தவெக ஆட்சியை பற்றிய செய்திகளை படிங்க.. நடவடிக்கை எடுங்க.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் ‘அட்வைஸ்’

Published On:

| By Mathi

MK Stalin CM Vijay

தவெக ஆட்சியைப் பற்றிய செய்திகளைப் படித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வர் விஜய்க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் முன்னாள் அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆற்காடு நா.வீராசாமியின் பேரன், மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி – ஜெயந்தி கலாநிதி தம்பதியரின் மகன் வி.கே. சித்தார்த் மற்றும் ராஜா சுப்ரமண்யன் சுந்தர் – வித்யா ஸ்ரீ சுந்தர் தம்பதியரின் மகள் எஸ்.ஆஷ்ரயா காயத்ரி ஆகியோரது திருமணத்தை மு.க.ஸ்டாலின் இன்று ஜூன் 17-ந் தேதி நடத்தி வைத்தார்.

ADVERTISEMENT

மிசா கால கொடுமைகள்

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மிசா காலத்தில் நானெல்லாம் சிறையில் நிம்மதியாக, தெம்போடு, திராணியோடு இருந்தேன் என்று சொன்னால் அதற்கு ஆற்காட்டார்தான் (ஆற்காடு நா.வீராசாமி) காரணமாக இருந்தார். இன்றைக்கும் என்னுடைய கையிலே ’மிசா’ தழும்பு இருக்கிறது. ஆற்காட்டாருக்கு இன்றைக்கும் ஒரு காது கேட்க முடியாத நிலை இருக்கிறது. அதனால்தான் கலைஞர், ஆற்காட்டாரை “வைரம் பாய்ந்த ஒரு தொண்டன்” என்பார்.

முன்னுதாரணமான திமுக

ஒரு மாநிலக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கிக் கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

சிதறிப் போன கட்சிகள்

ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்குப் பல கட்சிகள் காணாமல் போய்விடுகிறது. ஆனால், 75 ஆண்டுகாலம் கொண்ட கொள்கைக்காக, லட்சியத்திற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய கட்சி இது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அந்தத் திராவிட முன்னேற்றக் கழகத்திலேதான் இன்றைக்கு எத்தனையோ பேர் வந்து இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் விஜய்க்கு அட்வைஸ்

இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி பற்றிச் சொல்ல வேண்டுமென்று சொன்னால் ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சோசியல் மீடியா இன்றைக்கு எந்த அளவுக்குப் பரவிக்கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

ADVERTISEMENT

இன்றைக்கு சோசியல் மீடியாக்களில் பார்க்கிறபோது

  • கோட்டுப் போட்டுக்கொண்டு வந்தாரு
  • கையில் டிபன் எடுத்து வந்தாரு
  • வாட்ச் கட்டி வந்தாரு
  • செஸ் விளையாடினாரு..
  • இன்றைக்கு கோட்டு போடவில்லை
  • பட்டுச் சட்டை வேட்டி உடுத்தி வந்தாரு

இதெல்லாம் இன்றைக்குச் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. நாட்டில் எத்தனையோ அக்கிரமங்கள் நடக்கின்றன.

இன்றைய முதல்வருக்கு (முதல்வர் விஜய்) நான் வேண்டுகோள் வைப்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியைப் பற்றி வரக்கூடிய செய்திகளைப் படியுங்கள். அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுங்கள் என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share