் “இன்னைக்கு எத்தனை பத்திரம்?”, “சார் 12”, “அப்ப 12,000 கொடுத்துவிட்டுருங்க” என கேசுவலாக டீலிங் முடிகிறது.
கடைசியில் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சீல் வைக்கும் கடைநிலை ஊழியர் கூட தேசப்பற்றுடன் “கொடிநாள் வசூல்.. ரூ.200 கொடுங்க” என ரசீது இல்லாமல் கம்பீரமாகப் பிடுங்குகிறார்.
சார் பதிவாளர்கள் ஆட்டம் (Sub-Registrar Offices)!
இவற்றுக்கெல்லாம் உச்சம் வைத்ததுதான் சார் பதிவாளர்களின் ஆட்டம்! கடந்த காலங்களில் சுழற்சி முறையில் பணியில் இருந்தவர்களே, மேல்மட்ட டீலிங் மூலம் “அவர் தரும் கிம்பளத்தை விட பல மடங்கு நாங்களே தருகிறோம்” என பதவிகளைத் தக்கவைத்தனர்.
தற்போதைய தவெக ஆட்சியில் 40 முதல் 60 சார் பதிவாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், “வருவாய் அதிகம் உள்ள” நல்ல ஆபீஸை ஒதுக்க வேண்டும் என்றால், மாவட்ட பதிவாளருக்குக் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது.
இப்படிப் பணம் கொடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு 10 நாட்களுக்கு முன்னர் வந்த ஒரு சார் பதிவாளர், தான் கட்டிய கப்பத்தை எடுக்க பொதுமக்களிடம் தாறுமாறாக வசூலைத் தொடங்கினார். சாமானியர்களிடம் ரூ.10,000 முதல் ரூ.1,00,000 வரை அவர் கேட்க, ஏஜெண்டுகளாக இருந்த டாக்குமெண்ட் ரைட்டர்களே அதிர்ச்சியடைந்து, “இந்தத் தொகையை நீங்களே உரிமையாளர்களிடம் பேசி வாங்கிக் கொள்ளுங்கள்” என எஸ்கேப் ஆகிவிட்டனர். இதனால் அந்த சார் பதிவாளர் ஆபீஸே களேபரமாகி, ஏஜெண்டுகளுக்கும் சார் பதிவாளருக்கும் இடையே அடிதடி மோதலே வெடித்துள்ளது.
பெற்றோர் பிள்ளைகளுக்கு நிலத்தைத் தான செட்டில்மெண்ட் செய்து கொடுக்கவும், குடும்பத்தினர் பாகம் பிரித்துக் கொள்ளவும் கூட சாமானிய மக்கள் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை லஞ்சமாக அழ வேண்டியுள்ளது.
அரசு வெறும் அறிவிப்புகளோடு நிறுத்தாமல், கிராம நிர்வாக அலுவலகம் முதல் சார் பதிவாளர் அலுவலகங்கள் வரை ‘ஊழல் ஒழிப்பு’ ஆயுதத்தைக் கடுமையாக்கித் தூய்மைப்படுத்தினால் மட்டுமே, இந்த ‘டீலிங்கு’களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்! பொதுமக்களின் கண்ணீர் கதறல்களும் முடிவுக்கு வரும்!
