தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல்: வாக்குப் பதிவு மையத்தில் வாக்குவாதம் – நடந்தது என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் ‘நம்ம கே.பாக்யராஜ்’ அணிக்கும் ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ என்ற அணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், வாக்குப் பதிவு மையத்தில் லேசான பரபரப்பு நிலவியது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, இச்சங்கத்திற்கான தேர்தல் கடந்த 12-ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், சங்கத்தின் தலைவராக இருந்த இயக்குநர் கே.பாக்யராஜின் மறைவைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தள்ளி வைக்கப்பட்ட எழுத்தாளர் சங்கத் தேர்தல் இன்று (ஜூலை 19) சென்னை வடபழனியில் உள்ள திரையிசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்று வருகிறது.

இத்தேர்தலில் மொத்தம் உள்ள 21 பொறுப்புகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. சங்கத்தின் மொத்தம் உள்ள 692 உறுப்பினர்களில், 483 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே திரைத்துறையினர் பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இத்தேர்தலில் தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன் தலைமையில் ‘திரைக்கதை மன்னன் பாக்யராஜ்’ என்ற அணியும், இயக்குநர் சேரன் தலைமையில் ‘நம்ம கே.பாக்யராஜ்’ என்ற அணியும் களம் காண்கின்றன. இரண்டு அணிகளுமே மறைந்த பாக்யராஜின் பெயரிலேயே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கு மனோஜ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகரன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு லியாகத் அலிகான், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இரண்டு துணைத்தலைவர் பதவிகளுக்கு யார் கண்ணன், சமுத்திரக்கனி, சினேகன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட 4 பேர் போட்டியிடுகின்றனர். இதுதவிர, நான்கு இணைச்செயலாளர் பதவிகளுக்கு 8 பேரும், 12 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 24 பேரும் போட்டியிடுகிறார்கள்.

ADVERTISEMENT

பரபரப்புக்கான காரணம்

தேர்தல் நடந்து கொண்டிருந்தபோது, சங்கத்தின் 108 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு அணியினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு சலசலப்பு உருவானது.

இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு மையத்திற்குள் வாக்களிக்க வருபவர்களை சேரன் அணியினர் அழைத்துச் செல்வதைப் பார்த்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆர்.கே.செல்வமணி தரப்பிற்கும், இயக்குநர் சேரன் அணியினருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share