தவெக தலைமையிலான கூட்டணிக்குள் அதிகாரப்பூர்வமாக வராததால் சிபிஐ, சிபிஎம் கட்சிகளை மிரட்டும் வகையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு செயல்படுகிறதா? என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தின் குஜிலியம்பாறை தாலுகாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களின் தரவுகளை சேகரிக்க உத்தரவிட்டு வட்டாட்சியர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வருகின்றன.
ஆதரவு அளித்த தோழர்களுக்கே குஜிலிமஸ்து செய்யப் போகிறதா ஆச்சரியக்குறி அரசு?
ஒருவேளை இன்னும் அதிகாரப் பூர்வமாக கூட்டணிக்குள் வரவில்லை என்பதால் கொடுக்கப்படும் மிரட்டலா இது?
குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்று உருட்டி இந்த ரசிக வெறி கும்பலுக்கு ஆதரவு கொடுத்த தோழர்களை பிரிட்டிஷ் காலத்து கைரேகை சட்ட பாணியில் கையாள முனைவது கடும் கண்டனத்திற்குரியது.
தேசிய கட்சி அந்தஸ்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய அளவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை ஏதோ தீவிரவாத இயக்கம் போல இந்த அரசு நடத்துவதற்கான விளக்கத்தை கண்டிப்பாக அளிக்க வேண்டும்.
இது கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது மட்டுமல்ல – ஒட்டுமொத்த ஜனநாயக அரசியலமைப்பு மீதான கொடுங்கோல் தாக்குதல்! இவ்வாறு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
