2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படவுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எம்எல்ஏக்களுக்கு தமிழ்நாடு அரசு புத்தாக்க பயிற்சி அளிக்கிறது.
இதுகுறித்து இன்று (ஜூன் 12) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர், ” தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புத்தாக்க பயிற்சி முகாம் நடத்துவது தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது, வழக்கமாக இருக்கிறது.
இந்த முறையும் 17-ஆவது சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வருகின்ற 16/6/2026 செவ்வாய்க்கிழமை மற்றும் 17/6/2026 புதன்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை புத்தாக்க பயிற்சி கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
முதல்வரால் தொடங்கி வைக்கப்பெறும் இந்த புத்தாக்க பயிற்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், ஆற்றல் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினராக செயல்படுவதன் அடையாளம், சட்டமன்ற பேரவை விதிகள், சட்டமன்ற நடைமுறைகள் குறித்தும் பேரவை செயலாளர், சம்பந்தப்பட்ட அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நடைமுறைகள் பற்றி நன்கு அறிந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெரிதும் பயனளிக்கக்கூடிய இந்த இரண்டு நாட்கள் புத்தாக்க பயிற்சியில், 17-ஆவது சட்டமன்ற பேரவையின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்.
அனைத்து கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. அனைவரும் கலந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்” என்றார்.
