“ரயில்வே வேலைக்காகப் பல வருஷமா தவம் கிடக்கிறோம்… போன முறை மாதிரி லட்சக்கணக்குல வேகன்சி வரும்னு பார்த்தா, இப்போ என்ன இப்படி ஆகிப்போச்சு?” இந்திய ரயில்வேயில் சேரத் துடிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில்வே தேர்வு வாரியம் (RRB), 2026ஆம் ஆண்டிற்கான குரூப்-டி (Group D) பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், எதிர்பார்த்ததை விடக் குறைவான காலியிடங்களே அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்வர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காலியிடங்கள் எவ்வளவு?
மொத்தம் 22,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த காலங்களில் 1 லட்சம் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியான நிலையில், இம்முறை எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
எந்தெந்தப் பதவிகள்?
குரூப்-டி பிரிவில் பல்வேறு வகையான தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணிகள் (Technical & Non-Technical) உள்ளன.
- டிராக் மெயின்டெய்னர் (Track Maintainer): ரயில் பாதங்களைப் பராமரிக்கும் பணி.
- ஹெல்ப்பர் / அசிஸ்டெண்ட் (Helper / Assistant): எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மற்றும் சிக்னல் & டெலிகாம் (S&T) துறைகளில் உதவியாளர் பணி.
- பாய்ண்ட்ஸ்மேன் (Pointsman): ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் ரயில் தடம் மாற்றும் பணி.
கல்வித் தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி (SSLC): அடிப்படைத் தகுதி.
- ITI (தேசியத் தொழில் சான்றிதழ்): பெரும்பாலான தொழில்நுட்பப் பணிகளுக்கு 10ஆம் வகுப்புடன் ஐடிஐ (NCVT/SCVT) முடித்திருப்பது கட்டாயம். அல்லது அப்ரண்டிஸ் (NAC) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். (ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு உண்டு). போஸ்ட் பிரிஃபரன்ஸ் (Post Preference) – கவனம் தேவை!
விண்ணப்பிக்கும்போதே நீங்கள் எந்தப் பணிக்கு முன்னுரிமை அளிக்கிறீர்கள் (Post Preference) என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
உங்கள் உடல் தகுதி (Medical Standard) மற்றும் கல்வித் தகுதிக்கு ஏற்றவாறு பதவிகளை வரிசைப்படுத்துங்கள். ஒருமுறை தேர்வு செய்துவிட்டால், பின்னர் மாற்ற முடியாது. எனவே, கவனமாகத் தேர்வு செய்யவும்.
ரயில்வே தேர்வர்ளே… 22,000 வேகன்சிதானேனு சோர்வடையாதீங்க. நமக்குத் தேவை ஒரே ஒரு சீட் தான்! ரயில்வே குரூப்-டி தேர்வைப் பொறுத்தவரை சயின்ஸ் (Science) ரொம்ப முக்கியம். 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு அறிவியல் புத்தகங்களைக் கரைச்சுக் குடிங்க.
அதே மாதிரி, அப்ளை பண்ணும்போது எந்த மண்டலத்துக்கு (Zone) அப்ளை பண்றீங்கன்றது முக்கியம்.
சென்னை (Southern Railway) மண்டலத்துல போட்டி கொஞ்சம் அதிகமா இருக்கலாம். ஆனா சொந்த ஊர்ல வேலை பாக்குற சுகமே தனி தான். யோசிச்சு முடிவு பண்ணுங்க!
