பாஜக போல.. தவெகவும் துக்ளக் தர்பார் – திமுக காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக திமுக குற்றம் சாட்டி உள்ளது.

இது குறித்து திமுக இன்று (ஆகஸ்ட் 19) தனது எக்ஸ் பதிவில், “நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியில் உள்ள நபர்களின் பெயர், முகவரி, ஆகியவற்றை வருவாய் ஆய்வாளர்கள் சேகரித்து வட்டாட்சியரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இன்றைய தினம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்ட நிலையில் சுற்றறிக்கைகளை திரும்பப் பெறுவதாக த.வெ.க அரசு பின்வாங்கியுள்ளது.

ADVERTISEMENT

அப்படியெனில், சுற்றறிக்கைகளை வெளியிடும் அதிகாரத்தை வழங்கியவர் யார்? முதலமைச்சர் விஜய்க்கே தெரியாமல் இவையெல்லாம் நடக்கிறதா? அல்லது முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?

ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இணையாக தமிழ்நாட்டை ஆளும் த.வெ.க அரசும் இத்தகைய மாணவர் விரோத துக்ளக் தர்பார் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது..

ADVERTISEMENT

த.வெ.க அரசை ஆதரிக்கும் இடதுசாரிகள் இன்னமும் கண்டும் காணாத நிலையிலேயே இருக்கப் போகிறார்களா?” என கூறப்பட்டுள்ளது.

மேலும் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தனது எக்ஸ் பதிவில், “மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு? ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது.” என தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share