ரூ.30,000 வீடுகள் குறைப்பு… பெயர் மாற்றம்… : தவெக அரசுக்கு ஐ.பெரியசாமி கேள்வி!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஆகஸ்ட் 19), ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 

அப்போது பேசிய முன்னாள் அமைச்சரும் திமுக எம்எல்ஏவுமான ஐ.பெரியசாமி, “கடந்த ஐந்தாண்டு காலத்தில் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற திட்டம் கலைஞருடைய கனவு இல்ல திட்டம். 

ADVERTISEMENT

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் 2023 – 24, 2024 -25 காலகட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்ட வேண்டும் என்று முடிவு செய்து, முதல் ஆண்டிலேயே ஒரு லட்சம் வீடுகள் கட்ட 3,700 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. இதுவரைக்கும் எந்த காலத்திலும் இல்லாத வகையில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 

நேற்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பேசும்போது நீங்கள் பசுமை வீடு திட்டத்தை மாற்றிவிட்டீர்கள். அதுபோல நாங்கள் காலை உணவு திட்ட பெயரை மாற்றி விட்டோம் என்று கூறினார். 

ADVERTISEMENT

தமிழக அரசியல் வரலாற்றில் ஏழை எளிய மக்களுக்காக, 1971 ஆம் ஆண்டிலேயே முன்னாள் முதல்வர் கலைஞர் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் வீடு இல்லாதவர்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, குடிசையில் வாழக்கூடிய மக்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக தான் 2030க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று முன்னாள் முதல்வர் சூளுரைத்தார். முதலாண்டிலேயே ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது. இரண்டாவது ஆண்டில் 3700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 80 சதவிகித பணிகள் இப்போது முடிந்துள்ளது. 

ADVERTISEMENT

80 ஆயிரம் வீடுகள் இதுவரை கட்டப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 

மூன்றாவது ஆண்டில் இன்னும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்காக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேருக்கு வீடு கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதுதான் எதார்த்தமான உண்மை. 

இன்றைக்கு நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பெயரை மாற்றி விட்டீர்கள். பரவாயில்லை. 

வெற்றி வீடு கட்டும் திட்டம் என்று மாற்றி, அதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் என்று உயர்த்தி இருக்கிறீர்கள். 

அதேசமயம் ஆண்டிற்கு 70 ஆயிரம் வீடுகள் தான் கட்டப்படும் என்று எண்ணிக்கையை குறைத்து இருக்கிறீர்கள். நீங்கள் நிதி ஒதுக்கி இருப்பது 3500 கோடி தான். 

நீங்கள் ஒரு லட்சம் வீடுகள் அறிவித்திருந்தால் உங்களுக்கு பெருமையாக இருந்திருக்கும். நீங்கள் இப்போது அறிவித்திருப்பது படி 5 ஆண்டுகளில் 3.5 லட்சம் வீடுகள் தான் கட்ட முடியும். 

ஆனால் எப்படி 8 லட்சம் வீடு என்று சொல்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என். ஆனந்த், “ஆண்டுக்கு ஒரு லட்சம் வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் இலக்கு வைத்திருந்தீர்கள். ஆனால் நான் சென்று பார்க்கும் போது வீடுகள் இன்னும் முடிக்கப்படாமல், அடித்தளம் மட்டுமே போடப்பட்டுள்ளது. ஏன் என்று கேட்டால், ரூ.3.5 லட்சம் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மக்கள் இப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று முதல்வர் கவனத்துககு வந்தவுடன், அதை ரூ.5 லட்சமாக உயர்த்தினார்..

இலக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்பதல்ல, யாருக்காக இருந்தாலும் வீடு அவர்கள் முழுமையாக கட்டிக் கொள்ள வேண்டும். அதற்காக இன்று 70 ஆயிரம் வீடுகள் நாங்கள் ஒதுக்கி இருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து ஐ. பெரியசாமி, ”கொள்கை தலைவர் என சொல்கிறீர்கள், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை தமிழக அரசு வளர்ச்சி திட்டம் என மாற்றியது நியாயமா? மறுமலர்ச்சி திட்டத்தில் அண்ணாவின் பெயரை மாற்றியது வருத்தமாக உள்ளது” என்று குறிப்பிட்டார். தமிழகத்தில் ஜல்லி, எம்.சாண்ட் விலையும் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share