”இந்தியா கூட்டணி” (INDIA alliance) கட்சிகள் ஒருவரை ஒருவர் காலை வாரிவிட்டுக் கொண்டிருக்கும் போக்கை நிறுத்த வேண்டும்; கூட்டணிக்குள் இருந்து கொண்டே காங்கிரஸை விமர்சிக்கும் போக்கை நிறுத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி 15 நிமிடம் பேசினார்.

ராகுல் காந்தி பேசுகையில்,
- நாம் ஒருவருக்கு ஒருவர் காலை வாரிவிடுவதை நிறுத்த வேண்டும்.
- நாட்டையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க பாஜகவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும்.
- வாக்கு திருட்டு (Vote Chori) பிரச்சனையை கையில் எடுத்த போது சில கூட்டணி கட்சிகள் ஆதரவு தரவில்லை
- இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டே காங்கிரஸை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்
- பாஜகவை எளிதாக தோற்கடித்துவிட முடியாது.
- எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் போக்கை நிறுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்
ராகுல் (RAHUL GANDHI) பேச்சு- சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸ் அதிர்ச்சி
”இந்தியா கூட்டணி” கூட்டத்துக்கு அழைத்துவிட்டு காங்கிரஸை அதிகமாக விமர்சிக்கக் கூடிய சிபிஎம், திரிணாமுல் காங்கிரஸின் பெயரை சொல்லாமல் ராகுல் காந்தி இப்படி விமர்சித்திருப்பதற்கு அக்கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
காங்கிரஸை விளாசிய திருமாவளவன்
முன்னதாக, இந்த கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். அப்போது, “அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்” என திருமாவளவன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
