VIDEO: விஜய் ‘சர்க்காரில்’ RSS ஊடுருவல்.. சிபிஎம் பகிரங்க குற்றச்சாட்டு!

Published On:

| By Mathi

RSS Infiltration in Vijay Govt: CPI(M)'s Open Accusation

முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அதிகாரிகள் ஊடுருவியிருப்பதாக தவெக அரசுக்கு ஆதரவு தரும் சிபிஎம் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.

சிபிஎம் கட்சியின் திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தன் இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்ட வீடியோ: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிர்வாக ஆணையரகத்தால் வட்டாட்சியர் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட ஐயாச்சாமி என்பவர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டவுடன் ஒரு குறிப்பிட்ட 4 தினங்களில் மட்டும்தான் மக்கள் வட்டாட்சியரை சந்திக்க வேண்டும்; பகல் 12 மணி முதல் பகல் 1 மணி வரைதான் மக்கள் சந்திக்க வேண்டும்; இதர நேரத்தில் வட்டாட்சியரை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சொல்லி வரக்கூடிய மக்களை அச்சுறுத்தி வந்தார்.

ADVERTISEMENT

இந்தச் சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய தலைவர்கள், வட்டாட்சியரிடம் சென்று சின்னராவுத்தன்பட்டியைச் சார்ந்த ஏழை அருந்ததிய மக்களுக்கு 2004-ல் கொடுக்கப்பட்ட அந்த பட்டா அடிப்படையில் அளந்து அவர்களுக்கும் பட்டா வழங்க வேண்டும் என்று அந்த கோரிக்கையை வைப்பதற்காக அவரிடம் சென்றபோது அரசியல் கட்சிகளைச் சார்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது என்று தோழர்களுடன் வாக்குவாதம் செய்திருக்கிறார்.

ஆகவே, அவருடைய இந்த நடவடிக்கையைக் கண்டித்து 20ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் குஜிலியம்பாறை வட்டத்துக்கு உட்பட்ட 3 வருவாய் ஆய்வாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இந்த வட்டத்தில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடைய பெயர், முகவரி மற்றும் விவரங்களை உடனடியாக சேகரித்து 18ஆம் தேதி மாலைக்குள் வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும்; அதற்கு ஒத்துழைக்காத கிராம உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு சுற்றறிக்கை பகிரங்கமாக பிறப்பித்திருந்தார்.

ADVERTISEMENT

குற்றப் பரம்பரை சட்டம் அமலில் இருந்த காலத்தில் கூட இத்தகைய நடவடிக்கை, வட்டாட்சியர்களால் செயல்படுத்தப்படவில்லை. அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்தில் கூட இது போன்ற கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டதில்லை.

ஆகவே இது கம்யூனிஸ்ட்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படக்கூடிய மிரட்டலாக எண்ணி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கு இவருடைய சுற்றறிக்கையை அனுப்பி வைத்தோம்.

ADVERTISEMENT

சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், முதலமைச்சருடைய அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு இத்தகைய நடவடிக்கை குறித்து முதலமைச்சருடைய அலுவலகத்திற்குத் தெரிவித்தார்கள். ஆகவே இந்த பிரச்சனை மீது உடனடியாக அந்த வட்டாட்சியர் பயிற்சி அவர்கள் நில நிர்வாக ஆணையரகத்திற்குத் திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறார். அவர் அனுப்பிய சுற்றறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவுக்கு இணங்க வாபஸ் பெறப்பட்டுள்ளது.

திண்டுக்கல் கல்லூரி முதல்வரின் மிரட்டல்

இது மட்டுமல்ல திண்டுக்கல்லில் இருக்கக்கூடிய ஒரு கூட்டுறவு கல்லூரி. இந்த கூட்டுறவு கல்லூரியில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள்; கடந்த ஆட்சியின் போது குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது; இப்போது கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகவே கட்டணத்தைக் குறைப்பதற்காக மாணவர்கள் போராடினால் அங்கு முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய ஒருவர், மாணவர்களை கடுமையாக அச்சுறுத்துகிறார்.

அது மட்டுமல்ல இந்த மாணவர்கள் இது போன்ற போராட்டங்களுக்குப் போனாலே, கல்லூரி நிர்வாகத்தால் வெளியே அனுப்பப்படுவீர்கள் என்று ஜனநாயக ரீதியான போராட்டத்தை ஒரு முதல்வர் பதவியில் இருக்கக்கூடியவர் தடுக்கக் கூடிய நிலைமை இருக்கிறது.

கல்லூரி கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கை

இப்போது கூட, கல்லூரிக் கல்வி இயக்கம் மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கல்லூரிகளில் இருக்கக்கூடியவர்கள், இடதுசாரி மாணவர் அமைப்பு நடத்தக்கூடிய போராட்டத்திற்கோ சிஜேபி நடத்தக்கூடிய போராட்டத்திற்கோ செல்லாமல் தடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே, ஜனநாயக ரீதியாக மாணவர்கள் தங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி குறித்து பேசுவதற்குகூட நம் நாட்டிலே தடை விதிக்கக்கூடிய நிலைமை அதிகார வர்க்கத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கை, அதிகாரிகள் மத்தியில் இருந்து தொடங்கி இருக்கிறது. ஆகவே, இந்த நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

நாடு முழுவதும் இன்றைக்கு மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட பிரச்சனையில், நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்கள் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியிலே மிகப் பெரும் எழுச்சியை உருவாக்கியிருக்கிறது.

இந்த இளைஞர்கள், மாணவர்களிடத்திலே ஏற்படும் எழுச்சி கல்வி வளாகங்களிலும் பிற இடங்களிலும் ஏற்படக் கூடாது என்று சொல்லி மறைமுகமாக சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த அரசு நிர்வாகத்துக்குள் ஊடுருவி இருப்பார்களோ என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்து இருக்கிறது.

இது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடிய அதிகாரிகளை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கண்டறிந்து களையெடுக்கவில்லை என்று சொன்னால், ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு எதிரான நிலையை தமிழ்நாடு அரசு எடுப்பதாகத்தான் மக்கள் உணர முடியும்.

ஆகவே மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்ற நிலைமையை உணர்ந்து அந்த மாற்றம் மக்களுக்கான மாற்றமாக ஜனநாயகத்துக்கான மாற்றமாக, ஊழலை எதிர்ப்பதற்கான மாற்றமாக, அந்த மாற்றம் இருக்க வேண்டும். அந்த மாற்றம் ஜனநாயகத்தை பறிக்கிற மாற்றமாக இருக்கக் கூடாது. இவ்வாறு சச்சிதானந்தன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

VIDEO

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share