மத்திய அரசு 72-வது தேசிய திரைப்பட விருதுகளை நேற்று ஜூலை 18-ந் தேதி அறிவித்தது. சிறந்த பின்னணி பாடகருக்கான விருது, பாடகர் ‘வைக்கம் விஜயலட்சுமி’க்கு (Vaikom Vijayalakshmi) அறிவிக்கப்பட்டிருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- மண்ணிலே ஈரமுண்டு… (ஜெய்பீம்)
- புதிய உலகை.. புதிய உலகை (என்னமோ ஏதோ)
- இதற்குதானே…. ஆசைப்பட்டாய் பாலகுமாரா (ரோமியோ ஜூலியர்)
- யாரு இவ.. யாரு இவ.. (பாகுபலி)
- பத்து எண்றதுக்குள்ள (10 எண்றதுக்குள்ள)
- சொப்பன சுந்தரி நான்தானே.. (வீர சிவாஜி)
- கா..கா..காக்கா முட்டை (காக்கா முட்டை)
- உச்சி மலை காடு… அதை ஒட்டி இருக்கு வீடு (காடு)
- தோரணம் ஆயிரம்… (அறம்)
- என் ஜீவன் (தெறி)
- கோடையில மழை போல.. வாடையிலும்.. (குக்கூ)
- ஆரவள்ளி.. சூரவள்ளி.. ஆடவந்த.. (வேலைன்னு வந்துட்டா வேலைக்காரன்)
- செவ்வந்தியே.. மதுவந்தியே (சீறு)
இப்படி.. நெஞ்சை உருக்கும் / துள்ள வைக்கும்/ வலியை கடத்தும் பாடல்களை தந்து தமது குரலால் நம்மோடு ஐக்கியமானவர் வைக்கம் விஜயலட்சுமி..
வைக்கம் விஜயலட்சுமி 1981-ம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்தார். பிறவியிலேயே பார்வைக் குறைபாடு இருந்தபோதும், இசையின் மீது அவருக்கு இருந்த அதீத ஆர்வம், அந்தத் தடையைத் தகர்த்தது. மிக இளம் வயதிலேயே கர்நாடக இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

வைக்கம் விஜயலட்சுமி, ஒரு சிறந்த பாடகி மட்டுமல்ல, அரிய வகை இசைக்கருவியான ‘காயத்ரி வீணை’ (Gayatri Veena) வாசிப்பதில் உலகப்புகழ் பெற்றவர். ஒரே ஒரு கம்பி கொண்ட இந்த இசைக் கருவியை அவர் வாசிக்கும் விதம் மிகவும் வியக்கத்தக்கது. பிரபல வயலின் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் தான் இந்த வீணைக்கு ‘காயத்ரி வீணை’ என்று பெயர் சூட்டினார்.
2013-ம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான ‘செல்லுலாய்டு’ (Celluloid) மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். அந்தப் படத்தில் அவர் பாடிய “காற்றே காற்றே…” பாடல், மலையாளத் திரையுலகில் அவருக்கு பெரும் புகழைப் பெற்றுத்தந்தது.
இதன் பின்னர் தமிழ்த் திரை உலகமும் வைக்கம் விஜயலட்சுமிக்கு தனித்துவமான பெருமரியாதை செலுத்தி வருகிறது.
விஜயலட்சுமியின் குரலில் ஒருவிதமான ‘ஆத்மார்த்தமான’ ஈர்ப்பு உண்டு. ஒரு பாடலின் உணர்வை, அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, சோகமாக இருந்தாலும் சரி, அதை அப்படியே உள்வாங்கி பாடுவதில் அவர் ஒரு தேர்ந்த கலைஞர். ‘என் ஜீவன்’ பாடலில் வெளிப்படும் ஆழமான காதல் உணர்வும், ‘கோடையில மழை போல’ பாடலில் இருக்கும் மென்மையும், மண்ணிலே ஈரமுண்டு பாடலின் வலியும் இதற்குச் சிறந்த உதாரணங்கள்.
செல்லுலாய்டு’ திரைப்படத்திற்காக கேரளா மாநில அரசின் விருதுகளைப் பெற்றார்.
தற்போது 2024-ம் ஆண்டு ‘ஏ.ஆர்.எம்’ (ARM) என்ற மலையாளப் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.
72-வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. இந்த விருது பட்டியல் தொடர்பான சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இப்போதாவது ‘வைக்கம் விஜயலட்சுமி’க்கு அங்கீகாரம் கொடுத்ததே மத்திய அரசு என கொண்டாடி மகிழ்கின்றனர் திரை ரசிகர்கள். நெடும் காலத்துக்கு தமது வசீகரமான குரலால் நம்மை மகிழ்விக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
