தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்று வருகிறது.
விவாதத்தின் தொடக்கமாக, நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் என். ஆனந்த் மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், தமிழக முதல்வர் விஜய், புரட்சி இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகம், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை வணங்கித் தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “மாண்புமிகு முதல்வரின் உழைப்பினால் தான் நாங்கள் அனைவரும் இன்று இந்த அவையில் அமர்ந்திருக்கிறோம். நாள்தோறும் சட்டமன்றத்திற்கு வருவது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தினமும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் ஒரு புதிய அறிவிப்பை முதல்வர் வெளியிட்டு வருகிறார். இன்று காலையில்கூட மூன்று முக்கிய அறிவிப்புகளை அவையில் அறிவித்துள்ளார்.
மக்கள் பணத்தில் எக்காரணம் கொண்டும் ஒரு ரூபாய் கூட தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதே எங்கள் முதல்வரின் முதன்மையான எதிர்பார்ப்பு. எனவே, தவெகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எந்தவொரு தவறும் செய்ய மாட்டோம் என்பதை முதல்வருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று பேரவையில் உறுதியளித்தார்.
