கலாஷேத்ரா ஆசிரியர்கள் 4 பேர் மீது சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளதாக மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளையில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன், நடன பயிற்சியாளர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்கு படித்து வரும் மாணவிகள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனையடுத்து கலாஷேத்ரா அறக்கட்டளையின், ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி மாணவிகளுக்கு ஏப்ரல் 6 வரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவிகள் போராட்டம் நடத்திவரும் கலாஷேத்ராவுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ். குமாரி இன்று (மார்ச் 31) நேரில் சென்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தேசிய மகளிர் ஆணையம் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் இன்று நான் நடத்திய விசாரணையில் 4 பேர் மீது சுமார் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.
2008ஆம் ஆண்டு முதல் இங்கு பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாக முன்னாள் மாணவிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விடுப்பில் இருந்த சில மாணவிகளிடமும் வீடியோ காலில் பேசினேன். அவர்களின் புகார்களை அறிக்கையாக வழங்க அறிவுறுத்தி உள்ளேன்.
விரைவில் கலாஷேத்ரா அறக்கட்டளை பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமிர்ப்பிக்கப்படும்.
கலாஷேத்ராவில் இன்று விசாரணை நடத்தியபோது இயக்குநரும், துணை இயக்குநரும் இல்லை. அவர்களிடம் நாளை விசாரணை நடத்தப்படும்.
கலாஷேத்ரா விவகாரத்தில் போராட்டத்தை கைவிட மாணவிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதேவேளையில் விடுமுறையை ரத்து செய்து, வரும் ஏப்ரல் 3 முதல் 12ம் தேதி வரை நடைபெற இருக்கும் தேர்வினை முன்னரே அறிவித்தபடி வழக்கம் போல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களிடம் ’பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவருக்கும் அரசு எப்போதும் துணை நிற்கும். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளேன்.
மேலும் நாளை கலாஷேத்ரா இயக்குநரிடம் விசாரணை நடத்தியபிறகு தேர்வு குறித்து தெரிவிப்பதாக அவர்களிடம் உறுதி அளித்துள்ளேன்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
