முதமைச்சர் மருத்துவ காப்பீடு தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் – விஜய்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19) 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் இலவச மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டொன்றுக்குத் தற்போது உள்ள ஐந்து லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்படும்.
திருநங்கையர்களுக்கான மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகள் கூடுதலாக சென்னை ஸ்டான்லி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாத நிலையில், தரமான மருத்துவ சேவைக்குத் தேவையான செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை உருவாக்கும் வகையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 351 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும்.
7 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்பட்டு 660 B.Sc. செவிலியர் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே உள்ள செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் கூடுதலாக 1,925 மாணாக்கர் இடங்கள், பிசியோதெரபி உள்ளிட்ட 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,778 மாணாக்கர் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் என மொத்தம் சுமார் 6,098 கூடுதல் மாணாக்கர் இடங்கள் உருவாக்கப்படும்.மேலும் 5 மருத்துவமனைகளில் மண்டல புற்றுநோய் மையங்கள் தொடங்கப்படும் என்றார்.
