மதிமுக வின் நிர்வாக குழு கூட்டம் இன்று ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும், வைகோவின் மகனும் கட்சியின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோவுக்கும் இடையிலே ஏற்பட்டிருக்கிற உரசல் தான் இந்த நிர்வாக குழு கூட்டத்திற்கு காரணம். Rebellion in MDMK
மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ வலியுறுத்தினார். ஆனால் அதற்கு வைகோ சம்மதிக்காத காரணத்தால் நேற்று ஏப்ரல் 19 தனது முதன்மை செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் துரை வைகோ.
இந்த நிலையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் நடக்கும் இந்த கலகத்தை திமுக உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
வருகிற ஜூலை மாதத்தோடு வைகோவின் ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைகிறது. மீண்டும் வைகோவுக்கு ராஜ்யசபா அளிப்பதா வேண்டாமா என்பதில் திமுக சில மாதங்களாகவே யோசித்து வருகிறது.

இப்படிப்பட்ட உட்கட்சி பிரச்சனை எழுந்திருக்கும் நிலையில், பலவீனமாக இருக்கும் மதிமுகவுக்கு மீண்டும் ராஜ்யசபா வழங்க வேண்டாம் என திமுகவுக்குள்ளேயே முதலமைச்சரிடம் சில வேண்டுகோள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
இதையெல்லாம் உணர்ந்துதான் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இந்த பிரச்சனை வெளிப்படையாகவே வெடித்த மதிமுக தொழிலாளர் முன்னணியின் பொதுக்குழு கூட்டத்தில் வைகோ பேசும்போது,
‘ராஜ்யசபா வேட்பாளர் பட்டியலில் என் பெயர் இல்லாமல் போனாலும் நமது கட்சி நிர்வாகிகள் திமுகவை தாக்கியோ கூட்டணியை விமர்சித்தோ எந்த பதிவுகளும் இடக்கூடாது என்பதை சத்திய பிரமாணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்’ என அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
ஒரு பக்கம் தனது மகன் துரை வைகோ, இன்னொரு பக்கம் 32 ஆண்டுகளாக தன்னோடு கட்சியில் விசுவாசமாக பயணிக்கும் மல்லை சத்யா இருவருக்கும் இடையில் பிரச்சனை வெடித்த நிலையில் தான் இத்தகைய பேச்சை அன்று பேசியிருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
எனவே இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து திமுகவும் ஆர்வமாக கவனித்துக் கொண்டிருக்கிறது! rebellion in MDMK