சிபிஐ, சிபிஎம், காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டங்களில் பங்கேற்க மாணவர்களுக்கு தடை விதித்த கல்லூரி கல்வி ஆணையரின் சுற்றிக்கை கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழ்நாடு கல்லூரிக் கல்வி ஆணையர் கடந்த 17-ந் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், “இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் உரிய ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் விவரத்தை உடன் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன். இது மிக அவசரம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த சுற்றறிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கல்லூரி கல்வி ஆணையர் இன்று ஆகஸ்ட் 19-ந் தேதி அனுப்பிய அறிக்கையில், “கல்லூரி கல்வித் துறை- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள்- போராட்டம் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதை தடை செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள கோரிய கடிதம் திரும்பப் பெறுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
