தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடுவதற்கு தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியது ஏன்? என்பதை மக்களுக்கு முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தலைவர் சி. மிருதுளா, மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில், கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி கல்லூரிக் கல்வி இயக்குநரகம் சார்பில் 17.08.2026 அன்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணித்து அவர்களின் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு இந்திய மாணவர் சங்கம் (SFI) தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனம் தெரிவித்தது.

மாணவர்களின் அரசியல் உரிமையைப் பறிக்கும் இந்த சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி, “மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணித்து ஒடுக்குவதா? மாணவர்களின் அரசியல் உரிமையை பறிக்கத் துடிக்கும் TVK அரசுக்கு SFI கண்டனம்” என்ற முழக்கத்துடன், சென்னை மாவட்ட SFI சார்பில் 19.08.2026 அன்று கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
SFI-யின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, 17.08.2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை 19.08.2026 அன்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், “பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதம் உடன் திரும்பப் பெறப்படுகிறது” என கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வெளியிட்டுள்ள புதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்துவதும், ஜனநாயக ரீதியான போராட்டங்களில் பங்கேற்பதும் அவர்களின் ஜனநாயக உரிமையின் ஒரு பகுதியாகும். மாணவர்கள் எந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்பதை அரசு நிர்வாகம் கண்காணித்து, அதனைத் தடுப்பதற்காக கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைப்பது ஜனநாயக விரோதமான அணுகுமுறையாகும். மாணவர்கள் அரசின் கண்காணிப்புப் பொருட்கள் அல்ல; அவர்கள் ஜனநாயகத்தின் செயல்படும் குடிமக்கள்.
சட்டத்தை மீறிய செயல்கள் ஏதேனும் நடைபெற்றால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. ஆனால் மாணவர்கள் அரசியல் போராட்டங்களில் பங்கேற்பதையே குற்றமாகக் கருதி கண்காணிப்பதும், அவர்களின் அரசியல் செயல்பாடுகளைத் தடுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல் கருத்தைக் கொண்டிருப்பதற்காகவோ, அமைதியான போராட்டத்தில் பங்கேற்பதற்காகவோ மாணவர்கள் அச்சுறுத்தப்படக் கூடாது.
அதே நேரத்தில், இந்த சுற்றறிக்கை ஏன் வெளியிடப்பட்டது என்பதற்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு மக்களுக்கு அளிக்க வேண்டும். மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? எந்தச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? யாருடைய அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டது? இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் வெளிப்படையான விளக்கத்தை அளிக்க வேண்டும்.
ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு, SFI போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் அதைத் திரும்பப் பெறுவது மட்டும் போதுமானதல்ல. மாணவர்களின் அரசியல் உரிமையை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இருந்ததா என்பதையும், எதிர்காலத்தில் இதுபோன்ற உத்தரவுகள் மீண்டும் பிறப்பிக்கப்படாது என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாணவர்களின் அரசியல் பங்கேற்பை கண்காணிப்பதற்கு நிர்வாக இயந்திரத்தைப் பயன்படுத்தும் எந்த முயற்சியையும் SFI ஏற்றுக்கொள்ளாது.
SFI-யின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டிருப்பது, மாணவர்களின் ஜனநாயக உரிமைகளுக்காக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றி SFI-யின் போராட்டத்திற்கான வெற்றி மட்டுமல்ல; மாணவர்கள் தங்களது உரிமைகளுக்காக ஒன்றுபட்டு குரல் எழுப்பினால் அரசையும் நிர்வாகத்தையும் கேள்வி கேட்க முடியும் என்பதற்கான ஜனநாயக வெற்றியாகும்.
மாணவர்களின் அரசியல் உரிமையைப் பாதுகாப்போம்!
மாணவர்களின் குரலை ஒடுக்க விடமாட்டோம்!
ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்! இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
