அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என சபாநாகர் ஜே.சி.டி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய நான்கு பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியான தவெகவில் இணைந்தனர்.
இவர்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது தொடர்பாக உச்ச, உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்நிலையில் ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் ஜேசிடிபிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்..? என்பது குறித்தும், 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது..? என்பது குறித்தும் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அந்த 4 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு… அன்னைக்கே சொன்னேன் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது. 7 நாட்கள் அவகாசம் கொடுத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஈபிஎஸ் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21அதிமுக எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என சபாநாயகர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
