சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 19) 110 விதியின் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் பேசுகையில், “ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக் கூடாது; அனைவருக்கும் சமமான மருத்துவ சேவை எளிதாகக் கிடைக்க வேண்டும் என்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது.
மருத்துவம் என்பது சலுகை அல்ல; அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை!
ஒரு மனிதனின் உயிரைக் காப்பாற்றுவதில் தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் மிகக் கொடியது. மருத்துவத்தைத் தேடி வரும் மக்களின் பாதையில் இருக்கும் தடைகளான வறுமை, தொலைவு, மருத்துவர் பற்றாக்குறை, மருந்துகளின் விலை, மருத்துவ விழிப்புணர்வு இல்லாமை, காத்திருப்பு, அவசரகால வசதியின்மை போன்றவற்றை படிப்படியாக அகற்றி; ஏழை – பணக்காரர், கிராமம் – நகரம் என்ற பாகுபாடு இன்றி ஒவ்வொருவருக்கும் தரமான மற்றும் எளிதான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டு நமது அரசு செயல்பட்டு வருகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் சில அறிவிப்புகளைச் சட்டமன்ற விதி 110-ன் கீழ் இன்று வெளியிட விரும்புகிறேன்: வடசென்னை மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில், பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.” என்றார்.
