“அன்று படுகுழி.. இன்று 2-வது பெரிய பொருளாதாரமா?” – முதல்வர் விஜய்யின் முரண்பாடுகளைப் பட்டியலிட்டு உதயநிதி சாடல்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் நேற்று முதல் முறையாக கலந்து கொண்டு பேசினார். இந்நிலையில் திமுக அரசின் சாதனைகளுக்கு தவெக அரசு முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் போலி பிம்பத்தை (Fake Narratives) கட்டமைத்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.

இந்தியாவிலேயே 2-ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது; இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்; பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம்; மகளிர் சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சி என்றெல்லாம் முதலமைச்சர் பேசியிருக்கிறார்.

ADVERTISEMENT

இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால சோபா மாடல் (Sofa Model) ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும்தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, தான் முன்பு பேசியதற்குத் தானே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக் கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று அமைதியாகத் திரும்பி இருக்கிறார்.

ADVERTISEMENT

மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது இந்த சோபா மாடல் அரசு! பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது சி.எம் சார் உண்மை நிச்சயம் வெல்லும்!

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share