வைத்திலிங்கம் வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறையின் திடீர் திருப்பம்!

Published On:

| By Kavi

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான வழக்கை முடித்து வைப்பதாக தாக்கல் செய்த அறிக்கையை திரும்ப பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

2011 முதல் 2016 ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக வைத்திலிங்கம் செயல்பட்டார்.

ADVERTISEMENT

அந்த சமயத்தில், 2013 ஆம் ஆண்டு சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குடும்பத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி கேட்டு சிஎம்டிஏவிடம் விண்ணப்பித்தது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் 27.9 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தது.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த எஃப்ஐஆர்-ஐ அடிப்படையாகக் கொண்டு 2024 அக்டோபர் மாதம் அமலாக்கத் துறை வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.

ADVERTISEMENT

இது தொடர்பான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.

தொடர்ந்து அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் மற்றும் அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கும் நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளது.

இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கை முடித்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு வைத்திலிங்கம் தரப்பில், இந்த வழக்குக்கும் அமலாக்கத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதுபோன்று அறப்போர் இயக்கம் சார்பில், வழக்கை முடித்து வைப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அமலாக்க துறையின் மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து முதலில் ஆய்வு செய்யப்படும் என்று கூறிய நீதிபதி அனைத்து மனுக்களின் மீதான விசாரணையை வரும் ஜூன் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share