தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: சேரன் அணி வெற்றி

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் இன்று (ஜூலை 19 ) நடந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சேரன் தலைமையிலான நம்ம கே. பாக்யராஜ் அணி வெற்றி பெற்றுள்ளது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கமாகும். பழைய நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இச்சங்கத்திற்கான தேர்தல் கடந்த 12-ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே. பாக்யராஜின் திடீர் மறைவைத் தொடர்ந்து இத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் இன்று (ஜூலை 19) தேர்தல் அதிகாரி உமா சங்கர் தலைமையில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இத்தேர்தலில் இயக்குநர் சேரன் தலைமையிலான ‘நம்ம கே. பாக்யராஜ்’ அணிக்கும், தயாரிப்பாளர் வி.சி. குகநாதன் தலைமையிலான ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. சங்கத்தில் மொத்தம் உள்ள 692 உறுப்பினர்களில் 483 பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டிருந்தனர்.

ADVERTISEMENT

மொத்தம் உள்ள 21 பொறுப்புகளுக்கு நடைபெற்ற இந்தத் தேர்தலில், தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 432 வாக்குகள் பதிவாகின. இதில் இயக்குநர் சேரன் 279 வாக்குகளும், இயக்குநர் வி.சி.குகநாதன் 155 வாக்குகளும் பெற்றனர். இதைத்தொடர்ந்து சேரன் வெற்றி பெற்று தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர்களாக சமுத்திரக்கனியும், சினேகனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share