தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்த நிலையில் அக்கட்சியில் உட்கட்சி பூசல் பூதாகரமானது. அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் ஏற்கனவே 4 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்துள்ளனர். இந்த 4 பேர் மீதும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையைச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மேற்கொண்டுள்ளார். இதற்காக, அந்த 4 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிமுகவிற்கு மேலும் ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாகச் சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளது.
இதற்கிடையே, சி.விஜயபாஸ்கரை கடுமையாக விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “இரட்டை இலைச் சின்னம் மூலமாகப் பெற்ற வெற்றியை ராஜினாமா செய்துவிட்டீர்கள். அப்படி என்றால் நியாயப்படி, கட்சியில் சேருவதற்கு முன்பு என்ன நிலையில் இருந்தீர்களோ, அதே நிலைக்குத் தானே நீங்கள் போக வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
“விஜயபாஸ்கர் இந்தக் கட்சிக்கு வருவதற்கு முன்பாக தனக்கும் தன் குடும்பத்திற்கும் இருந்த சொத்துகளையும், தற்போது அவர் வைத்திருக்கும் சொத்துகள் மற்றும் முதலீடுகள் அனைத்தையும் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு வேறு கட்சிக்குப் போவாரா என்பதுதான் தொண்டர்களின் எதிர்பார்ப்பாகவும் கேள்வியாகவும் உள்ளது.
கட்சியில் வாங்கிய பதவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டீர்கள். இரட்டை இலை மூலமாக வந்த வெற்றியை ராஜினாமா செய்துவிட்டீர்கள். அப்படியென்றால், நியாயப்படி கட்சியில் சேர்வதற்கு முன்பு இருந்த நிலைக்குத் தானே நீங்கள் செல்ல வேண்டும்? அதிமுகவில் இருந்து பதவிகளை அனுபவிப்பீர்கள், சொத்துகளைச் சேர்ப்பீர்கள், செல்வாக்கை வளர்த்துக் கொள்வீர்கள். எல்லாவற்றையும் சேர்த்த பின்னர், தலைமையை விமர்சித்து, கட்சியை விமர்சித்து, தொண்டர்களையும் மக்களையும் கைவிட்டு விடுவீர்களா?
உங்களது சுயநலத்திற்காக, உங்கள் முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, உங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நீங்கள் கட்சியைக் காட்டிக் கொடுப்பீர்கள் என்றால், தொண்டர்கள் எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்? எங்களின் வயிறு எரிகிறது அல்லவா?
அம்மா வளர்த்த கட்சி, எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி! ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடியார் என்ற சாமானியரின் தலைமை சரியில்லை என்று நீங்கள் பதிவு செய்கிறீர்களே… கடந்த 10 ஆண்டுகளாக அவரது காதைக் கடித்து, காலைப் பிடித்து எத்தனை விஷயங்களைச் செய்தீர்கள்? இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா? இப்படியே நீங்கள் செய்து கொண்டே இருப்பீர்கள், நாங்கள் வாயை மூடிக்கொண்டு மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? அதிமுகவின் உண்மைத் தொண்டர்கள் என்ன ஏமாளிகளா? இப்போது விஜயபாஸ்கருக்கு என்ன கேடு வந்தது?”
இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் மிகவும் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
