டிஜிட்டல் திண்ணை: நானா, சத்யாவா? துரை வைகோ ஆவேசம்! வைகோ டென்ஷன்… அடுத்து என்ன?

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் ராஜினாமா அறிக்கை இன்பாக்சில் வந்து விழுந்தது. durai vaiko action vaiko tension

அதை பொறுமையாக படித்து முடித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. 

ADVERTISEMENT

“மதிமுக  முதன்மைச் செயலாளர் துரை வைகோ, இன்று (ஏப்ரல் 19) தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மேலும், அவர் தனது அறிக்கையின் கடைசி பத்தியில் இந்த முடிவுக்குக்  காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

அதாவது,  “வைகோவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் தொடர்ந்து பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் செய்திகளை கொடுத்து கட்சியை சிதைக்கின்ற வேலையை மறைமுகமாக செய்து வருகிறார் ஒருவர்.

ADVERTISEMENT

நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, இப்படி கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் ‘முதன்மை செயலாளர் “என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால், அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன்” என்று அறிவித்துள்ளார் துரை வைகோ.

ADVERTISEMENT

அவர் குறிப்பிடும் அந்த ஒருவர், மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் 32 ஆண்டுகளாக வைகோவுடன் தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருப்பவருமான மல்லை சத்யாதான்  என்பது மதிமுகவில் அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான்.

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி மதிமுகவின்  தொழிற்சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தபோது அதில் பேசிய துரை வைகோ துணை பொதுச் செயலாளார் மல்லை சத்யாவின் பெயரைக் குறிப்பிட்டு சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.

அப்போது மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள்,  ‘அவர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இப்படி பழிபோடுகிறீர்களா?’  என துரை வைகோவுக்கு எதிராக பேசினார்கள். அதனால் டென்ஷனான துரை வைகோ,   ‘எனக்கு பதவியும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

துரை வைகோ வெளியேறிய பிறகு அந்த கூட்டத்தில் பேசிய வைகோ, துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவைப் புகழ்ந்து பேசினார்.  இந்தத் தகவலும் திருச்சி சென்ற துரை வைகோவுக்கு கூட்டத்தில் இருந்த சில தலைமைக் கழக நிர்வாகிகளாலேயே தெரிவிக்கப்பட்டது.  

இதன் பிறகுதான் ஏப்ரல் 13-ஆம் தேதி திருச்சி மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூட்டம் கூட்டப்பட்டு மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்குப் பின்னால் துரை வைகோ இருப்பதை அறிந்து டென்ஷனானார் வைகோ. மறுநாள் ஏப்ரல் 14 ஆம் தேதி, ‘ மறுமலர்ச்சி திமுக நிர்வாகக் குழு கூட்டம் ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாவட்டக் கழகங்கள் கூட்டத்தைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றிய செய்திகள் ஏடுகளில் வந்துள்ளன.

கழகத்தின் கட்டுப்பாட்டிற்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது’  என்று அறிவிப்பு  வெளியிட்டார் வைகோ.

அதே நாளில் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி மல்லை சத்யா தனது சமூக தளப் பக்கத்தில் தன்னை மையமாக வைத்து வெளியாகும் செய்திகளுக்கு விளக்கமளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். 93 இல் இருந்து வைகோவுடன் தான் எப்படி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை விளக்கிய மல்லை சத்யா,  

“நம்பிக் கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் அரசியல் உலகம் என்னை சொல்லலாம். ஆனால், நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒரு போதும் வரக்கூடாது என்ற உறுதியோடு மதிமுகவில் பயணிக்கின்றேன்.

என்னை நம் அன்புத் தலைவர் வைகோ அவர்களிடம் இருந்து பிரிக்கும் ஆற்றல் மரணத்திற்கு மட்டும்தான் உண்டு. அன்பின் தோழமைகளே உணர்ச்சி வசப்பட்டு நீங்கள் பதிவிடுவது எவ்வளவு காயத்தை வலியை நம்பகத்தன்மையை சோதிக்கிறது என்பதை உணர்ந்தவன் என்ற முறையில் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

என் பொருட்டு நம் தலைவர் வைகோ ஒரு சிறிய மனவருத்தம் கூட வராமல் பார்த்துக் கொள்வது நம் கடமை” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் திருச்சி சென்று சென்னை திரும்பிய துரை வைகோ, அண்ணா நகரில் இருக்கும் வீட்டுக்குச் செல்லாமல் ஓ.எம்.ஆர். பகுதியில் சிறுசேரியில் இருக்கும் தனது புதிய வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து தனக்கு நெருக்கமான சில நிர்வாகிகளுடன் போனில் ஆலோசனை நடத்திய துரை வைகோ, நேற்று இரவு அமர்ந்து இந்த 3 பக்க அறிக்கையை ரெடி செய்திருக்கிறார்.

அதாவது, “நான் கட்சியில் முதன்மைச் செயலாளர் பதவியில் இருக்க வேண்டுமானால், மல்லை சத்யா துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருக்கக் கூடாது’ என்பதுதான் துரை வைகோவின்  நிபந்தனை.

இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள வீட்டில் நாளைய நிர்வாகக் குழு கூட்டம் பற்றி அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜா, பொருளாளர் செந்திலதிபன் ஆகியோரோடு வைகோ ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில்தான், துரை வைகோவின் இந்த அறிக்கை வெளியானது.

துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையில் என்ன பிரச்சினை?  மதிமுக வட்டாரங்களில் விசாரித்தோம்.

“துரை வைகோ கட்சிக்குள் 2018, 2019-இல்தான் மெல்ல மெல்ல வருகிறார். வைகோவுக்கு உடல் நலம் குன்றியதால் அவர் கலந்துகொள்ள வேண்டிய நல்லது கெட்டதுகளுக்கு துரை வைகோ தனது தந்தை சார்பாக சென்று வந்தார். இது சிலரிடம் சலசலப்பையும்  சிலரிடம் வரவேற்பையும் ஏற்படுத்தியது.  சமூக தளங்களில் துரை வைகோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மதிமுகவினரே எழுதி வந்தனர்.  

2020 ஏப்ரல் 14 அன்று தன் அண்ணா நகர் வீட்டில் அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது உருவப் படத்துக்கு வைகோ மரியாதை செலுத்தினார்.  அப்போது மல்லை சத்யாவோடு, அப்போது எந்த பொறுப்பிலும் இல்லாத துரை வைகோவை தன் அருகே நிறுத்தி, அந்த புகைப்படத்தை கட்சி சார்பாக வெளியிட்டார். இதை அப்போதே மின்னம்பலம் ஏப்ரல் 14 2020 இல் வெளியிட்டது.

துரை வைகோவுக்கு கட்சிக்குள் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயல்பாகவே மற்ற சீனியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. வாரிசு அரசியல் என்ற காரணத்துக்காகவே திமுகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி கண்ட வைகோவின் கட்சியிலும் வாரிசா  என்ற கேள்வி சீனியர்கள் மத்தியில் எழுந்தது.

ஆனால், வைகோவுக்காக பலரும் அதை வெளிப்படுத்தவில்லை. ஆனால், திருப்பூர் துரைசாமி போன்றவர்கள், ‘இதற்கு நாம் கட்சியை திமுகவிலேயே இணைத்துவிடலாம்’ என்று பகிரங்கமாக பேசினார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் மல்லை சத்யா  மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக மரகதம் போட்டியிட்டார், தேர்தல் முடிவில் வெறும் 35,70 வாக்குகள் வித்தியாசத்தில்  மல்லை சத்யா தோற்றார்.

இதன் பின்னணியில் துரை வைகோ இருந்ததாக அப்போது மதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டது. மல்லை சத்யாவுக்கு தேர்தல் நிதி கொடுக்க முன் வந்தவர்கள் துரை வைகோவின் முயற்சியால் தடுக்கப்பட்டனர் என்றும், மல்லை சத்யா போதிய நிதி இல்லாமல் போராடினார் என்று, அதன் காரணமாகவே  அவர் வெற்றி வாய்ப்பை இழ்ந்தார் என்றும் தேர்தல் முடிவுக்குப் பின் மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கோபமாக பகிர்ந்துகொண்டார்கள்.  அதன்பின் மல்லை சத்யாவுக்கும் துரை வைகோவுக்குமான இடைவெளி அதிகமாகத் தொடங்கியது.

அதன் பின் கடந்த 4 வருடங்களில் தாயகத்தில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் கூட மல்லை சத்யாவிடம் துரை வைகோ முகம் கொடுத்து பேசுவதில்லை.  அதன் உச்சகட்டமாகத்தான் ஏப்ரல் 12 நிகழ்வில்  துரை வைகோ பேசியதும், ஏப்ரல் 19 ஆம் தேதி அவர் விடுத்திருக்கும் ராஜினாமா அறிக்கையும்” என்கிறார்கள்.

மல்லை சத்யாவுக்கும், துரை வைகோவுக்கும்  இடையே சமாதானம் செய்ய வைகோ முயற்சித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள் வைகோவுக்கு நெருக்கமானவர்கள்.

“ மல்லை சத்யா  கடந்த 32 ஆண்டுகளாக வைகோவுடன் பயணிப்பவர். மேலும், பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். வைகோ எடுத்த எடுப்பில் மல்லை சத்யாவை விட்டுக் கொடுத்துவிட மாட்டார். 

வைகோவின் உதவியாளராக இப்போது இருக்கும் ஜெயபிரசாந்த், பரமக்குடி கலவரத்தில் தனது  உற்றார் பெற்றோரை எல்லாம் இழந்து சிறுவனாக தத்தளித்தார்.  அப்போது வைகோ அவரை தன்னுடனே அழைத்துச் சென்று தனக்கு உதவியாளராக வைத்துக் கொண்டார். 

அந்த ஜெயபிரசாந்த்  பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இப்படி பட்டியல் சமுதாயத்தினருக்கு தோளோடு தோள் நிற்கும் வைகோ தன்னுடைய தளபதியான மல்லை சத்யாவை தனது மகனுக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்’ என்கிறார்கள்.

இந்நிலையில், உச்சகட்ட எதிர்பார்ப்போடு நாளை ஏப்ரல் 20  ஆம் தேதி தாயகத்தில் கூடுகிறது மதிமுகவின் நிர்வாகக் குழு கூட்டம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share