எம்.எல்.ஏ.க்களுக்கு ’மகிழ்ச்சி’ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்!

Published On:

| By Mathi

CM Vijay announces Official Cars and Allowances for MLAs in Tamil Nadu

தமிழக சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அனைவருக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும்; மாதந்தோறும் ரூ.75,000 வாகன படி, ரூ25,000 உதவியாளர் படி வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19) 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 12.08.2026 அன்று காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பேசும்போது, பல எம்.எல்.ஏ.க்களிடம் சொந்தமாக வாகனம் இல்லை என்றும், தொகுதிப் பணிகளை ஆய்வு செய்யவும், பார்வையிடவும் கடினமாக உள்ளதாகவும், லஞ்சமில்லாத நேர்மையான ஆட்சி அமைய உறுப்பினர்களின் அடிப்படை தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

ADVERTISEMENT

எந்த ஒரு பொருளாதார பலமும் இல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் தொகுதி பணிகளை செய்ய சொந்த வாகனங்களோ அல்லது உதவியாளர்களையோ வைத்துக் கொள்ள முடிவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக கோரிக்கைகளும் வரப்பெற்றது.

முதல் தலைமுறை எம்.எல்.ஏ.க்கள் அதிகம்

மக்களாட்சியின் மிக முக்கிய தூண்களில் ஒன்றாக விளங்குபவர்கள் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள். தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் எளிய பின்னணியில் இருந்து பணபலமோ, அரசியல் பின்னணியோ இன்றி மக்களின் பேராதரவோடு முதன்முறையாக சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தலைமுறை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

தவெக வேட்பாளர்கள் உறுதிமொழி

29.3.2026 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் மக்கள் பணி செய்து ஊழலற்ற லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தை மேற்கொள்வது என அனைத்து வேட்பாளர்களும் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு ஏற்ப, அதே பாதையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

மக்களுக்கான நிர்வாகம் நேர்மையின் பாதையில் என்ற அடிப்படையில் லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. தங்களது தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறியவும், அரசு திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை கண்காணிக்கவும் தங்களது தொகுதி முழுவதும் தொடர் பயணங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ADVERTISEMENT

அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வாகனம்

பொருளாதார பலமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பணியாற்றும் மற்றும் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியைத் தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களது தொகுதிப் பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

வாகனம் ஏன்?

இந்த அறிவிப்பு, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பயணத் தேவைகளுக்காகப் பிறரை சார்ந்து இருப்பதைத் தடுத்து, அவர்கள் எவ்வித சமரசமும் இன்றி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் தங்களது தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு எளிதாகப் பயணம் செய்து, தொகுதி முழுவதும் உள்ள மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்கும்.

அதோடு மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்களின் பொருளாதார சுமையைக் குறைத்து, கடைக்கோடி மக்களுக்கு லஞ்ச லாவண்யமற்ற நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை அளிக்கவும் உதவும்.

எம்.எல்.ஏ.க்களின் உதவியாளர்கள்

மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியமெனக் கருதப்படுகிறது.

ரூ.75,000 வாகனப் படி

எனவே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தைப் பராமரிக்கும் விதமாக வாகனத்திற்கு ஓட்டுநர், எரிபொருள், வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்களுக்காக மாதந்தோறும் ரூபாய் 75,000 வாகனப்படியாகவும்,

ரூ.25,000 உதவியாளர் படி

அலுவலகப் பணிகளில் உதவி செய்ய ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூபாய் 25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும்.

இதற்காக உரியச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நன்றி

முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பு, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நன்றி தெரிவித்தார். சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது: சட்டமன்ற உறுப்பினர்களின் மக்கள் பணியை மேலும் சிறப்பாகவும், தடையின்றியும் மேற்கொள்ளும் வகையில் அரசு சார்பில் புதிய வாகனம் வழங்கப்படும் என அறிவித்துள்ள தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட ஓயாது உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்ற பேரவையின் தலைவர் என்ற முறையில் எனது நெஞ்சார்ந்த நன்றியினை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேட்பதற்கு முன்னரே கொடுப்பவன் தான் அரசன்; கேட்ட உடனே கொடுப்பவன் மக்கள் தலைவன். அதற்கு இலக்கணமாக திகழும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று அரசு சார்பில் புதிய வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை நீங்கள் ஒரு வாகனத்தை வழங்கி இருக்கிறீர்கள் என்று மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. மக்களின் நோக்கி செல்லும் எங்கள் பயணத்திற்கு வேகம் வழங்கி இருக்கின்றீர்கள் என்றுதான் நாங்கள் பார்க்கிறோம்.

சட்டமன்ற உறுப்பினர் என்பவர் சட்டமன்றத்தில் மட்டும் இருப்பவர் அல்ல. தொகுதியின் கடைசி வீடு வரை செல்ல வேண்டியவர். கடைசி மனிதனின் குரலையும் கேட்க வேண்டியவர். வெயிலாக இருந்தாலும், மழையாக இருந்தாலும், பகலாக இருந்தாலும், இரவாக இருந்தாலும் மக்களின் தேவைக்காக களத்தில் நிற்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அந்த மக்கள் பணியை இன்னும் வேகமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ளும் வகையில் அரசியல் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களின் களப்பணியை வேகப்படுத்தவும், அரசு திட்டங்களை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்க்கவும் இந்த அறிவிப்பு ஒரு பெரும் பாலமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

இந்த வாகன வசதியை வழங்கி இருப்பது மக்களுக்காக களத்தில் நிற்கும் மக்கள் பிரதிநிதிகளின் கரங்களை இந்த அரசு எப்போதும் வலுப்படுத்தும் என்பதற்கான மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அரசின் ஒரு முக்கியமான அடையாளமாகும். மக்களின் நாடி துடிப்பை அறிந்த தலைவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வரலாற்றின் பக்கங்களில் முத்திரையாக மாறும்.

தலைவர் என்பவர் வழிகாட்டுபவர் மட்டுமல்ல. தன் படையினரை கம்பீரமாக வழிநடத்துபவர் என்ற வரிகளுக்கு ஏற்ப மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சியின் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அது மக்களை அடைவது, மக்களின் வாழ்க்கையை உயர்த்துவது. அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் களப்பணிக்கு துணை நிற்கும் இந்த அறிவிப்பின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியுள்ளார்கள்.

அரசின் திட்டங்களை மக்களை தேடி செல்ல வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களை சந்திக்க தடை இருக்கக்கூடாது. இந்த எண்ணத்தோடு இன்று எங்களுக்கு வழங்கப்படும் இந்த வாகனம் நாளை ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு புதிய மக்கள் சந்திப்பை உருவாக்கட்டும். ஒரு புதிய குறையை வெளிக்கொண்டு வரட்டும். அதற்கு ஒரு புதிய தீர்வை உருவாக்கட்டும். மக்களுக்காக ஓடுவோம்; மக்களுக்காக நிற்போம்; மக்களின் நலனில் வெல்வோம் என்று கூறி, பால் விலையை உயர்த்தியும், அதேபோன்று மருத்துவத்துறையில் மிகப்பெரிய மறுமலர்ச்சியை நோக்கி வீறுநடை போட்டுக்கொண்டிருக்கிற அறிவிப்புகளுக்காகவும், மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றும் மக்கள் நல அரசாகவும், சிறந்த நிர்வாக திறனுடனும் இந்த மாநிலத்தை வழிநடத்திச் செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்புக்கு மீண்டும் ஒருமுறை இந்த மாமன்றத்தின் சார்பிலும் என் சார்பிலும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜேசிடி பிரபாகர் தெரிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share