அண்ணாமலையைத் தோற்கடித்தவரை அமைச்சராக்கும் செந்தில்பாலாஜி?

Published On:

| By Aara

ARAVAKURICHI ILANGO

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘ஜாமீன் விடுதலை வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா?’ என்று கேட்டு வரும் 28 ஆம் தேதி வரை அவருக்கு கெடு விதித்துள்ளது. Senthilbalaji last attempt Stalin reaction

இந்நிலையில், செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது 28 ஆம் தேதி நீதிமன்றத்தின் அடுத்த கட்ட கெடுபிடியை எதிர்கொள்வாரா என்ற கேள்வி எழுந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ரீதியான ஆலோசனை நடத்தினார்.

செந்தில்பாலாஜி இப்போது நம்பிக்கையாகவே இருக்கிறார். அவர் தரப்பில் முதல்வரிடம், “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேட்டது சட்ட ரீதியான கேள்விகள் அல்ல. ஜாமீன் வழங்கியபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் அமைச்சராக பதவியேற்கக் கூடாது என்று எதுவும் இல்லை. எனவே, 28 ஆம் தேதி திங்கள் கிழமை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்வோம்.

ADVERTISEMENT

ஒருவேளை ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு நாம் உடனடியாக கோரிக்கை வைக்கலாம். இடைக்காலத் தடை கொடுக்க வாய்ப்புள்ளது’ என்று முதல்வரிடம் சொல்லப்பட்டிருக்கிறது.     

ஆனால், திங்கள் கிழமை வரை இந்த விவகாரத்தில் அடம்பிடித்து உச்ச நீதிமன்ற விசாரணையை மேலும் சிக்கலாக்க முதல்வர் விரும்பவில்லை . எனவே, செந்தில்பாலாஜியிடம் இருந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி கடிதம் கேட்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். Senthilbalaji last attempt Stalin reaction

ADVERTISEMENT

இந்நிலையில், செந்தில்பாலாஜி  அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டால், தனக்கு பதிலாக தான் சொல்லும் ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. செந்தில்பாலாஜி பரிந்துரைத்துள்ள நபர்களில் அரவக்குறிச்சி இளங்கோ பெயர் இருப்பதாக கரூர் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

அரவக்குறிச்சி இளங்கோ செந்தில்பாலாஜியின் தீவிர ஆதரவாளர். மதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்.  செந்தில்பாலாஜி சார்ந்த அதே கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இதையெல்லாம் விட கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை 24 ஆயிரத்து 816 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர்தான் இந்த இளங்கோ.

செந்தில்பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் அண்ணாமலையின் தூண்டுதல் இருக்கிறது என அரசியல் வட்டாரத்தில் பேச்சு உண்டு. இதை உறுதிப்படுத்துவதுபோல அப்போது அண்ணாமலையின் பிரஸ்மீட்டுகளும் அமைந்தன.

2023-இலேயே, ‘அமலாக்கத்துறை மகாராஷ்டிரால பிசியா இருக்காங்கண்ணா… அதை முடிச்சுட்டு இங்கதான் வர்றாங்க’ என்று செந்தில்பாலாஜி பற்றிய கேள்விக்கு அண்ணாமலை வெளிப்படையாகவே பதிலளித்தார்.

அண்ணாமலை அமலாக்கத்துறை இயக்குனரா என்று செந்தில்பாலாஜி இதற்கு ரியாக்ட் செய்தார்.

லேட்டஸ்டாக டாஸ்மாக் ரெய்டு விவகாரத்திலும் அண்ணாமலை சொன்ன ஆயிரம் கோடி ரூபாய் என்ற கணக்கையே அமலாக்கத் துறையும் சொல்கிறது என பதிலளித்திருந்தார் செந்தில்பாலாஜி.

இந்த நிலையில், அண்ணாமலையை தோற்கடித்த தனது ஆதரவாளரான அரவக்குறிச்சி இளங்கோவை தனக்கு பதிலாக செந்தில்பாலாஜி அமைச்சராக்குகிறார் என்ற தகவல் கரூர் முதல் சென்னை வரை திமுக வட்டாரங்களில் பரவி வருகிறது.

மேலும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வெள்ளக்கோவில் சுவாமிநாதனிடம் செந்தில்பாலாஜியின் இரு துறைகளில் ஒன்று கொடுக்கப்படலாம் எனவும் ஆலோசனை நடக்கிறது.

அதேநேரம் விழுப்புரம் மாவட்ட அமைச்சராக தற்போது இருக்கும் பொன்முடி, அப்பதவியில் இருந்து அகற்றப்படும் நிலையில், அம்மாவட்டத்துக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும்.

அந்த அடிப்படையில் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த செஞ்சி மஸ்தான், பொன்முடியின் சமுதாயத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலாளார்  ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு மாசெ சங்கராபுரம் உதயசூரியன், விழுப்புரம் மாசெ லட்சுமணன் ஆகியோர் பெயரும் பேசப்பட்டு வருகிறது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வளமான துறை எதுவும் இல்லாத நிலையில் பொன்முடியின் வனத்துறை தங்கத்துக்கு அளிக்கப்படலாம் என்று கோட்டை வட்டாரத்தில் கூறுகிறார்கள். அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி இருவரும் அமைச்சரவையில் இருந்து விடுபடப் போவது உறுதி. இவர்களுக்கு பதிலான புதிய அமைச்சர்கள் யார் என்பதில் ஆலோசனைகளும் விவாதங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share